மீண்டும் செல்ல மறவாதீர்கள்!
1 “எவ்வளவு நல்லா கேட்டாங்க! இவங்கள கட்டாயம் மறுபடியும் போய் பார்க்கணும்.” இப்படி எப்போதாவது சொல்லிவிட்டு, பின்பு அந்த நபரை சந்திக்க மறந்திருக்கிறீர்களா? அப்படியானால், மறக்காமல் அவரை சந்திப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதை எழுதி வைத்துக்கொள்வதே.
2 எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்: அக்கறை காட்டிய நபரோடு நீங்கள் அனுபவித்த உரையாடல் இன்னும் உங்களுடைய மனதில் பசுமையாக இருக்கும்போதே, அந்த சந்திப்புடன் சம்பந்தப்பட்ட எல்லா தகவல்களையும் சிரமம் பார்க்காமல் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அந்த நபருடைய பெயரையும் அவரை எப்படி அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள். அவருடைய விலாசத்தையும் எழுதிக்கொள்ளுங்கள், அதை ஊகித்துப் பார்க்க முயலாதீர்கள்—நீங்கள் எழுதியது சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பேசிய விஷயத்தையும், வாசித்த வசனங்களையும், கொடுத்த பிரசுரங்களையும் குறித்துக்கொள்ளுங்கள்.
3 ஏதாவது ஒரு கேள்வியை அவர்களிடம் கேட்டுவிட்டு வந்திருந்தால், அதையும் எழுதிக்கொள்ளுங்கள். அந்த நபரைப் பற்றி, அவருடைய குடும்பத்தைப் பற்றி, அவருடைய மதத்தைப் பற்றி ஏதாவது தெரிந்துகொண்டீர்களா? அப்படியானால், அதையும் குறித்துக்கொள்ளுங்கள். பிறகு, அடுத்த முறை நீங்கள் சந்திக்கும்போது, இதை அவரிடம் குறிப்பிடுவது, அந்த நபர்மீது நீங்கள் வைத்திருக்கும் அக்கறையை காண்பிக்கும். கடைசியாக, அவரை முதலில் சந்தித்தபோது நீங்கள் வருவதாக சொன்ன நாளையும் கிழமையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இவை எல்லாவற்றையும் சரியாக எழுதிக்கொண்டால், உங்களுக்கு தெளிவான நினைப்பூட்டுதல் இருக்கும், உங்களுடைய வாக்கை மறந்துவிடுவதற்கு அதிக சாத்தியமே இருக்காது.—1 தீ. 1:12.
4 பதிவுசெய்ய வேண்டியதெல்லாவற்றையும் எழுதியபின், அதை உங்களுடைய வெளி ஊழியத்திற்கான பையில், பைபிள், நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், மற்ற பிரசுரங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் எப்பொழுது வேண்டுமானாலும் உடனடியாக எடுத்துப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். பூட்டப்பட்ட வீடுகளைப் பற்றிய பதிவை உங்களுடைய மறுசந்திப்புகளை குறித்துக்கொள்ளும் பதிவுச் சீட்டில் எழுதாமல் தனியாக எழுதிக்கொள்வது மிகவும் நல்லது. மறுசந்திப்பு செய்வதற்கு கவனமாக நீங்கள் எல்லாவற்றையும் எழுதி வைக்க முயற்சி செய்வதோடு, மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது—அதுதான் நீங்கள் அந்த நபரை கட்டாயம் சென்று சந்திப்பது!
5 அந்த நபரைப் பற்றி சிந்தியுங்கள்: ஊழியத்திற்காக தயாரிக்கையில், நீங்கள் எழுதி வைத்த குறிப்புகளை சற்று நோட்டமிடுங்கள். ஒவ்வொரு நபரைப் பற்றியும், அவரைத் திரும்ப சந்திக்கும்போது எப்படி பேசினால் நன்றாக இருக்கும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். ஒரு பைபிள் படிப்பாக மாற்றுவதற்கு அந்த நபருடைய அக்கறையை தூண்டுவது எப்படி என்பதையும் யோசித்துப் பாருங்கள். இப்படி திட்டமிட்டு செய்தால், நற்செய்தியை பிரசங்கிக்கும் ஓர் ஊழியராக நீங்கள் ஊழியத்தில் நன்கு பலன் தரலாம். இதனால் உங்களுடைய சந்தோஷமும் பெருகும்.—நீதி. 21:5அ.
6 ஆகவே, அடுத்த முறை அக்கறையுள்ள நபரை சந்திக்கும்போது, அவரை ஞாபகத்தில் வைத்துக்கொள்வதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை என சொல்லாதீர்கள். மாறாக, அதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள், எழுதிய குறிப்புகளை எடுத்துப் பாருங்கள், அந்த நபரைப் பற்றியே அடிக்கடி சிந்தியுங்கள், மிக முக்கியமாக அவரை கட்டாயம் சென்று பாருங்கள்!—பிலி 1:9- 11.