‘வார்த்தையை அவசரத்தோடு பிரசங்கியுங்கள்’
1 “அவசரம்” என்று குறிப்பிடப்பட்ட ஒரு கடிதம் உங்கள் கையில் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? “அவசரம்” என்பதற்கு “உடனடியான கவனத்தைத் தேவைப்படுத்தும் ஒன்று” என அர்த்தம். ஆகவே கிறிஸ்தவர்களிடம், ‘வார்த்தையை அவசரத்தோடு பிரசங்கியுங்கள்’ என பவுல் சொன்னது சரிதானே. (2 தீ. 4:2, NW) இந்த வேலைக்கு உடனடியான கவனத்தை செலுத்துவதன் மூலம் நீங்கள் இதற்கு கீழ்ப்படிகிறீர்களா?
2 கிறிஸ்தவர்களாக தங்கள் வேலையில் சில சகோதரர்கள் ‘அசதியாயிருக்கிறார்கள்’ என்ற செய்தியை பவுல் பெற்றிருக்கலாம். (ரோ. 12:11) இவ்வாறு அசதியாய் இருந்ததனால் அவர்களுடைய உழைப்பிற்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போனது. மற்றவர்களுக்கு உதவுவதனால் கிடைக்கும் சந்தோஷமும் குறைந்துபோனது.
3 இயேசு ஊழியத்தை எவ்வாறு கருதினார்: இயேசு தம் ஊழியத்தை எவ்வளவு சந்தோஷத்துடன் நிறைவேற்றினார்! “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” என்றல்லவா அவர் கூறினார்! இயேசுவின் முன்மாதிரி அவருடைய சீஷர்களைத் தூண்டியது. மேலுமாக, “வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று” சொல்லி அவர் தம்முடைய சீஷர்களை உற்சாகப்படுத்தினார். (யோவா. 4:34, 35) “அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்” என அவர் தம் சீஷர்களிடம் கூறியபோது அவருடைய ஊழியகாலம் முழுவதிலும் அவர் காண்பித்த அவசரத்தன்மை தெளிவாக தெரிகிறது. (மத். 9:38) பிரசங்கிக்க வேண்டியதே தம்முடைய நியமிப்பு என்பதை இயேசு நன்றாக அறிந்திருந்தார். அதைச் செய்வதிலிருந்து எதுவும் தம்மை தடுத்து நிறுத்தக்கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.
4 நாம் எவ்வாறு கருதுகிறோம்? முன்பு எப்போதும் இருந்ததைவிட இன்று பிரசங்க வேலை அவசரமாக முன்னேற வேண்டிய தேவை உள்ளது. உலகத்தின் பல்வேறு பாகங்களில் நிலங்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. முழுமையான சாட்சி கொடுக்கப்பட்டுவிட்டது என்று நினைத்த இடங்களில்கூட ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் முழுக்காட்டுதல் பெறுகின்றனர். இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வேகமாக நெருங்கி வருவதால், “கர்த்தருடைய கிரியையிலே” செய்வதற்கு ஏராளம் உள்ளது. (1 கொ. 15:58) ராஜ்ய செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதில் மற்ற எந்தச் சமயத்தையும்விட இப்போது நம்மை நாமே அதிகமாக ஈடுபடுத்த வேண்டியது அவசியம்.
5 நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் நாம் முழுமையாக மூழ்கிவிடுவோமாக. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் மட்டுமல்ல நம் பிராந்தியத்தில் எங்கெல்லாம் ஆட்களைப் பார்க்கிறோமோ அங்கெல்லாம் பிரசங்கிக்க தயாராய் இருப்போமாக. பிரசங்க வேலையில் நாம் கூடுமானவரை முழுமையாக பங்குகொள்ளும்போது நம் வாழ்க்கையில் ராஜ்யத்திற்கே முதலிடம் கொடுக்கிறோம் என்பதைத் தெளிவாக காண்பிப்போம். (மத். 6:33) வார்த்தையை அவசரத்தோடு பிரசங்கிப்பதில் நாம் உண்மையுடன் இருந்தால் எல்லையில்லா மகிழ்ச்சியும் அடைவோம்.