நீங்கள் குடிமாறிப் போகிறீர்களா?
குடிமாறிப் போகிறீர்களா என்ற இந்த கேள்விக்கான பதில் ஆம் என்றிருந்தால், இதோ உங்களுக்கு சில டிப்ஸ். நீங்களும் மற்றவர்களும் முன்னதாகவே செய்ய அநேக காரியங்கள் இருக்கின்றன. கீழே சித்தரிக்கப்பட்டிருக்கும் சில அடிப்படை குறிப்புகளை பின்பற்றினால், உங்களுடைய புதிய சபையில் நீங்கள் சீக்கிரத்திலேயே செட்டிலாகிவிடலாம்.
(1) நீங்கள் எந்த இடத்திற்கு மாறிச்செல்லவிருக்கிறீர்கள் என்று தெரிந்தவுடன், உங்கள் சபைக்கு அதை தெரியப்படுத்துங்கள். அப்பொழுதுதான் தற்போதுள்ள சபையின் செயலர் உங்களுடைய புதிய சபையின் விலாசத்தை உங்களுக்கு பெற்றுத்தர முடியும். அந்தப் புதிய இடத்தில் கால் பதித்தவுடன் முதல் வேலையாக அந்த விலாசத்தின் உதவியுடன் ராஜ்ய மன்றத்தைத் தேடி கண்டுபிடியுங்கள், அதோடு சபை கூட்டங்களின் நேரத்தையும் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். ஒன்றிற்கும் மேற்பட்ட சபைகள் அந்த ராஜ்ய மன்றத்தை பயன்படுத்தினால், நீங்கள் எந்தச் சபையின் பிராந்தியத்தில் வசிக்கிறீர்கள் என்பதை மூப்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். கூட்டங்களுக்கு ஆஜராவதிலோ உள்ளூர் மூப்பர்களுடன் நன்கு பழகுவதிலோ தாமதிக்காதீர்கள்.
(2) உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தாருடைய சபை பிரஸ்தாபி பதிவு அட்டைகளை மாற்றம் செய்வதற்கு தற்போதைய சபையின் செயலரும் போகப்போகிற புதிய சபையின் செயலரும் உங்களுக்கு உதவுவர். அதோடு, ஒரு அறிமுகக் கடிதமும் உங்களுடைய புதிய சபையின் மூப்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். (நம் ராஜ்ய ஊழியம், ஜூன் 1991-ன் கேள்விப் பெட்டியை பார்க்கவும்.) அந்த புதிய சபையின் ஊழியக் குழு பொருத்தமான புத்தகப் படிப்பு நடத்துனரிடம் உங்களுடைய வருகையை பற்றி சொல்ல வேண்டும், அந்த நடத்துனர் உங்களை சந்தித்து நீங்கள் கூட்டுறவுகொள்ளப் போகும் புத்தக படிப்பு குழு எது என்பதைத் தெரியப்படுத்துவார்.—ரோ. 15:7.
(3) அந்த புதிய சபையின் எல்லா பிரஸ்தாபிகளும் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு வேலை இருக்கிறது, அது சந்தோஷமானதும்கூட; அதுவே உங்களை வரவேற்பதும், உங்களோடு ஐக்கியமாகிவிடுவதும். (ஒப்பிடுக: 3 யோவான் 8.) அப்படியானால், சகோதர சகோதரிகளோடு பரஸ்பர உற்சாகத்தையும் கட்டியெழுப்புதலையும் அனுபவிக்க வேண்டுமானால் முதலாவது நீங்கள் கூட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை சொல்ல வேண்டியதே இல்லையே.
(4) இந்த மாற்றத்தில் உட்பட்டுள்ள எல்லா வேலைகளும் முடிந்த பிறகுதான் புதிய சபையோடு வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள வேண்டும் என காத்திருக்காதீர்கள். நீங்கள் ராஜ்ய அக்கறைகளை முதலாவது வைக்கும்போது, உங்களுடைய மற்ற தேவைகள் அனைத்தும் கவனித்துக்கொள்ளப்படும். உங்களுடைய புது இடத்தில் எந்த கவலையுமின்றி வசதியாக இருக்கலாம். (மத். 6:33) உங்களுடைய புது வீட்டில் குடியேறி, செட்டிலான பிறகு, ஒருவேளை சபையிலிருந்து சிலரை உங்களுடைய வீட்டிற்கு அழைத்து அவர்களை நன்கு தெரிந்துகொள்வதோடு, ஒன்றாக சகோதர கூட்டுறவையும் அனுபவியுங்கள்.—ரோ. 12:13.
இடம் மாறிச்செல்வது என்பது சாதாரண விஷயமில்லை. இருப்பினும், அதில் உட்பட்டுள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய பாகத்தை முறைப்படி செய்தால், எந்த ஆவிக்குரிய பாதிப்பும் ஏற்படாது. நம்முடைய கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் அன்பை பார்க்கும் அனைவரும் ஆச்சரியத்தில் பிரமிப்படைவர்.