புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை அளித்தல்
1 “புதிய உலக [மொழிபெயர்ப்பு] பைபிளை பெற்றுக்கொள்வதால் கோடி நன்மை கிடைக்கும். இதன் மொழிநடை ஆர்வத்தைத் தூண்டுகிறது; வாசிப்பவரை யோசித்துப் படிக்கச் செய்கிறது. மெத்தப் படித்த மேதாவிகள் இதை மொழிபெயர்க்கவில்லை; கடவுளுக்குப் பயந்து அவருடைய வார்த்தைக்கு செவிசாய்க்கும் வல்லுநர்களே மொழிபெயர்த்துள்ளனர்” என எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளின் பிரபல விளக்கவுரையாளர் ஒருவர் குறிப்பிட்டார். இவரது கூற்றை நாங்களும் ஆமோதிக்கிறோம். டிசம்பரில் அறிவு புத்தகத்தோடு சேர்த்து புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளையும் அளிக்கும்போது மற்றவர்களும் இதே போற்றுதலைக் காண்பிக்க நாம் எவ்வாறு உதவலாம்?
2 “ஏற்கெனவே எங்கிட்ட ஒரு பைபிள் இருக்குது, எதுக்குங்க இன்னொன்னு” என சிலர் அங்கலாய்க்கலாம். ஆனால் புதிய உலக மொழிபெயர்ப்பு வெறுமனே வேறு ஒரு பைபிள் அல்ல என்பதைக் காண அவர்களுக்கு உதவுவதே நமக்கு முன்பாக உள்ள சவால். இம்மொழிபெயர்ப்பு, மூலவாக்கியத்தில் எப்படி இருக்கிறதோ அதே விதமாக வார்த்தைக்கு வார்த்தை சரியான கருத்தை மிக துல்லியமாக இன்றைய மொழியில் தருகிறது. இது மற்ற மொழிபெயர்ப்புகளைக் காட்டிலும் மேலோங்கியது என்பதை நிரூபிக்க பின்வருவது வெறும் ஒரு உதாரணமே! 1 கொரிந்தியர் 10:25-ல் “கடையிலே” என்று தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தை, புதிய உலக மொழிபெயர்ப்பில் “மாமிசக் கடை” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை ஒத்துப்பாருங்கள்.
3 இருப்பினும் பைபிளை படிக்கும் சிலர் அன்றாட வாழ்க்கையில் இதனுடைய நியமங்களை நன்றாக புரிந்துகொள்வதில்லை. இப்படிப்பட்டவர்களுடைய வாழ்க்கையில் கடவுளுடைய வார்த்தை நல்ல செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை உணர்த்த வேண்டும். பைபிளின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் நேர்மை, ஒழுக்கம், குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டலாம். இதை எவ்வாறு சாதிப்பது?
4 இப்படிப் பேசலாமே: “இன்றைக்கு ஒழுக்க தராதரங்கள் ஜெட் வேகத்தில் மாறிக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தைக்குறித்து கொஞ்சம்கூட நிச்சயம் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் மத்தியில் நம்பகமான வழிநடத்துதல் தேவை என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] பைபிள் பழமையான புத்தகமானாலும் நவீன குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான, நடைமுறையான ஆலோசனைகளை கொடுக்கிறது.” பிறகு அறிவு புத்தகத்தை அதிகாரம் 2-க்கு திருப்பி, 2 தீமோத்தேயு 3:16, 17 உட்பட பாரா 10-ஐயும் பாரா 11-ல் முதல் வாக்கியத்தையும் படித்துக்காட்டுங்கள். வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால் அறிவு புத்தகத்தை அளியுங்கள். இலவச வீட்டு வேதப்படிப்பு ஏற்பாடு குறித்து விளக்கி, புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை அளியுங்கள். தேவைப்படுத்துகிறார் புரோஷரிலிருந்து படிப்பு ஆரம்பிப்பது நல்லது என உணர்ந்தால் நீங்கள் நடத்தலாம். இன்னும் கூடுதலான பொருத்தமான முன்னுரைக்கு நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 9-15-ஐக் காண்க.
5 தலைசிறந்த மொழிபெயர்ப்பாகிய புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை டிசம்பரில் ஆர்வத்தோடு அளிப்பதன் மூலம் நம்முடைய போற்றுதலை வெளிக்காட்டுவோமாக.