யெகோவாவின் ஆவி நம்மோடு இருக்கிறது
1 யெகோவாவின் சாட்சிகளாக, நம்மிடம் ஒரு மாபெரும் வேலை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இயேசு இவ்வாறு சொன்னார்: “சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.” (மாற். 13:10) மனித நோக்குநிலையிலிருந்து பார்த்தால், இது சாத்தியமற்றதாக தோன்றலாம்; ஆனால் அவ்வாறு இல்லை. இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் வல்லமைவாய்ந்த சக்தி நமக்கு பக்கபலமாக இருக்கிறது; ஆம், அதுவே கடவுளுடைய ஆவி.—மத். 19:26.
2 முதல் நூற்றாண்டு அத்தாட்சி: ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை தமக்கு பொருத்துபவராக இயேசு சொன்னார்: “சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி . . . யெகோவாவின் ஆவி என்மேலிருக்கிறது.” (லூக். 4:17, 18, NW) இயேசு பரலோகத்துக்கு செல்வதற்கு முன்பாக, தம்முடைய அப்போஸ்தலர்களிடம், “பூமியின் கடைசிபரியந்தமும்” சாட்சி கொடுப்பதற்காக அவர்களும் பரிசுத்த ஆவியின் வல்லமையைப் பெறுவார்கள் என்று சொன்னார். அதற்குப்பிறகு, எத்தியோப்பிய மந்திரிக்கு பிரசங்கிப்பதற்காக பிலிப்பு பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டார்; கடவுளுடைய ஆவி பேதுருவை ரோம நூற்றுக்கதிபதியிடம் அனுப்பியது; மேலும் புறஜாதியாருக்கு பிரசங்கிப்பதற்காக பவுலையும் பர்னபாவையும் அது துரிதப்படுத்தி அனுப்பியது. இப்படிப்பட்ட பின்னணியைச் சேர்ந்த மக்கள் சத்தியத்திற்கு சாதகமாக செவிகொடுப்பார்கள் என்று யாரேனும் நினைத்திருப்பார்களா? ஆனால் அவர்கள் செவிகொடுத்தார்கள்.—அப். 1:8; 8:29-38; 10:19, 20, 44-48; 13:2-4, 46-48.
3 நவீன நாளைய அத்தாட்சி: வெளிப்படுத்துதல் புத்தகம் இவ்வாறு குறிப்பிடுவதன்மூலம் இக்கால பிரசங்க வேலையில் பரிசுத்த ஆவியின் பங்கை வலியுறுத்துகிறது: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; . . . விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” (வெளி. 22:17) எல்லா மக்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி கிறிஸ்துவின் மணவாட்டி வகுப்பாரையும் அவர்களுடைய கூட்டாளிகளான “வேறே ஆடு”களையும் ஆவி தூண்டுவித்திருக்கிறது. (யோவா. 10:16) நம்முடைய பிரசங்க வேலையில் நாம் தைரியத்துடன் இருக்கவேண்டும்; எல்லாவிதமான மக்களையும் அணுகுவதற்கு ஒருபோதும் தயங்கக்கூடாது; கடவுளுடைய ஆவி நமக்கு உதவி செய்யும் என்ற உறுதியோடு எப்போதும் இருக்கவேண்டும். கடவுளுடைய ஆவி அவருடைய ஊழியர்களுடன் தொடர்ந்திருக்கிறது என்பதற்கான நம்பத்தக்க நிரூபணத்தை 1998 வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்) அளிக்கிறது. அதன் விளைவை பாருங்கள்! கடந்த இரண்டு ஊழிய ஆண்டுகளில், ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,000-க்கும் அதிகமானோர் முழுக்காட்டப்பட்டிருக்கின்றனர்.
4 நாம் ராஜ்ய செய்தியை யெகோவா போதும் என்று சொல்லும் வரை பிரசங்கிக்கையில், கடவுளுடைய ஆவி நம்மோடு தொடர்ந்திருக்கும் என்பதில் உறுதியுடனிருக்கலாம். அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த ராஜ்ய வேலையில் தொடர்ந்து மும்முரமாக பிரயாசப்படுவதற்கு இத்தகைய அறிவு நம்மை உற்சாகப்படுத்தவும் ஊக்குவிக்கவும் வேண்டும்.—1 தீ. 4:10.