தேவை—அதிக பைபிள் படிப்புகள்
1 யெகோவா தேவன் தம்முடைய பூமிக்குரிய அமைப்பு தொடர்ந்து வளரும்படி ஆசீர்வதிக்கிறார். கடந்த ஊழிய ஆண்டில், 3,75,923 பேர் உலகமுழுவதிலும் முழுக்காட்டப்பட்டார்கள்—சராசரியாக ஒரு நாளுக்கு 1,000-க்கும் அதிகமான புதிய சீஷர்கள், அல்லது ஒவ்வொரு மணிநேரத்திற்கும் சுமார் 43 பேர்! உலகின் பல்வேறு பாகங்களில், பத்தாண்டுகளாக நம்முடைய சகோதரர்கள் அனுபவித்து வந்திருக்கிற கடும் இன்னல்களின் மத்தியிலும், ராஜ்ய வேலை செழித்தோங்கியிருக்கிறது; குறிப்பிடத்தக்க அதிகரிப்புகள் அடையப்படுகின்றன. நற்செய்தியைப் பரப்புவதில் செய்யப்படும் முன்னேற்றத்தைப் பற்றி வாசிப்பது கிளர்ச்சியூட்டுவதாக இருக்கிறதல்லவா!
2 இந்தியக் கிளையில், கடந்த ஊழிய ஆண்டில், நாம் பிரஸ்தாபிகள், துணைப் பயனியர்கள் ஆகியோரின் மொத்த சராசரியிலும், பிரசங்க மணிநேரங்களிலும், அளிக்கப்பட்ட புத்தகங்கள், சிறுபுத்தகங்கள், புரோஷர்கள், பத்திரிகைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பைக் கண்டோம். முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு இருந்தது; அதோடு நினைவு ஆசரிப்புக்கு ஆஜராகியிருந்தவர்களின் எண்ணிக்கையில் எப்போதையும்விட அதிகமான உச்சநிலை இருந்தது. மறுசந்திப்பு, பைபிள் படிப்பு நடவடிக்கைகளைப் பற்றியென்ன? பிரஸ்தாபிகள் எட்டு சதவீதம் அதிகரித்தபோதிலும், மறுசந்திப்புகள் சிறிதளவே அதிகரித்திருந்தன; அதாவது வெறும் 0.5 சதவீத அதிகரிப்பே; மேலும் பைபிள் படிப்புகளில் நான்கு சதவீதம் குறைவைப் பெற்றிருந்தோம். ஆனால், ஊழியத்தின் இந்த அம்சங்கள்தாமே சீஷராக்குவதற்கு மிகவும் இன்றியமையாதவையாக இருக்கின்றன. மறுசந்திப்புகளிடமாகவும் பைபிள் படிப்புகளிடமாகவும் இருக்கும் இந்த எதிர்மறையான போக்கை மாற்றுவதற்கு நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்?
3 பைபிள் படிப்பை நடத்தவேண்டுமென்ற ஆசையை அதிகமாக்குங்கள்: ஆவிக்குரியவிதமாக பலமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு நமக்குநாமே முழுகவனம் செலுத்தவேண்டியது அவசியம். கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறவர்கள் “நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாக” இருக்கிறார்கள். (தீத். 2:14) நாம் நம்முடைய ஊழியத்தை சிந்தித்துப் பார்க்கையில், ஊழியத்தில் நாம் பிரசுரம் அளித்திருக்கிற அனைவரையும் மீண்டும் சென்று சந்திப்பதற்கு அதிக ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறோம் என்று சொல்லமுடியுமா? அக்கறை காட்டுகிற அனைவருக்கும் வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துவதற்கு நாம் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறோமா? (ரோ. 12:11) அல்லது மறுசந்திப்புகள் செய்வதற்கும் வீட்டு பைபிள் படிப்புகளை தொடங்குவதற்கும் அதிகமான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவேண்டிய அவசியம் நமக்கு உள்ளதா?
4 தனிப்பட்ட பைபிள் வாசிப்பு, சபை கூட்டங்களுக்கு தவறாமல் ஆஜராவது, பிரசுரங்களை படிப்பது ஆகியவை ஆவிக்குரியவிதமாக செயல்திறனுள்ளவர்களாகவும் கடவுளுடைய ஆவியால் வல்லமை அளிக்கப்பட்டவர்களாகவும் நம்மை வைக்கும். (எபே. 3:16-19) இது, யெகோவாவின்மீது நமக்குள்ள விசுவாசம், நம்பிக்கை, சகமனிதர்கள் மீதுள்ள நம் அன்பு ஆகியவற்றை அதிகமாக்கும். சத்தியத்தை எவருக்காவது கற்றுக் கொடுக்கவேண்டும் என்று நாம் தூண்டப்படுவோம்; இவ்விதமாக நம்முடைய ஊழியத்தை ஆர்வமுள்ளதாகவும், வெற்றிகரமானதாகவும், உற்சாகத்தை தூண்டக்கூடியதாகவும் ஆக்குவோம். ஆம், இன்னும் அதிக பைபிள் படிப்புகள் நடத்த நாம் விரும்ப வேண்டும்!
5 படிப்பை முதலில் குடும்பத்துடன் நடத்துங்கள்: கிறிஸ்தவ பெற்றோர், தங்கள் பிள்ளைகள் வீட்டில் தங்கும் பட்சத்தில் ஒழுங்கான குடும்ப பைபிள் படிப்பு திட்டத்தை வைத்திருப்பதற்கு கவனமாக இருக்கவேண்டும். (உபா. 31:12, 13; சங். 148:12, 13; நீதி. 22:6) பிள்ளைகளை முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆவதற்கு தகுதியுள்ளவராக்கி, ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுவதற்கு தயாராக்க பெற்றோர் அவர்களுடன் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்தும், பின்பு அறிவு புத்தகத்திலிருந்தும் படிப்பை நடத்துவது அதிக பலனுள்ளதாக இருக்கும். நிச்சயமாகவே, பிள்ளையின் வயதையும் தேவையையும் பொருத்து கூடுதலான தகவல்கள் சிந்திக்கப்படலாம். மே 1987 நம் ராஜ்ய ஊழியம் (ஆங்கிலம்) கேள்விப் பெட்டியில் குறிப்பிடப்பட்டபடி, முழுக்காட்டப்படாத பிள்ளையுடன் படிப்பை நடத்தும் பெற்றோர் படிப்பையும், நேரத்தையும், மறுசந்திப்புகளையும் தன்னுடைய ஊழிய அறிக்கையில் சேர்த்துக் கொள்ளலாம்.
6 தனிப்பட்ட ஒழுங்கை முன்னேற்றுவியுங்கள்: அளிக்கப்பட்டிருக்கும் பத்திரிகைகள், புரோஷர்கள், புத்தகங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டால், பேரளவான விதை பரவலாக விதைக்கப்பட்டிருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. விதைக்கப்பட்டிருக்கும் இந்த சத்திய விதைகள் புதிய சீஷர்களை உருவாக்குவதற்கு பெருமளவு ஆற்றலை உடையவையாக இருக்கின்றன. ஆனால், ஒரு விவசாயியோ, தோட்டக்காரரோ தொடர்ச்சியாக விதைத்துக் கொண்டிருந்துவிட்டு, தன்னுடைய எல்லா முயற்சிகளுக்கு பின்பும், அறுவடை செய்வதற்கு நேரம் எடுக்காவிட்டால், அவர் உண்மையில் அதிலிருந்து திருப்தியடைய முடியுமா? முடியவே முடியாது. அதேவிதமாகவே, நம்முடைய ஊழியத்தில் மறுசந்திப்பும் அவசியமானது.
7 மறுசந்திப்புகள் செய்வதற்கு நீங்கள் நேரத்தை ஒழுங்காக அட்டவணையிடுகிறீர்களா? அக்கறை காட்டிய அனைவரையும் உடனடியாக சென்று சந்தியுங்கள். பைபிள் படிப்பை துவங்கும் குறிக்கோளுடன் மறுசந்திப்பு செய்யுங்கள். உங்கள் மறுசந்திப்பு பதிவுச்சீட்டை தெளிவாகவும், அப்போதைக்குரிய தகவல்களுடனும், நன்கு ஒழுங்குபடுத்தியும் வைக்கிறீர்களா? வீட்டுக்காரரின் பெயர், விலாசம் ஆகியவற்றோடுகூட, முதலில் நீங்கள் சந்தித்த தேதி, கொடுக்கப்பட்டிருக்கும் பிரசுரங்கள், கலந்துரையாடலைப் பற்றிய சுருக்கமான விவரிப்பு, அடுத்து சந்திக்கையில் நீங்கள் விளக்க நினைத்திருக்கும் குறிப்பு ஆகியவற்றை பதிவு செய்ய நிச்சயமாயிருங்கள். ஒவ்வொரு மறுசந்திப்புக்கு பிறகும் நீங்கள் சேர்க்கவிருக்கும் கூடுதலான தகவல்களுக்காக உங்கள் பதிவுச் சீட்டில் இடத்தை விட்டுவையுங்கள்.
8 எவ்வாறு மறுசந்திப்பு செய்வது என கவனமாக சிந்தித்தல்: அக்கறை காட்டும் நபருடன் மறுசந்திப்பு செய்கையில் மனதில் வைத்திருக்கவேண்டிய ஒரு சில குறிப்புகள் யாவை? (1) அக்கறைகாட்டுபவராகவும், சிநேகப்பான்மையுள்ளவராகவும், ஆர்வமிக்கவராகவும், இயல்பானவராகவும் இருங்கள். (2) அவருக்கு ஆர்வமூட்டுகிற பொருளையோ கேள்விகளையோ கலந்தாலோசியுங்கள். (3) உங்கள் கலந்துரையாடலை எளிமையாகவும், ஆர்வமூட்டக்கூடியதாகவும், வேதப்பூர்வமானதாகவும் இருக்க செய்யுங்கள். (4) ஒவ்வொரு சந்திப்பிலும், வீட்டுக்காரர், தனிப்பட்டவிதமாய் தனக்கு பயன் தருவதாக உணரக்கூடிய ஒன்றை கற்றுக்கொடுக்க பிரயாசப்படுங்கள். (5) அடுத்த சந்திப்பில் கலந்துரையாடவிருக்கும் பொருளின் பேரிலான எதிர்பார்ப்பை உருவாக்குங்கள். (6) அதிக நேரம் தங்காதீர்கள். (7) வீட்டுக்காரரை அசௌகரியமாக உணரச்செய்கிற அல்லது இக்கட்டில் மாட்டிவிடுகிற கேள்விகளை கேட்காதீர்கள். (8) ஆவிக்குரிய காரியங்களுக்கான போற்றுதலை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக, வீட்டுக்காரரின் தவறான கருத்துக்களையோ கெட்ட பழக்கங்களையோ கண்டனம் செய்யாதபடிக்கு பகுத்துணர்வை பயன்படுத்துங்கள்.—மறுசந்திப்புகள் செய்வதிலும் பைபிள் படிப்புகளை துவங்குவதிலும் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதன் பேரிலான கூடுதல் தகவல்களுக்காக மார்ச் 1997 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையை பாருங்கள்.
9 ஒவ்வொரு வாய்ப்புக்காகவும் கவனமாய் தேடுதல்: ஒரு சபையில், நுழைவு அனுமதி மறுக்கப்பட்ட ஒரு குடியிருப்பு பகுதியில் வசிக்கிற அனைவருடைய பெயரையும் அபார்ட்மெண்ட் எண்களையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் இரண்டு துண்டுப்பிரதிகள் இணைக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தின் முடிவில், ஒரு வீட்டு பைபிள் படிப்பு அளிக்கப்பட்டது; அதோடு பெறுனர் பதிலளிப்பதற்காக உள்ளூர் தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. சில நாட்களுக்குள்ளாகவே, ஒரு இளம் மனிதர் போனில் அழைத்து தனக்கு படிப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார். மறுநாள் மறுசந்திப்பு செய்யப்பட்டு, அறிவு புத்தகத்திலிருந்து ஒரு படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது. அன்றிரவே அவர் சபை புத்தகப் படிப்புக்கு ஆஜரானார்; அதோடு எல்லா கூட்டங்களுக்கும் வரத் தொடங்கினார். விரைவிலேயே அவர் பைபிளை தினந்தோறும் ஒழுங்காக வாசிக்கத் தொடங்கினார். முழுக்காட்டுதலை நோக்கி அவர் சீரான முன்னேற்றத்தை செய்தார்.
10 பிரஸ்தாபிகளின் ஒரு தொகுதியினர் ஒன்றுசேர்ந்து மறுசந்திப்புகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர். ஒரு சகோதரி தன்னுடைய மறுசந்திப்புக்கு சென்றபோது, அவள் எதிர்பார்த்து சென்ற அந்நபர் வீட்டில் இல்லை; ஆனால் மற்றொரு இளம் பெண் கதவருகில் வந்து, “நான் உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கிறேன்” என்று பதிலளித்தாள். அந்தப் பெண் தனக்கு அறிமுகமானவரிடமிருந்து ஏற்கெனவே அறிவு புத்தகத்தைப் பெற்றிருந்தாள். சகோதரிகள் அப்பெண்ணை சந்திக்க செல்வதற்கு முன்பாகவே, அவள் அந்த புத்தகத்தை இரண்டு முறை வாசித்திருந்தாள். அதில் அடங்கியிருந்த தகவல்களால் அதிகம் கவரப்பட்டிருந்தாள். அன்று சாட்சிகள் தன்னை சந்திக்க வந்திருப்பது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லையென அவள் சொன்னாள்; ஏனெனில் அவர்கள் வருவதற்காகவும், தன்னுடன் பைபிளை படிப்பதற்காகவும் ஜெபம் செய்து கொண்டிருந்ததாக அவள் தெரிவித்தாள். ஒரு படிப்பு துவங்கப்பட்டது; அவள் சபைக் கூட்டங்களுக்கு வரத் தொடங்கினாள்; விரைவான முன்னேற்றத்தை செய்தாள்.
11 கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு முழுக்காட்டப்பட்ட ஒரு சகோதரி, சமீபத்தில் தன்னுடைய தாய்க்கு அறிவு புத்தகத்தை கொடுத்தார். சர்ச் அங்கத்தினரான அவருடைய தாய், அந்தப் புத்தகத்தை படிக்கத் தொடங்கினார். இரண்டு அதிகாரங்களை படித்து முடித்த பிறகு, அவர் தன்னுடைய மகளுக்கு போன் செய்து, மகளே அதிசயிக்கும் வண்ணமாக, “நானும் யெகோவாவின் சாட்சிகள்ல ஒருத்தியா ஆகணும்!” என்று சொன்னார். அந்த தாய் படிக்கத் துவங்கி இப்போது முழுக்காட்டப்பட்டிருக்கிறார்.
12 இந்த ஆலோசனைகளை முயன்று பாருங்கள்: பைபிள் படிப்பை துவங்குவதற்கு நேரடியான அணுகுமுறை நீங்கள் எப்போதாவது பயன்படுத்தியிருக்கிறீர்களா? நீங்கள் வெறுமனே இவ்வாறு சொல்லலாம்: “நீங்கள் ஒரு இலவச பைபிள் படிப்பை விரும்பினால், அது எப்படி செய்யப்படுகிறதென்று சில நிமிடங்களில் நான் உங்களுக்கு காட்டிவிடுவேன். நீங்கள் அதை விரும்பினால், நாம் தொடர்ந்து படிக்கலாம்.” இவ்விதமாக சொல்லப்படுகையில், இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவும், பைபிள் படிப்பு ஒன்றை நடித்துக் காட்டுவதை கவனிக்கவும் அநேக ஆட்கள் மறுப்புத் தெரிவிப்பதில்லை.
13 படிப்பின் ஆரம்பக் கட்டத்திலேயே, இடக்குறிப்பு காட்டப்பட்டிருக்கும் வசனங்களை வாசிப்பதன் மூலமும் அச்சடிக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கான பதிலில் உள்ள முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிடுவதன் மூலமும் முன்கூட்டியே தயாரிப்பது எப்படி என்பதை மாணாக்கருக்கு காட்டுங்கள். முக்கியக் குறிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். முதல் ஒருசில படிப்பு பகுதிகளில் நாம் வளைந்து கொடுப்பது அவசியமென்றாலும்கூட, பைபிள் படிப்பு ஒழுங்கான அடிப்படையில் நடத்தப்படவேண்டும் என்பது முக்கியம். ஜெபத்தை படிப்பின் ஒரு முக்கியமான அம்சமாக எப்படி அறிமுகப்படுத்துவீர்கள் என்பதையும் எதிர்ப்பு வரும்போது அதை சமாளிப்பதற்காக மாணாக்கரை வேதப்பூர்வமாக எப்படி தயார் செய்வீர்கள் என்பதையும் மனதில் வையுங்கள். எவ்வாறாயினும், படிப்பை ஆர்வமூட்டுவதாக ஆக்குங்கள்!
14 எல்லா பைபிள் மாணாக்கரும் ஒரே விதமாக முன்னேறுகிறதில்லை என்பது உண்மைதான். சிலர் வேறுசிலரைப் போல அந்தளவுக்கு ஆவிக்குரிய மனச்சாய்வு உள்ளவர்களாக இருப்பதில்லை; அல்லது கற்றுக்கொடுக்கப்படும் காரியங்களை எளிதில் கிரகித்துக் கொள்பவர்களாகவும் இல்லை; வேறுசிலர் ஒவ்வொரு வாரமும் ஒரு முழு அதிகாரத்தை முடித்துவிட நேரத்தை ஒதுக்கமுடியாதளவுக்கு மிகவும் பிஸியான வாழ்க்கை நடத்துகிறார்கள். எனவே, சிலருடைய விஷயத்தில், குறிப்பிட்ட சில அதிகாரங்களை முடிப்பதற்கு ஒரு முறைக்கு மேல் படிக்க வேண்டியிருக்கலாம். மேலும் முழு புத்தகத்தையும் படித்து முடிப்பதற்கு கூடுதலான சில மாதங்கள் எடுக்கலாம். சில சமயங்களில், முதலில் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை படித்துவிட்டு, பிறகு அறிவு புத்தகத்தில் படிக்கவேண்டியிருக்கலாம். இதோடுகூட, ஒவ்வொரு மாணாக்கரும் கூட்டங்களுக்கு ஆஜராகும்போது, அது சத்தியத்தில் பலமான அஸ்திவாரத்தை பெறுவதற்கு அவர்களுக்கு உதவும்.
15 எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பைபிள் படிப்புக்காக ஜெபம் செய்யுங்கள்! (1 யோ. 3:22) எவரேனும் ஒருவரை இயேசு கிறிஸ்துவின் ஒரு சீஷராக ஆக்குவதற்கு உதவி செய்வதில் யெகோவா தேவனால் பயன்படுத்தப்படுவதே ஒரு கிறிஸ்தவருக்கு அதிக திருப்தியளிக்கும் அனுபவமாயிருக்கிறது. (அப். 20:35; 1 கொ. 3:6-9; 1 தெ. 2:8) அதிகமான படிப்புகளை துவங்க வேண்டும் என்ற நம்முடைய முயற்சிகளை யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதிப்பார் என்ற முழு நம்பிக்கையுடன் பைபிள் படிப்பு வேலையில், உச்ச அளவான வைராக்கியத்தை காட்டுவதற்கு இதுவே நேரம்!
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
ஒரு புதிய பைபிள் படிப்பை துவங்குவதற்காக நீங்கள் ஜெபிக்கிறீர்களா?