திரளானோர் சேர்க்கப்படுகிறார்கள்
1 முதல் நூற்றாண்டில் சம்பவித்ததைப் போலவே, இன்று கிறிஸ்தவ சபையில் உண்டாகும் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கது. (அப். 2:41; 4:4) கடந்த ஆண்டில் உலகமுழுவதிலும் 3,66,579 பேர் முழுக்காட்டப்பட்டார்கள், சராசரியாக ஒவ்வொரு நாளும் 1,000 பேருக்கும் மேல்! கடந்த மூன்று ஆண்டில் பத்து லட்சத்திற்கும் மேலானோர் முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள். உண்மையிலேயே, யெகோவா திரளான விசுவாசிகளைத் தொடர்ந்து சேர்த்துக்கொண்டு வருகிறார்.—அப். 5:14.
2 கிறிஸ்தவ வாழ்க்கை முறையில் அதிக அனுபவமில்லாத அநேக புதியவர்களுக்கு விசுவாசத்தில் பலமுள்ளவர்களிடமிருந்து உதவியும் பயிற்சியும் தேவை. (ரோ. 15:1) பூர்வ கிறிஸ்தவர்களில் சிலர், தங்களுடைய முழுக்காட்டுதலுக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்பும்கூட, ‘முதிர்ந்த நிலைமைக்கு முன்னேறிச் செல்லத்’ தவறிவிட்டார்கள். (எபி. 5:12; 6:1, திருத்திய மொழிபெயர்ப்பு) அதனால்தான், பவுல் எபிரெயருக்கு எழுதிய தன்னுடைய கடிதத்தில், ஆவிக்குரிய முறையில் கிறிஸ்தவர்கள் வளரவேண்டிய அம்சங்களை சிறப்பித்துக் காட்டினார். அவை யாவை, மேலும் தேவையான உதவியை எவ்வாறு அளிக்கலாம்?
3 நல்ல படிப்பு பழக்கங்களை வைத்துக்கொள்ளுதல்: பவுலுடைய அறிவுரைக்கு இசைவாக, நல்ல ஒரு மாணாக்கராய் இருப்பது என்பது பலன்தரத்தக்க விதத்தில் படிப்பதையும் படித்தவற்றை திரும்ப அலசிப்பார்ப்பதையும் யெகோவாவின் அமைப்பால் கொடுக்கப்படுகிற ‘பலமான ஆகாரத்தைப்’ பயன்படுத்துவதையும் உட்படுத்துகிறது. (எபி. 5:13, 14; ஆகஸ்ட் 15, 1993, காவற்கோபுரம், பக்கங்கள் 12-17-ஐக் காண்க.) ஆவிக்குரிய சம்பாஷணைகளில் புதிய விசுவாசிகளையும் உட்படுத்திக்கொள்வதன் மூலமும் தனிப்பட்ட ஆராய்ச்சியினால் நீங்கள் கற்றிருக்கும் சத்தியம் என்ற விலையேறப்பெற்ற மணிக்கற்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும், நல்ல படிப்பு பழக்கங்களை வைத்துக்கொள்வதற்கு நீங்கள் அவர்களை உந்துவிக்கலாம். புதியவர்கள் உங்களுடைய தனிப்பட்ட அல்லது குடும்ப படிப்பில் சேர்ந்துகொள்ளும்படி எப்பொழுதாவது நீங்கள் அவர்களை அழைக்கலாம்.
4 தவறாமல் கூட்டங்களுக்கு ஆஜராதல்: உங்களுடைய உண்மையுள்ள முன்மாதிரியும் ஊக்கமூட்டுகிற அன்பான வார்த்தைகளும், பவுலால் குறிப்பிடப்படும் கவலைக்குரிய மற்றொரு அம்சத்தை—கிறிஸ்தவ கூட்டங்களைத் தவறவிடும் ‘பழக்கத்தை’—தவிர்ப்பதற்கு சபையிலுள்ள புதிய அங்கத்தினர்களுக்கு உதவிசெய்யும். (எபி. 10:24, 25, NW) கூட்டங்களே சபையோடு அவர்களை இணைக்கும் ஆவிக்குரிய உயிர்நாடி என்பதை மதித்துணர அவர்களுக்கு உதவுங்கள். நம்முடைய சகோதரத்துவத்தின் பாகமாக அவர்கள் வரவேற்கப்பட்டவர்களாய் உணரும்படி முதற்படியெடுங்கள்.
5 யெகோவாவை நம்பிக்கையுடன் அணுகுதல்: மாம்ச பலவீனங்களையும் ஆளுமை குறைபாடுகளையும் சமாளிப்பதற்கு, நம்முடைய ஆழமான எண்ணங்களையும் மிகவும் தனிப்பட்ட கவலைகளையும் யெகோவாவிடம் தெரிவித்து நாம் அவரை ஜெபத்தில் அணுக வேண்டும். பவுல் உந்துவித்ததுபோல, உதவிக்காக யெகோவாவிடம் விண்ணப்பிப்பதன் மூலம், தாங்கள் இடறலடைய வேண்டியதில்லை என்பதைப் புதியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். (எபி. 4:15, 16; 10:22) இதன் சம்பந்தமாக உங்களது தனிப்பட்ட அனுபவங்களைச் சொல்லுவது, இருதயப்பூர்வமான ஜெபங்களை யெகோவா கேட்கிறார் என்பதில் புதிய நபரின் நம்பிக்கையைப் பலப்படுத்தும்.
6 ஊழியத்துக்காக நேரத்தை திட்டமிடுதல்: நாம் ‘ஸ்தோத்திரபலியை எப்பொழுதும் தேவனுக்குச் செலுத்தும்போது,’ அது ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்துகிறது என்பதையும்கூட பவுல் காண்பித்தார். (எபி. 13:15) உங்களுடைய வாராந்தர வெளி ஊழிய ஏற்பாடுகளில் ஒரு புதிய பிரஸ்தாபி உங்களுடன் சேர்ந்துகொள்வதற்கு நீங்கள் அவரை அழைக்க முடியுமா? ஒருவேளை நீங்கள் இருவரும் ஒரு பிரசங்கத்தைத் தயாரிக்கலாம் அல்லது புதிய பிரஸ்தாபி இன்னும் முயற்சி செய்திராத ஊழியத்தின் ஓர் அம்சத்தை கலந்தாலோசிக்கலாம்.
7 திரளானோர் சேர்க்கப்பட்டு வருவது அதிக சந்தோஷப்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. சபையிலுள்ள புதிய அங்கத்தினர்களைப் பயிற்றுவிப்பதற்கும் அறிவுறுத்துவதற்கும் நம்மையே நாம் அளிப்பது, ‘அவர்களுடைய ஆத்துமா ஈடேற’ தேவைப்படும் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவிசெய்யும்.—எபி. 3:12, 13; 10:39.