கேட்கிறவர்களாக மாத்திரம் இராமல்—செய்கிறவர்களாய் இருங்கள்
1 உண்மை கிறிஸ்தவர்கள் இன்று, கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதன்படி செய்கிறவர்களாகவும் இருங்கள் என்னும் பைபிளின் புத்திமதியைத் தங்கள் இருதயங்களில் பதிய வைக்கின்றனர். (யாக். 1:22) இது, கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டியபோதிலும், வெறும் உதட்டளவில் கடவுளை சேவிக்கும் ஆட்களிடமிருந்து அவர்களை முற்றிலுமாக வேறுபடுத்தி வைக்கிறது. (ஏசா. 29:13) கடவுளுடைய சித்தத்தை செய்கிறவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள் என்று இயேசு தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டார்.—மத். 7:21.
2 கடவுளுக்கேற்ற கிரியைகள் இல்லாத வணக்கம் அர்த்தமற்றது. (யாக். 2:26) எனவே நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும், ‘என் விசுவாசம் களங்கமற்றது என்பதை எவ்வாறு என்னுடைய செயல்கள் நிரூபிக்கின்றன? நான் எதை நம்புகிறேனோ அதற்கு இசைவாக உண்மையில் வாழ்கிறேன் என்பதை எது காட்டுகிறது? நான் எவ்வாறு இயேசுவை முழுமையாகப் பின்பற்ற முடியும்?’ இந்தக் கேள்விகளுக்கான நேர்மையான பதில்கள், கடவுளின் சித்தத்தை செய்வதில் நாம் எவ்வளவு முன்னேறியுள்ளோம் அல்லது இன்னும் என்ன முன்னேற்றம் செய்ய வேண்டும் என்பதை கண்டுகொள்ள நமக்கு உதவுகின்றன.
3 இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நமக்கு, வாழ்க்கையின் முதன்மையான இலக்கு, சங்கீதக்காரன் வெளிப்படுத்தியதைப் போன்றே இருக்கவேண்டும்: “தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம்.” (சங். 44:8) கிறிஸ்தவமே வாழ்க்கை பாதையாக இருப்பதால், நாம் தினந்தோறும் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் அது தானாகவே வெளிப்படுகிறது. யெகோவாவை துதிக்க வேண்டும் என்னும் நமது இதயப்பூர்வமான ஆவலை, நம் நடவடிக்கைகள் அனைத்திலும் வெளிப்படுத்திக் காட்டும்போது எத்தகையதோர் திருப்தியை அடைகிறோம்!—பிலி. 1:10.
4 யெகோவாவுக்குத் துதி செலுத்துதல் என்பது நேர்மையான வாழ்க்கை வாழ்வதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது: நல்நடத்தையை மாத்திரம் கடவுள் கோருகிறார் என்றால், நாம் வெறுமனே நமது ஆளுமையைச் சீர்செய்வதிலேயே முழுகவனத்தையும் செலுத்திக்கொண்டிருக்கலாம். ஆயினும், நமது வணக்கம் யெகோவாவின் மகிமைகளை விரிவாக பரப்புவதையும், அவருடைய நாமத்தை யாவரறிய துதிப்பதையும்கூட உட்படுத்துகிறது!—எபி. 13:15; 1 பே. 2:9.
5 நாம் செய்யும் மிக முக்கியமான அலுவல்களில் ஒன்று, பொதுமக்களிடத்தில் நற்செய்தியைப் பிரசங்கிப்பது ஆகும். இந்த வேலைக்காக இயேசு தம்மையே அர்ப்பணித்தார், ஏனெனில் இதைக் கேட்போருக்கு நித்திய ஜீவனை உட்படுத்துகிறது என்பதை அவர் அறிந்திருந்தார். (யோவா. 17:3) இன்றும், ‘தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியம்’ அவ்வளவு முக்கியமானது, அது மாத்திரமே, ஜனங்கள் இரட்சிக்கப்படுவதற்கு இருக்கும் ஒரே மார்க்கம். (அப். 6:4; ரோ. 10:13) அதன் மிகப் பரவலான பயன்களை உணரும்போது, “திருவசனத்தை பிரசங்கம்பண்ணு,” ‘அதில் துரிதமாய் இரு’ என்று பவுல் ஏன் புத்திமதி சொன்னார் என்பதை நம்மால் மதித்துணர முடியும்.—2 தீ. 4:2, NW.
6 யெகோவாவைத் துதிப்பது எந்தளவுக்கு நம் வாழ்க்கையை ஆக்கிரமிக்க வேண்டும்? நித்தமும் அது தன் மனதில் இருந்ததாகச் சங்கீதக்காரன் சொன்னார். நாமும் அவ்விதமே உணருகிறோம் அல்லவா? ஆம், நாம் மற்றவருடன் தொடர்புகொள்ளும் ஒவ்வொரு முறையும் யெகோவாவின் நாமத்தைப் பற்றி பேசுவதற்கான ஒரு சாத்தியமான சந்தர்ப்பம் என்று நாம் கருதுவோமாக. நம் சம்பாஷணையை ஆவிக்குரிய காரியங்களிடமாக திருப்புவதற்கு பொருத்தமான சந்தர்ப்பங்களை நாம் தேடுவோமாக. சபையால் ஏற்பாடு செய்யப்படும் வெளி ஊழிய நடவடிக்கைகளில் ஒழுங்காகப் பங்கேற்பதற்காகவும்கூட நாம் கடினமுயற்சி செய்யவேண்டும். எவருக்காவது சூழ்நிலைமைகள் அனுமதிக்குமாயின், பயனியர் சேவைக்காகக் கருத்தார்ந்த சிந்தனையைச் செலுத்தலாம், இது, நமது அன்றாட வாழ்க்கையில், பிரசங்க வேலைக்கு முதன்மையான இடத்தை அளிக்க நமக்கு உதவும். கடவுளின் சித்தத்தை தொடர்ந்து செய்கிறவர்களாய் இருந்தால், பாக்கியவான்களாக இருப்போம் என்று கடவுளுடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது.—யாக். 1:25.