பல்வகை சிற்றேடுகளை உங்கள் ஊழியத்தில் பயன்படுத்துங்கள்
1 இன்றைய மக்கள் பல்வேறு விஷயங்களில் அக்கறை உள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஜூலையில் வெளி ஊழியத்தில் நீங்கள் ஈடுபடும்போது, உங்களிடம் பல வித்தியாசமான சிற்றேடுகளை வைத்துக்கொண்டு, உங்கள் பிராந்தியத்திலுள்ள மக்களைக் கவரக்கூடிய குறிப்பிட்ட ஒன்றைப் பயன்படுத்தலாம். பின்வரும் பிரசங்கங்களுள் ஒன்றை நீங்கள் ஒருவேளை பயன்படுத்த விரும்பலாம்:
2 “நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?” என்ற சிற்றேட்டை அளிக்கையில் நீங்கள் இவ்வாறு கேட்கலாம்:
◼ “பிரச்சினைகளே இல்லை என்றால் இந்த உலகம் எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] நம்முடைய பிரச்சினைகள் எல்லாம் தீரவேண்டுமானால், பூமியைக் கடவுள் ஆட்சி செய்யப்போவதே நடைமுறையில் எதிர்பார்க்கக்கூடிய ஒரே வழியாக இருக்கிறது. [பக்கம் 20-க்குத் திருப்புங்கள்; சங்கீதம் 37:10 மற்றும் சங்கீதம் 46:9-ஐ மேற்கோள் காட்டுகிற முதல் பாராவை வாசியுங்கள்.] அப்படிப்பட்ட ஒரு உலகில் வாழ நீங்கள் விரும்பினால், நீங்கள் இந்தச் சிற்றேட்டை வாசிக்கவேண்டும்.” சிற்றேட்டைக் கொடுங்கள்.
3 “நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்” இந்தவிதமாக அளிக்கப்படலாம்:
◼ “நம்மில் எவரும் நமக்கு அன்பான ஒருவரை மரணத்தில் இழக்க வேண்டியிராத ஒரு நாள் எப்போதாவது வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதிலுக்கு அனுமதியுங்கள்.] அப்படிப்பட்ட ஒரு நாள் வெகு சீக்கிரத்தில் வருகிறது என்ற பைபிளின் நிச்சயமான வாக்குறுதியால், அழகாக எழுதப்பட்டுள்ள இந்தச் சிற்றேடு லட்சக்கணக்கானோருக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. [ஐந்தாம் பக்கத்திற்குத் திருப்பி, 1 கொரிந்தியர் 15:21, 22 உட்பட, ஐந்தாம் பாராவை வாசியுங்கள். பின்பு 30-ம் பக்கத்திலுள்ள படத்திற்குத் திருப்புங்கள்.] இறந்துபோன நம் அன்பானவர்களை உயிர்த்தெழுதலில் மீண்டும் வரவேற்கையில் நாம் அனுபவிக்கக்கூடிய சந்தோஷத்தை இங்கு அந்தக் கலைஞர் சித்தரித்திருக்கிறார். ஆனால், அந்த மகிழ்ச்சியுள்ள காட்சி எங்கே சம்பவிக்கும்? அந்தக் கேள்விக்கு பைபிள் கொடுக்கும் விடையை இந்தச் சிற்றேடு உங்களுக்குக் காண்பிக்கும்.” அவர்கள் சிற்றேட்டை ஏற்றுக்கொண்டால், நீங்கள் மேலும் இவ்வாறு சொல்லக்கூடும்: “பின்னர் மறுபடியும் வந்து, இந்தப் பொருளைக்குறித்து மேலுமாக உங்களுடன் கலந்துபேச விரும்புகிறேன்.”
4 ஒரு பைபிள் படிப்பைத் தொடங்குவதற்கு இந்த நேரடியான அணுகுமுறையைப் பயன்படுத்தி, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” என்ற சிற்றேட்டை அளிக்கலாம்:
◼ “நீங்கள் பைபிளைப்பற்றி கேள்விப்பட்டிருக்கக்கூடும்; ஆனால் அதைக் குறித்து அதிகத்தைக் கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்திருக்கக்கூடும். பைபிளைக் குறித்து மிகவும் பொதுவாகக் கேட்கப்படக்கூடிய கேள்விகள் சிலவற்றை இந்தப் பிரசுரம் குறிப்பிடுகிறது. [பக்கம் 30-ஐக் காண்பியுங்கள்.] இந்தக் கடைசி கேள்வி அநேகருடைய அக்கறையைத் தூண்டியிருக்கிறது: ‘பரதீஸில் நித்திய வாழ்க்கைக்காக நீங்கள் எவ்வாறு ஆயத்தஞ்செய்யலாம்?’” நீங்கள் 29-30-ம் பக்கங்களிலுள்ள 57-8 பாராக்களைக் கலந்தாலோசித்து, வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசித்தீர்களானால், ஒரு பைபிள் படிப்பைத் தொடங்குவதற்குத் தேவையான அடித்தளத்தை அமைத்துவிட்டிருப்பீர்கள். சிற்றேட்டை அளித்துவிட்டு, மற்ற கேள்விகளில் சிலவற்றைக் கலந்தாலோசிப்பதற்காக மறுசந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதன்மூலம் முடிக்கலாம்.
5 “கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும்” என்ற சிற்றேட்டை வைத்து இந்த எளிய பிரசங்கத்தை அளிக்க நீங்கள் விரும்பக்கூடும்:
◼ “பைபிளிலிருந்து நான் கற்றுக்கொண்ட முதல் காரியங்களில் ஒன்று கடவுளுடைய பெயர் ஆகும். அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? [பதிலுக்கு அனுமதியுங்கள்.] நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன். அது இங்கு பைபிளில் சங்கீதம் 83:17-ல் இருக்கிறது. [வாசியுங்கள்.] கடவுளுடைய பெயராகிய யெகோவா என்பது பல வித்தியாசப்பட்ட மொழிகளில் எவ்வாறு காணப்படுகிறது என்பதை இந்தச் சிற்றேடு காண்பிக்கிறது. [பக்கம் 8-லுள்ள பெட்டியைக் காண்பியுங்கள்.] யெகோவாவைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் அதிகத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், நீங்கள் இந்தச் சிற்றேட்டை வாசிக்கவேண்டும்.” சிற்றேட்டை வீட்டுக்காரரிடம் கொடுங்கள்.
6 பயன்படுத்துவதற்குப் பல்வகையான இவ்வளவு சிறந்த சிற்றேடுகளை வைத்திருப்பதால், நாம் நிச்சயமாகவே ‘சாந்தகுணமுள்ளோருக்கு நற்செய்தியை அறிவிக்க’ நன்கு தயாரானவர்களாக இருக்கிறோம்.—ஏசா. 61:1.