நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—வீட்டு வேதப்படிப்புகள் மூலம் சீஷராக்குங்கள்
1 கிறிஸ்தவர்களுக்கு நியமிக்கப்பட்ட பொது ஊழியம் இரண்டு அம்சங்களை அடங்கியது: முதலாவது, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தல், அதுவே பிரசங்க வேலை; இரண்டாவது, நல்ல விதத்தில் பிரதிபலிப்பவர்களுக்கு கற்பித்தல், அவர்களை கிறிஸ்துவின் சீஷர்களாக்குதல். (மத். 24:14; 28:19, 20) வெறுமென வெளி ஊழியத்தில் நேரத்தை செலவு செய்வது அல்லது அதிக பிரசுரங்களை அளிப்பது நம்முடைய நோக்கம் அல்ல. நேர்மை இருதயமுள்ளவர்கள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு, நித்திய ஜீவனின் எதிர்பார்ப்புடன் யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகளாவதற்கு உதவி செய்வதும் நம்முடைய நோக்கமாக இருக்கிறது. சீஷராக்கும் வேலை வீட்டு வேதப்படிப்பு ஊழியத்தின் மூலமாகவே சிறந்த விதத்தில் நிறைவேற்றப்படுகிறது.
2 முதல் சந்திப்பில் ஒரு வீட்டு வேதப்படிப்பை அளிக்க முயற்சி செய்திருக்கிறீர்களா? முதல் சந்திப்பில் படிப்பை துவங்கினால், அதைத் தொடருவதற்காக, வீட்டுக்காரரிடம் ஒரு பிரசுரத்தை பொதுவாக நாம் விட்டு வருகிறோம். அநேக சமயங்களில், அக்கறை காட்டும் ஆட்களின் பேரில் செய்யப்படும் மறுசந்திப்புகளின்போது வேதப்படிப்புகள் துவங்கப்படுகின்றன. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், பிரசுரங்களில் ஒன்றை பயன்படுத்தி சுருக்கமாக நம்முடைய படிப்பு ஏற்பாட்டை நடித்து காட்டுவது நல்லது. சில சமயங்களில் ஒரு படிப்பைத் துவங்குவதற்கு முன்பு, பல சந்திப்புகள் அவசியப்படலாம். சிலர் தங்களுக்கு இருக்கும் பைபிள் கேள்விகளுக்கு பதில்களை விரும்பலாம். அவர்கள் அக்கறை காட்டியிருக்கும் பொருள்கள் அல்லது கேள்விகளுடன் துவங்கலாம். அனலுடனும் சிநேகபான்மையுடனும், உற்சாகத்துடனும், இயல்பான முறையிலும் பேசுங்கள்.
3 பின்வருமாறு சொல்வதன் மூலம் முதல் சந்திப்பில் வேதப்படிப்பு துவங்குவதில் அநேகர் நல்ல விளைவைக் கண்டிருக்கிறார்கள்: “நாங்கள் ஆட்களுடன் இலவசமாக வீட்டு வேதப்படிப்புகளை நடத்துகிறோம். நீங்கள் எவ்விதத்திலும் கடன்பட்டவர்களாய் இல்லை. அக்கறைத் தூண்டும் பைபிள் பொருள்களை உங்களுடன் கலந்தாலோசிக்க நாங்கள் எங்களுடைய சொந்த பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து வருவோம். அத்தகைய ஓர் இலவச வேதப்படிப்பை நீங்கள் விரும்புவீர்களா?” இந்த முறையை ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தி பாருங்கள், நடைமுறையானதாக இருக்கிறதென்று நீங்கள் காண்பீர்கள்.
4 நாம் எதைப் படிக்க வேண்டும்? இதற்கு எவ்வித சட்டதிட்டமும் கிடையாது. தனிப்பட்ட மாணவரின் தேவை, அவருடைய பின்னணி, அக்கறைகள், கருத்துகள் ஆகியவற்றை கருத வேண்டும். மாணவர் ஆரம்பத்தில் கேட்கும் கேள்விகள், நீங்கள் என்ன சொல்வது என்று தீர்மானிக்க உங்களுக்கு உதவிசெய்யக்கூடும். நாம் சங்கத்தின் புத்தகங்களை உபயோகிக்கலாம், ஆனால் ஒரு சிறு புத்தகம் அல்லது பத்திரிகையிலுள்ள கட்டுரை, துண்டுபிரதி அல்லது பைபிளையுங்கூட பயன்படுத்தலாம். மாணவருக்கு எது அதிக பிரயோஜனமாக இருக்குமோ அதை பயன்படுத்தவும் அவருடைய அக்கறையைக் காத்துக்கொள்ளவும் பிரயாசப்படுங்கள்; மாணவரில் மெய்யான அக்கறை காட்டுங்கள்.
5 ஆரம்பத்திலிருந்தே, குடும்பத்தின் மற்ற அங்கத்தினரையும் படிப்பில் சேர்த்துக்கொள்வது நல்லது. கணவன், மனைவி அல்லது முழு குடும்பங்கள் ஒன்று சேர்ந்து படிப்பதைக் காண்பது ஒரு நேர்த்தியான காரியம். அவர்களுடைய சிநேகிதராயிருங்கள். ஓரளவுக்கு அவர்களுடன் சமூக கூட்டுறவு கொள்வதுங்கூட உதவியாக இருக்கும்.
6 எந்த ஒரு பொருளின் பேரிலும் வாக்குவாதத்துக்குள்ளாவது நல்லதல்ல. நீங்கள் வாக்குவாதத்தில் ஜெயிக்கலாம், ஆனால் படிப்பை இழந்துவிடுவீர்கள். இப்படியாக அந்த நபர் சத்தியத்துக்குள் வரமாட்டார். நாம் படித்துக்கொண்டிருக்கும் அநேக ஆட்கள் பைபிளைப் பற்றி அவ்வளவு அறிந்தில்லை. ஆகையால் அவர்களுக்கு தேவையானது உதவியே, வாக்குவாதங்கள் அல்ல. சிலருக்கு நாம் ஒரு பைபிளை வாங்கிகொடுக்க வேண்டியதாக இருக்கலாம், ஆனால் பெரும்பான்மையினருக்கு அவர்களிடம் இருக்கும் பைபிளை உபயோகிக்க நாம் உதவி கொடுக்க வேண்டியதாயிருக்கும்.
7 நம்முடைய நடத்தையை மாணவர் கவனிப்பார் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். நம்முடைய நடத்தை எப்போதுமே சிறந்ததாக இருக்கிறதா? பைபிளைப் படிப்பவர்கள் நம்மை ஊழியர்களாக கருதுகிறார்கள். நாம், நம்முடைய பங்கில் மெய்யான கிறிஸ்தவ ஊழியர்களாக நம்மை நடத்திக்கொள்ள வேண்டும். (2 கொரி. 6:3) நம்முடைய உடை எப்படி இருக்கிறது? நாம் எப்படி பேசுகிறோம்? இந்த காரியங்களில் சரியான முன்மாதிரியை வையுங்கள். பொதுவாக, நாம் தனிமையில் எதிர் பாலார் ஒருவரை சந்தித்து பேசுவது நல்லதல்ல. நீங்கள் தனிமையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், அவருடைய குடும்பத்தாரில் மற்றவர்கள் வீட்டில் இருக்கையில் செல்வது நல்லது. இது உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும், அதே சமயத்தில் தவறான அபிப்பிராயத்தைத் தவிர்ப்பதாய் இருக்கும்.
8 நம்முடன் படித்துக்கொண்டிருப்பவர்களின் இருதயங்களை எட்டுவது நம்முடைய விருப்பமாகும். இதை நாம் எப்படி செய்வது? தான் படிக்கும் காரியங்களின் பேரில் தியானிப்பதற்கு மாணவருக்கு உதவி செய்யுங்கள். மாணவர் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் சத்தியம் அவருடைய இருதயத்தில் ஆழமாக பதியவைக்க நடைமுறையான கேள்விகளைக் கேளுங்கள். சில சமயங்களில் நாம் இவ்வாறு கேட்கக்கூடும்: “நாம் இப்போது படித்த காரியங்களை நீங்கள் நம்புகிறீர்களா? அதைப்பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? அதை உங்களுடைய வாழ்க்கைக்கு நீங்கள் எப்படி பொருத்துவீர்கள்?” யெகோவா தேவனோடு தங்களுக்கு இருக்கும் உறவோடு சம்பந்தப்படுத்தி சிந்திக்க அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.
9 மாணவர் முன்னேறுகையில், யெகோவா உபயோகிக்கும் அமைப்பைக் குறித்து, விசேஷமாக உள்ளூர் சபைக் கூட்டங்கள் அவற்றின் நேரம் ஆகியவற்றைப் பற்றி அவருக்குச் சொல்ல வேண்டும். முதல் படிப்பிலிருந்தே கூட்டங்களுக்கு வர மாணவருக்கு அழைப்பு கொடுங்கள். அவர் வரும்போது, மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துங்கள். நம்மோடு மட்டுமே அவர் பழகவேண்டும் என்று நினைப்பது மிகவும் தவறு. மாணவர் நம்முடைய சர்வதேச சகோதரத்துவ கூட்டத்தின் ஒரு பாகமாக ஆவதை நாம் காண விரும்புகிறோம். ஆகையால் வேதப்படிப்புகள் மூலம் நாம் இயேசுவுக்கு சீஷர்களை உண்டுபண்ணுவோமாக.