“என் கனவு நனவாகிவிட்டது”
பதினைந்து வருடங்களுக்கு முன்பு எமிலியா என்ற ஒரு சகோதரி ஒழுங்கான பயனியராக இருந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் பயனியர் செய்வதை அவர் நிறுத்த வேண்டியதாயிற்று. பயனியர் ஊழியம் செய்த அந்தச் சந்தோஷமான காலத்தைக் கொஞ்ச நாட்களுக்கு முன் அவர் எண்ணிப் பார்த்திருக்கிறார். அப்புறம் சொல்லவா வேண்டும்... மீண்டும் பயனியர் செய்ய அவருக்கு ஆசை வந்துவிட்டது.
ஆனால், எமிலியாவின் வேலை அவருடைய நேரத்தையெல்லாம் விழுங்கிக்கொண்டிருந்தது. அதனால், வாழ்க்கையில் அவருக்குச் சந்தோஷம் வற்றிப்போயிருந்தது. பொறுக்கமுடியாமல் ஒருநாள் தன்னோடு வேலை செய்பவர்களிடம், “எனக்கு பகுதிநேர வேலை கெடைச்சா ரொம்ப நல்லா இருக்கும்!” என்று வாய்திறந்து சொல்லியே விட்டார். இந்த விஷயம் மேனேஜரின் காதை எட்டியது. தான் கேள்விப்பட்டது உண்மையா என்று எமிலியாவைக் கூப்பிட்டு அவர் கேட்க... எமிலியாவும் ஆமாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த கம்பெனியில் பணிபுரியும் அனைவரும் முழுநேர வேலை செய்ய வேண்டும். அதுதான் கம்பெனியின் சட்டம். எனவே, எமிலியாவுக்கு அந்தச் சலுகை வேண்டுமென்றால், டைரக்டரிடம் போய்ப் பேசும்படி மேனேஜர் சொன்னார். அதற்கு எமிலியாவும் தயாராய் இருந்தார். டைரக்டரிடம் பேச தனக்குத் தைரியம் தரும்படி யெகோவாவிடம் கெஞ்சினார்.
டைரக்டரிடம் எமிலியா மிக நாசுக்காகப் பேசினார். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, தனக்குப் பகுதிநேர வேலை தரும்படி கேட்டார். அதற்கான காரணத்தையும் விளக்கினார்: “நான் ஒரு யெகோவாவின் சாட்சி, பைபிளிலுள்ள விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஜனங்களுக்கு உதவிசெய்றேன். இன்னைக்கு எது சரி, எது தவறு என்று தெரியாம மக்கள் குழம்பிப் போயிருக்காங்க. பைபிளிலுள்ள ஆலோசனைகள் அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டும். மக்களுக்கு நான் உதவி செய்யப் போனாலும், கம்பெனியில் நான் செய்யும் வேலையை அது பாதிக்காம பார்த்துப்பேன். மக்களுக்கு இப்படி உதவிசெய்ய இப்போது எனக்குப் போதுமான நேரம் கிடைப்பதில்லை. அதனால்தான் பகுதிநேர வேலை தரும்படி கேட்கிறேன்.”
எமிலியா சொன்னதையெல்லாம் அந்த டைரக்டர் பொறுமையாகக் கேட்டார். ஒருகாலத்தில், சமூக சேவை செய்ய தனக்கும் ஆசை இருந்ததாகச் சொன்னார். பின்னர் எமிலியாவிடம், “நீங்க சொல்ற காரணம் நியாயமா இருப்பதால உங்க கோரிக்கையை நான் நிறைவேற்றியே ஆகணும். ஆனா, உங்களுக்குச் சம்பளம் குறைவா கிடைக்குமே, பரவாயில்லையா?” என்று கேட்டிருக்கிறார். “பரவாயில்ல, தேவைப்பட்டா, சிக்கனமா வாழ்க்கை நடத்தவும் தயாரா இருக்கேன். ஜனங்களுக்கு உதவி செய்யணும் என்பதுதான் என்னுடைய ஒரே லட்சியம்” என்று எமிலியா சொல்லியிருக்கிறார். “மற்றவர்களுக்காகத் தங்கள் நேரத்தைத் தியாகம் செய்றவங்களுக்கு எப்பவுமே என் மனசுல தனி இடம் இருக்கு” என்றார் அந்த டைரக்டர்.
இதுவரை அந்த கம்பெனியில் வேலை செய்த யாருக்குமே இப்படிப்பட்ட ஒரு சலுகை கிடைத்ததில்லை. ஆனால், நம்முடைய சகோதரிக்குக் கிடைத்திருக்கிறது. இப்போது, வாரத்தில் 4 நாட்கள் அவர் வேலை செய்தால் போதும். ஆனாலும், ஏறக்குறைய முன்பு வாங்கியளவு சம்பளத்தையே இப்போதும் வாங்குகிறார்! “என் கனவு நனவாகிவிட்டது, இப்போது மீண்டும் நான் ஓர் ஒழுங்கான பயனியர்!” என்கிறார் எமிலியா.
பயனியராகச் சேவை செய்ய... அல்லது நிறுத்திவிட்ட பயனியர் ஊழியத்தை மீண்டும் ஆரம்பிக்க... வாழ்க்கையில் என்ன மாற்றங்களைச் செய்யலாமென யோசிக்கிறீர்களா?
[பக்கம் 32-ன் சிறு குறிப்பு]
“மற்றவர்களுக்காகத் தங்கள் நேரத்தைத் தியாகம் செய்றவங்களுக்கு எப்பவுமே என் மனசுல தனி இடம் இருக்கு” என்றார் அந்த டைரக்டர்