வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
இயேசு கிறிஸ்து கழுமரத்தில் அறையப்பட்ட சரியான மணிநேரத்தைத் திட்டவட்டமாகச் சொல்ல முடியுமா?
இயேசுவின் மரணத்தைப் பற்றிச் சுவிசேஷ எழுத்தாளரான மாற்குவும் அப்போஸ்தலன் யோவானும் கடவுளுடைய தூண்டுதலால் எழுதிய பதிவுகளில் முரண்பாடு இருப்பதுபோல் தோன்றுவதாலேயே இந்தக் கேள்வி எழுகிறது. படைவீரர்கள் “அவரைக் கழுமரத்தில் அறைந்தபோது மூன்றாம் மணிநேரமாக இருந்தது” என்று மாற்கு எழுதினார். (மாற். 15:25) கழுமரத்தில் அறையும்படி இயேசுவை யூதர்களிடம் பிலாத்து ஒப்படைத்தபோது, “சுமார் ஆறாம் மணிநேரமாக இருந்தது” என்று யோவான் எழுதினார். (யோவா. 19:14-16) முரண்பாடுபோல் தோன்றும் இந்தக் குறிப்பின்பேரில் பைபிள் விரிவுரையாளர்கள் பல்வேறு விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள். என்றாலும், இந்த இரண்டு பதிவுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளக்க பைபிளில் போதுமான விவரம் இல்லை. இருப்பினும், அன்று ஜனங்கள் எப்படி மணிநேரத்தைக் கணக்கிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்வது நமக்கு உதவியாக இருக்கும்.
முதல் நூற்றாண்டில் யூதர்கள் பகற்பொழுதை 12 மணிநேரமாகப் பிரித்தார்கள்; சூரிய உதயத்திலிருந்து அதைக் கணக்கிட்டார்கள். (யோவா. 11:9) ‘மூன்றாம் மணிநேரம்’ காலை எட்டு மணிமுதல் ஒன்பது மணிவரையிலும், ‘ஆறாம் மணிநேரம்’ பதினோறு மணிமுதல் நண்பகல் பன்னிரண்டு மணிவரையிலும் நீடித்தன. வருடம் முழுவதிலும் சூரிய உதயத்தின் நேரமும் அஸ்தமனத்தின் நேரமும் மாறுபட்டது உண்மைதான். அதனால், பருவகாலத்தைப் பொறுத்து பகற்பொழுதின் நேரம் மாறுபட்டது. அதோடு, சூரியன் இருக்கும் இடத்தை வைத்தே பகற்பொழுதின் நேரம் கணக்கிடப்பட்டது. எனவே, அது குத்துமதிப்பாகவே இருந்தது. பொதுவாக கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம், சம்பவங்கள் நடந்த மணிநேரத்தைப் பற்றிச் சொல்கையில் மூன்றாம், ஆறாம், அல்லது ஒன்பதாம் மணிநேரத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது; அவற்றைப் பெரும்பாலும் தோராயமாகவே குறிப்பிடுகிறது. (மத். 20:3, 5; அப். 10:3, 9, 30) சில சமயங்களில் ‘ஏழாம் மணிநேரம்’ போன்ற திட்டவட்டமான நேரம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது; ஒரு சம்பவத்தை விளக்குகையில் மணிநேரத்தைத் திட்டவட்டமாகச் சொல்வது அவசியமாக இருந்தபோது மட்டுமே அப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது.—யோவா. 4:52.
இயேசு பூமியில் வாழ்ந்த கடைசி நாளில் சம்பவங்கள் எந்த மணிநேரத்தில் நிகழ்ந்தன என்பதைச் சுவிசேஷப் பதிவுகள் ஒரேபோல் சொல்கின்றன. குருமார்களும் மூப்பர்களும் பொழுது விடிந்தபின் கூடினார்கள்... பிறகு ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்துவிடம் இயேசுவை அழைத்துச் சென்றார்கள்... என்பதை நான்கு சுவிசேஷங்களும் குறிப்பிடுகின்றன. (மத். 27:1; மாற். 15:1; லூக். 22:66; யோவா. 18:28) ஆறாம் மணிநேரத்தில் இயேசு ஏற்கெனவே கழுமரத்தில் அறையப்பட்டிருந்ததாகவும், “ஒன்பதாம் மணிநேரம்வரை” இருள் சூழ்ந்திருந்ததாகவும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூவருமே குறிப்பிடுகிறார்கள்.—மத். 27:45, 46; மாற். 15:33, 34; லூக். 23:44.
சாட்டையால் அடிப்பது கழுமரத்தில் அறையப்படும் தண்டனையின் ஒரு பாகமாகக் கருதப்பட்டது; இது, இயேசு எந்த மணிநேரத்தில் கழுமரத்தில் அறையப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு முக்கியக் குறிப்பாக இருக்கிறது. சில சமயங்களில் சாட்டையடி அவ்வளவு கொடூரமாக இருந்ததால் குற்றவாளி இறந்தே போனான். இயேசுவும் மிகப் பயங்கரமாக அடிக்கப்பட்டிருந்ததால்தான், அவருடைய கழுமரத்தை அவரே சுமக்க முடியாமல் வேறொருவர் சுமக்க வேண்டியதாயிற்று. (லூக். 23:26; யோவா. 19:17) சாட்டையால் அடிப்பது கழுமரத்தில் அறையப்படுவதன் ஆரம்பக் கட்டமாகக் கருதப்பட்டிருந்தால், அதற்குக் கொஞ்ச நேரம் கழித்தே இயேசு கழுமரத்தில் ஆணி அடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, இயேசு கழுமரத்தில் அறையப்பட்ட நேரத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் குறிப்பிட்டிருக்கலாம்; அவர்கள் எந்தக் கட்டத்தில் இந்தச் சம்பவத்தைக் கவனித்தார்களோ அதைப் பொறுத்தே வெவ்வேறு நேரத்தைக் குறிப்பிட்டிருக்கலாம்.
மற்ற சுவிசேஷ எழுத்தாளர்கள் தங்கள் பதிவை எழுதி பல பத்தாண்டுகளுக்குப் பிறகே அப்போஸ்தலன் யோவான் தன்னுடைய பதிவை எழுதினார். எனவே அவர் மற்ற பதிவுகளை வாசித்திருப்பார். மாற்கு குறிப்பிட்ட மணிநேரத்திலிருந்து மாறுபடுவதுபோல் தோன்றும் ஒரு மணிநேரத்தை யோவான் குறிப்பிட்டார் என்பது உண்மைதான். என்றாலும், மாற்கு எழுதியதைப் பார்த்து அவர் அப்படியே எழுதவில்லை என்பதை இது தெளிவாக்குகிறது. யோவானும்சரி மாற்குவும்சரி, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலாலேயே எழுதினார்கள். அவர்களுடைய பதிவுகளில் காணப்படும் வித்தியாசத்தை விளக்க பைபிளில் போதுமான தகவல் இல்லாதபோதிலும் சுவிசேஷப் பதிவுகளை நாம் நம்பலாம்.