பள்ளத்தாக்கிலே ஒரு பெயர்
செயின்ட் மோரிஸைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருக்கலாம், ஏனென்றால் இது உலகப் புகழ்மிக்க விடுமுறைகால வாசஸ்தலம்; சுவிட்சர்லாந்திலுள்ள எங்கடின் பள்ளத்தாக்கில் இது குடிகொண்டுள்ளது. வெகு காலமாய் மக்களை ஈர்த்திருக்கிற இடங்களில் ஒன்றுதான் இயற்கை வனப்புமிக்க இந்தப் பள்ளத்தாக்கு; இத்தாலி நாட்டு எல்லைக்கு அருகே சுவிட்சர்லாந்தின் தென்கிழக்கு முனையில் பனிபடர்ந்த ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின் மத்தியில் இது அமைந்துள்ளது. இங்குதான் சுவிஸ் தேசிய பூங்காவும் வீற்றிருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தில் உள்ள பல்வகை தாவரங்களும் விலங்குகளும் நம் மகத்தான படைப்பாளர் யெகோவாவின் புகழைப் பறைசாற்றுகின்றன. (சங். 148:7-10) பதினேழாம் நூற்றாண்டின் மத்திப கால பாரம்பரியத்தைக் கண்முன் நிறுத்தும் சில வீடுகளும் கடவுளுக்குப் புகழ் சேர்க்கின்றன.
இந்தப் பள்ளத்தாக்கில் இருக்கிற வீடுகளில் காணப்படும் வினோதமான ஒரு விஷயம் உங்கள் கண்களில் படலாம். இங்குள்ள வீடுகளின் முகப்பில், உதாரணமாக வாயிற்கதவில், கடவுளுடைய பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைச் சாதாரணமாகப் பார்க்கலாம். வீட்டின் வெளிப்புறத்தை எழுத்துக்களால் அலங்கரிப்பது கடந்த நூற்றாண்டுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பாரம்பரியம். உதாரணத்திற்கு, சுவரில் பல வர்ணங்களில் எழுதுவது, சாந்து பூசப்பட்ட சுவரில் எழுத்துக்களைச் செதுக்குவது அல்லது கல்வெட்டில் பொறிப்பது பாரம்பரிய பழக்கம். பேவர் என்ற கிராமத்திலுள்ள ஒரு வீட்டின் படத்தைக் கீழே நீங்கள் காணலாம். அங்கு பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களின் மொழிபெயர்ப்பு இதோ: “கி.பி 1775. யெகோவாவே ஆதி, யெகோவாவே அந்தம். எல்லாம் அவரால் படைக்கப்பட்டது, அவரின்றி எதுவுமில்லை.” ஆம், இந்தப் பழங்கால எழுத்துப் பொறிப்பில் கடவுளுடைய பெயர் இருமுறை காணப்படுகிறது.
மாடூலின் என்ற கிராமத்தில் இதைவிட பழமையான எழுத்துப் பொறிப்பை நீங்கள் காணலாம். அதில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “சங்கீதம் 127. யெகோவா வீட்டைக் கட்டாராகில், கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. லூக்யுஸ் ரூமேடியஸ். கி.பி. 1654.”
இந்தப் பள்ளத்தாக்கிலுள்ள வீடுகளில் ஏன் கடவுளுடைய பெயர் பளிச்செனக் காணப்படுகிறது? மறுமலர்ச்சி காலத்தின்போது, ரோமான்ச் மொழியில், அதாவது எங்கடினில் பேசப்பட்ட லத்தீன் வடிவிலான மொழியில், பைபிள் பிரசுரிக்கப்பட்டது. சொல்லப்போனால், அந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் புத்தகமும் அதுதான். கடவுளுடைய வார்த்தையில் வாசித்த விஷயங்கள் அந்த ஊர் மக்கள் பலருடைய மனதைத் தொட்டதால், வீடுகளின் வெளிப்புறத்தில் தங்களுடைய பெயர்களை மட்டுமல்ல, கடவுளுடைய பெயரைக் கொண்ட பைபிள் வசனங்களையும் பொறித்தார்கள்.
ஆம், பல நூற்றாண்டுகள் கடந்த பின்பும் இன்றுவரை இந்த எழுத்துப் பொறிப்புகள் யெகோவாவின் பெயரைப் பறைசாற்றிக் கொண்டும் அவரைப் புகழ்ந்து கொண்டும் இருக்கின்றன. இந்தப் பள்ளத்தாக்கிற்கு வரும் பார்வையாளர்களும் அங்குள்ளவர்களும் மகத்தான கடவுள் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு, அவருடைய பெயர் தாங்கிய மற்றொரு கட்டிடத்தைப் பார்வையிட அழைக்கப்படுகிறார்கள். அந்தக் கட்டிடம்தான் பேவரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம்.
[பக்கம் 7-ன் படத்திற்கான நன்றி]
© Stähli Rolf A/age fotostock