“பழைய தோல்பைகளில் யாருமே புதிய திராட்சமதுவை ஊற்றி வைக்க மாட்டார்கள்” என்று இயேசு ஏன் சொன்னார்?
பண்டையக் காலங்களில் திராட்சமதுவை மக்கள் தோல்பைகளில் ஊற்றி வைப்பது வழக்கம். (யோசு. 9:13) ஆட்டுக்குட்டிகள் போன்ற வீட்டு விலங்குகளின் தோலை அப்படியே உரித்தெடுத்து இந்தப் பைகளைத் தயாரிப்பார்கள். இதற்காக, விலங்கின் தலையையும் கால்களையும் வெட்டிவிட்டு வயிற்றுப் பகுதியிலுள்ள தோல் கிழிந்துவிடாமல் கவனமாக உரித்தெடுப்பார்கள். அடுத்து அந்தத் தோலைப் பதனிடுவார்கள்; பிறகு, கழுத்துப் பகுதியையோ ஒரு கால் பகுதியையோ திறப்புக்காக விட்டுவிட்டு மற்ற எல்லாப் பகுதியையும் தைத்துவிடுவார்கள். அந்தத் திறப்பை ஒரு தக்கையால் மூடுவார்கள் அல்லது சிறிய கயிறால் கட்டுவார்கள்.
சில காலத்திற்குப் பிறகு, அந்தத் தோல் விறைப்பாகி விடும்; அதற்கு நெகிழும் தன்மை இருக்காது. இப்படிப்பட்ட பழைய தோல்பையில் புதிய திராட்சமதுவை ஊற்றி வைக்க முடியாது. ஏனென்றால், திராட்சமது புளித்துப் பொங்கும்போது அந்தத் தோல்பை வெடித்துவிடலாம். மாறாக, புதிய தோல்பையோ நெகிழும் தன்மையுடையதாக இருக்கும்; புதிய திராட்சமது எவ்வளவுதான் புளித்துப் பொங்கினாலும் பை வெடிக்காது. அதனால்தான், இயேசு தம்முடைய காலத்தில் வாழ்ந்த எல்லாருக்கும் பரிச்சயமான ஒரு விஷயத்தைச் சொன்னார். அதாவது, பழைய பைகளில் புதிய திராட்சமதுவை யாரேனும் ஊற்றி வைத்தால் என்ன ஆகும் என்பதைச் சொன்னார்: “புதிய திராட்சமது அந்தப் பைகளை வெடிக்கச் செய்துவிடும்; அப்போது திராட்சமதுவும் கொட்டிவிடும், பைகளும் வீணாகிவிடும். ஆகவே, புதிய திராட்சமதுவை புதிய தோல்பைகளில் ஊற்றி வைக்க வேண்டும்.”—லூக். 5:37, 38.