ரகசியம் 5
உங்கள் ஆன்மீகப் பசியை திருப்தி செய்யுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது? “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.”—மத்தேயு 5:3.
என்ன சவால்? இன்று புற்றீசல் போல் ஆயிரக்கணக்கான மதங்கள் உலகெங்கும் பெருகி வருகின்றன; ஆனால், ஆன்மீகப் பசியை எப்படித் திருப்தி செய்துகொள்ளலாம் என்பதைக் குறித்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகச் சொல்கின்றன. ஆனால், இவற்றில் எது உண்மை... எது இறைவன் வழியில் செல்கிறது... என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? கடவுள் நம்பிக்கை... இறை பக்தி... எல்லாம் நம் பகுத்தறிவுக்கு எட்டாதது, தீமைக்கு வித்திடுவது என புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சிலர் அடித்து சொல்கிறார்கள். பிரபல நாத்திகர் ஒருவரின் கருத்துகளை வலியுறுத்தி மேக்லின்ஸ் என்ற பத்திரிகை இவ்வாறு ரத்தினச்சுருக்கமாகச் சொல்கிறது: “அறிவியலுக்கு அப்பாற்பட்ட, நம் புத்திக்கு எட்டாத இந்த கிறிஸ்தவ மதக் கோட்பாடு . . . நம்முடைய வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிவிடுகிறது. வன்முறையில் ஈடுபடவும் நம்மைத் தூண்டுகிறது.”
நீங்கள் என்ன செய்யலாம்? கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பாருங்கள். (ரோமர் 1:20; எபிரெயர் 3:4) பின்வரும் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிப்பதற்கான உங்கள் ஆர்வத்தை அணைத்துப்போட யாரையும் அனுமதிக்காதீர்கள்: வாழ்க்கையின் நோக்கம் என்ன? இறப்பிற்கு பின் வாழ்வு உண்டா? ஏன் இவ்வளவு துன்பம்? கடவுள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்? இந்தக் கேள்விகளுக்குத் திருப்திகரமான பதிலைத் தெரிந்து கொள்ளும்போதுதான் வாழ்வில் என்றும் திருப்தி காண முடியும்.
ஆனால், மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடாதீர்கள். உங்களுடைய ‘சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தி,’ கடவுளுக்குப் பிரியமானது எது என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள் என்று மறைநூல் சொல்கிறது. (ரோமர் 12:1, 2) உங்கள் முயற்சிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். பைபிளைப் படிக்க நேரம் ஒதுக்கி அதன் அறிவுரைகளைக் கடைப்பிடித்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம், கவலையைக் குறைக்கலாம், மகிழ்ச்சியைக் கூட்டலாம். இது ஒன்றும் வெற்று வாக்குறுதி அல்ல. கடவுளைப் பற்றி... அவருடைய நோக்கங்களைப் பற்றி... பல்வேறு பின்னணியைச் சேர்ந்த லட்சோப லட்ச மக்கள் கற்று பயனடைந்திருக்கிறார்கள்.
பைபிள் தரும் ஞானமான அறிவுரைகளைப் பின்பற்றி பயனடையும்போது கடவுள்மீது உங்கள் பக்தி அதிகமாகும். பைபிள் விஷயங்களை உங்களுக்குச் சொல்லித்தர யெகோவாவின் சாட்சிகள் ஆவலாய் இருக்கிறார்கள். அப்படி அவர்களோடு பைபிள் விஷயங்களைக் கற்றுக்கொள்ளும்போது அப்போஸ்தலன் பவுல் சொன்ன பின்வரும் வார்த்தைகளை நீங்களும் ஆமோதிப்பீர்கள்: ‘தேவபக்தியோடுகூட, போதுமென்ற மனம் உள்ளவர்களுக்கே அது மிகுந்த [திருப்தி].’—1 தீமோத்தேயு 6:6. (w10-E 11/01)
[பக்கம் 8-ன் படம்]
கடவுளுக்குப் பிரியமானது எது என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்