“ஆன்மீக வளர்ச்சியும் பிள்ளைகளின் உரிமையும்”
டிசம்பர் 9, 2008-ல், பிள்ளைகளின் உரிமைகளுக்கான சுவீடன் நாட்டுக் கழகம், “ஆன்மீக வளர்ச்சியும் பிள்ளைகளின் உரிமையும்” என்ற தலைப்பில் ஒரு விசேஷ கருத்தரங்கை நடத்தியது. அதில், சுவீடன் நாட்டு சர்ச்சையும் பிற கிறிஸ்தவப் பிரிவுகளையும் இஸ்லாம் மதத்தையும் மனிதநேய இயக்கத்தையும் சேர்ந்த பிரதிநிதிகள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்கள்.
அவர்களில் ஒரு பாதிரி, “பிள்ளைகளின் ஆன்மீக வளர்ச்சிக்கு பைபிள் பதிவுகள் எந்தளவு முக்கியம் என்பதை விவரிக்க வார்த்தைகளே இல்லை” என்று சொன்னார். பைபிள் பதிவுகள் பிள்ளைகளின் ஆன்மீகத் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்கின்றன?
“பிள்ளைகள் தாங்களாகவே ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பதற்கான தகவல்களை பைபிள் வசனங்களும் பதிவுகளும் அளிக்கின்றன” என்று அந்தப் பாதிரி சொன்னார். “ஆதாம்-ஏவாள், காயீன்-ஆபேல், தாவீது-கோலியாத், இயேசுவின் பிறப்பு, வரி வசூலிப்பவனான சகேயு, கெட்ட குமாரன் கதை, நல்ல சமாரியன் கதை” ஆகிய பதிவுகளை அவர் பட்டியலிட்டார்; “இவை, துரோகம் செய்வது, மன்னிப்பது, மனந்திரும்புவது, வெறுப்பது, கீழ்த்தரமாக நடப்பது, தவறுக்கு ஈடு செய்வது, சகோதரர்களிடம் தன்னலமற்ற அன்பைக் காட்டுவது போன்ற முக்கியமான விஷயங்களில் பிள்ளைகளுக்குப் பாடம் புகட்டும். இந்தப் பாடங்களை வாழ்க்கையில் பின்பற்ற முடியும், செயல்படுத்த முடியும், நடைமுறைப்படுத்த முடியும்” என்று அவர் சொன்னார்.
பைபிளை வாசிக்கும்படி பிள்ளைகளை ஊக்குவிப்பது நல்லதுதான். என்றாலும், அப்படி வாசிப்பதை ‘தாங்களாகவே ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து’ சரியான பாடங்களைக் கற்றுக்கொள்ளும் திறன் உண்மையிலேயே அவர்களுக்கு இருக்கிறதா?
பெரியவர்களுக்குக்கூட பைபிள் பதிவுகளை விளக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு, ‘தானாகவே ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து’ ஆன்மீக விஷயங்களை சரிவரப் புரிந்துகொள்ள முடியாதிருந்த ஒருவரைப் பற்றி பைபிள் சொல்கிறது. அவர் எத்தியோப்பிய அதிகாரியாக இருந்தார். அவர் ஏசாயா தீர்க்கதரிசனத்தைப் படித்துக்கொண்டிருந்த போதிலும் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அதை அவர் புரிந்துகொள்ள விரும்பியதால், சீடனாகிய பிலிப்பு கொடுத்த விளக்கத்தை மனதார ஏற்றுக்கொண்டார். (அப். 8:26-40) அந்த எத்தியோப்பியனைப் போல் இன்று எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நம் எல்லாருக்குமே, முக்கியமாகப் பிள்ளைகளுக்கு, பைபிள் பதிவுகளை யாராவது விளக்கிச் சொல்ல வேண்டியுள்ளது.
“பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்” என பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (நீதி. 22:15) பிள்ளைகளுக்கு வழிநடத்துதலும் அறிவுரையும் தேவை; பைபிளிலிருந்தும் சபைக் கூட்டங்களில் கற்றுக்கொடுக்கப்படுகிற விஷயங்களிலிருந்தும் நன்னெறியையும் ஆன்மீகக் கல்வியையும் அவர்களுக்குப் புகட்ட வேண்டிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட பயிற்சியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை பிள்ளைகளுக்கு இருக்கிறது. ஆன்மீக வளர்ச்சிக்கு பைபிளின் அடிப்படையில் உறுதியான அஸ்திவாரம் அமைத்துக்கொள்ள சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு உதவ வேண்டும்; அப்போதுதான் அவர்கள், ‘முதிர்ச்சி அடைந்தவர்களை’ போல், அதாவது ‘நன்மை எது, தீமை எது எனக் கண்டறிய தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவித்திருக்கிறவர்களை’ போல் ஆவார்கள்.—எபி. 5:14.