உங்கள் நம்பிக்கையைப்பற்றி மற்றவர்களிடம் பேச நீங்கள் தயாரா?
உங்களுடைய நம்பிக்கையைப்பற்றி மற்றவர்களிடம் பேசியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையை நீங்கள் எப்போதாவது எதிர்ப்பட்டிருக்கிறீர்களா? பராகுவேயில் வசிக்கும் 16 வயது இளம் சகோதரி சூசானாவின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவள் ஓர் உயர்நிலைப் பள்ளி மாணவி. வகுப்பில் ஒருநாள் நன்னெறிகளைப்பற்றி கலந்தாலோசிக்கையில் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய பேச்சு எழுந்தது. யெகோவாவின் சாட்சிகள், “பழைய ஏற்பாட்டையோ” இயேசு கிறிஸ்துவையோ மரியாளையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்களென மாணவர்கள் சிலர் சொன்னார்கள். சாட்சிகள் மதவெறியர்கள் என்றும், மருத்துவச் சிகிச்சையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக உயிரை விடக்கூட தயங்காதவர்கள் என்றும் சிலர் சொன்னார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
சூசானா யெகோவாவிடம் ஜெபித்துவிட்டு தன் கையை உயர்த்தினாள். அப்போது அந்த வகுப்பு முடியவிருந்தது. எனவே, தன் நம்பிக்கைகளைப்பற்றி விளக்க தனக்கொரு வாய்ப்பு அளிக்கும்படி ஆசிரியரிடம் அவள் அனுமதி கேட்டாள். அதற்கு ஆசிரியர் உடனே சம்மதம் தெரிவித்தார். அடுத்த இரண்டு வாரங்களுக்கு அந்த பேச்சை அளிப்பதற்காக சூசானா தயாரித்தாள்; யெகோவாவின் சாட்சிகள் அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன? என்ற சிற்றேட்டை அதற்காகப் பயன்படுத்தினாள்.
பேச்சுக் கொடுப்பதற்கான நாள் வந்தது. யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை நாம் ஏற்றிருப்பதற்கான காரணத்தை சூசானா விளக்கினாள். நம்முடைய எதிர்கால நம்பிக்கையையும் நாம் இரத்தம் ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கான காரணத்தையும் அவள் விளக்கினாள். பிறகு ‘கேள்விகள் ஏதாவது இருந்தால் தாராளமாக கேட்கலாம்’ என்று மாணவர்களிடம் அவள் கூறினாள். பெரும்பாலான மாணவர்கள் கை தூக்கினார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இந்த இளம் பெண் பைபிளிலிருந்து பதிலளித்ததைப் பார்த்து ஆசிரியரே அசந்துபோனார்!
“ஒருசமயம் நான் ராஜ்ய மன்றத்திற்குப் போயிருந்தேன், அங்கு ஒரு சிலைகூட கண்ணில்படவில்லை” என்று ஒரு மாணவன் சொன்னான். அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள ஆசிரியர் விரும்பினார். சங்கீதம் 115:4-8 மற்றும் யாத்திராகமம் 20:4-ஐ சூசானா வாசித்துக்காட்டினாள். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஆசிரியர், “சிலைகளை வைத்திருப்பது தவறென்று பைபிள் இவ்வளவு தெளிவாகச் சொல்கிறதே, அப்படியிருக்க, எங்கள் சர்ச்சுகளில் மட்டும் ஏன் இவ்வளவு சிலைகளை வைத்திருக்கிறார்கள்?” என்று கேட்டார்.
இந்தக் கேள்வி-பதில் கலந்துரையாடல் 40 நிமிடங்களுக்கு நீடித்தது. ‘இரத்தமின்றி சிகிச்சை—மருத்துவம் இந்தச் சவாலை சந்திக்கிறது என்ற ஆங்கில வீடியோவை பார்க்க விரும்புகிறீர்களா?’ என்று சூசானா மாணவர்களைக் கேட்டபோது அவர்கள் அனைவரும் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். ஆகவே, அடுத்த நாள் அந்த வீடியோவைப் பார்ப்பதற்காக ஆசிரியர் ஏற்பாடு செய்தார். வீடியோவைப் பார்த்த பிறகு, யெகோவாவின் சாட்சிகளில் சிலர் ஏற்றுக்கொள்கிற மாற்று சிகிச்சை முறைகளைப்பற்றி சூசானா விளக்கினாள். அதைக் கேட்ட ஆசிரியர் “இத்தனை மாற்று சிகிச்சை முறைகள் இருக்கிறதென்று எனக்குத் தெரியவே தெரியாதே. இரத்தமில்லா சிகிச்சையில் இவ்வளவு நன்மை இருக்கிறதென்றும் எனக்குத் தெரியாதே” என்றார். அதோடு, “இந்தச் சிகிச்சைகள் யெகோவாவின் சாட்சிகளுக்கு மட்டும்தானா?” என்றும் கேட்டார். அது எல்லோருக்கும் கிடைக்கும் என்று சூசானா பதிலளித்தபோது ஆசிரியர் இவ்வாறு சொன்னார்: “அடுத்த முறை யெகோவாவின் சாட்சிகள் எங்கள் வீட்டுக்கு வரும்போது நான் கண்டிப்பாக அவர்களுடன் பேசுவேன்.”
சூசானா அந்தப் பேச்சை 20 நிமிடங்களுக்காகத்தான் தயாரித்திருந்தாள்; ஆனால் அது மூன்று மணிநேரத்திற்கு நீடித்தது. ஒரு வாரத்திற்குப் பின்னர், சர்ச்சில் அங்கத்தினர்களாக இருக்கும் மாணவர்களும் தங்களுடைய நம்பிக்கைகளைக் குறித்து பேச்சுக் கொடுத்தார்கள். அவர்களுடைய பேச்சின் முடிவில் அநேக கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், அவர்களால் சரியாகப் பதிலளிக்க முடியவில்லை. “யெகோவாவின் சாட்சியான சூசானாவால் தன்னுடைய நம்பிக்கைகளைக் குறித்து விளக்க முடிந்ததே, ஏன் உங்களால் மட்டும் முடியவில்லை?” என்று ஆசிரியர் கேட்டார்.
“அவர்கள் பைபிள் படிக்கிறார்கள், நாங்கள் படிப்பதில்லை” என்று மாணவர்கள் பதிலளித்தார்கள்.
“நீங்கள் நிஜமாகவே பைபிளைப் படிக்கிறீர்கள், அதன்படி நடக்கவும் முயற்சி செய்கிறீர்கள், உங்களை பாராட்டியே ஆகவேண்டும்” என்று சூசானாவைப் பார்த்து ஆசிரியர் சொன்னார்.
சூசானா வாய் திறவாமல் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கிருந்த தப்பான அபிப்பிராயத்தைப் போக்குவதற்காக அவள் தைரியமாகப் பேசினாள். இதன்மூலம், சீரியர்களால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேல் சிறுமியின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றினாள். கொடிய தோல் வியாதியால் அவதிப்பட்ட சீரியரின் தளபதியான நாகமானின் வீட்டில் இந்தச் சிறு பெண் வேலை செய்தாள். “என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்” என்று பெயர் குறிப்பிடப்படாத அந்தச் சிறுமி தன் எஜமானியிடம் தைரியமாகச் சொன்னாள். மெய் கடவுளைப்பற்றி பேசியே ஆகவேண்டுமென்று அந்தச் சிறுமி நினைத்தாள். இதனால், அவளுடைய எஜமானரான நாகமான் யெகோவாவை வழிபடுபவராக மாறினார்.—2 இரா. 5:3, 17.
அதுபோலவே, யெகோவாவையும் அவருடைய மக்களையும்பற்றி பேசியே தீரவேண்டுமென்று சூசானாவும் நினைத்தாள். அவளுடைய நம்பிக்கைகளைக் குறித்து மற்றவர்கள் தவறாகப் பேசியபோது, அதைப் பொய்யென்று நிரூபிக்க அவள் முன்வந்தாள். இதன்மூலம் பைபிளின் இக்கட்டளைக்கு அவள் கீழ்ப்படிந்தாள்: “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல [அதாவது, பதில்சொல்ல] எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” (1 பேதுரு 3:15) உங்களுடைய நம்பிக்கையைப்பற்றி மற்றவர்களிடம் சொல்ல நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அப்படி ஒரு சந்தர்ப்பம் எழுந்தால், அதைச் செய்வதற்கு நீங்கள் முன்வருவீர்களா?
[பக்கம் 17-ன் படம்]
உங்களுடைய நம்பிக்கையைப்பற்றி பேச இவை உதவும்