கடவுள் உங்களைப் பார்க்கிறாரா?
உ ன்னதப் படைப்பாளரான யெகோவாவால் உங்களைப் பார்க்க முடியுமா? நிச்சயம் பார்க்க முடியும். இதில் எந்தச் சந்தேகமுமில்லை! பைபிளில் காணப்படும் இந்த எளிய நியாயவிவாதத்தைக் கொஞ்சம் கவனியுங்கள்: “கண்ணை உருவாக்கினவர் காணாரோ?” (சங்கீதம் 94:9) யெகோவா பார்க்கும் விதம் மனிதர்களுடையதைவிட மிக மேலானது. அவரால் நம்முடைய வெளித்தோற்றத்தை மட்டுமல்ல, ‘இருதயங்களையும் சோதிக்க’ முடியும்; அதோடு, நம் ‘இருதயங்களை நிறுத்து [அதாவது, எடைபோட்டு] பார்க்கவும்’ அவரால் முடியும். (நீதிமொழிகள் 17:3; 21:2) ஆம், நம்முடைய யோசனைகளையும் செயல்பட தூண்டுவிக்கிற எண்ணங்களையும் அடிமனதின் ஆசைகளையும் மதிப்பிடும் சக்தி அவருக்கு இருக்கிறது.
வாழ்க்கையில் நாம் எதிர்ப்படும் கஷ்டநஷ்டங்களை யெகோவா நன்கு அறிந்திருக்கிறார். அதுமட்டுமா, நாம் கெஞ்சி கேட்கும் வேண்டுதல்களுக்கும் அவர் பதில் அளிக்கிறார். சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.” (சங்கீதம் 34:15, 18) யெகோவா நம்முடைய சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதோடு இருதயப்பூர்வ வேண்டுதல்களுக்கும் செவிசாய்க்கிறார் என்பதை அறிவது நமக்கு ஆறுதல் அளிக்கிறதல்லவா!
கும்மிருட்டில், அதாவது மறைவிடத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதையும் யெகோவா தேவன் அறிந்திருக்கிறார். “சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்” என்பது உண்மைதான். (எபிரெயர் 4:13) எனவே, நம்முடைய செயல்கள் நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் கடவுள் அவற்றைப் பார்க்கிறார். (நீதிமொழிகள் 15:3) உதாரணத்திற்கு, ஆதியாகமம் 6:8, 9 சொல்வதைக் கவனியுங்கள்: “நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது,” அவர் ‘தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தார்.’ சந்தேகமில்லாமல், நோவாவிற்கு யெகோவாவின் அங்கீகாரமும் ஆசீர்வாதமும் கிடைத்தன. ஏனெனில், அவர் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார். மேலும், யெகோவாவுடைய நீதியான நியமங்களை அவர் கடைப்பிடித்தார். (ஆதியாகமம் 6:22) ஆனால், நோவாவின் காலத்தில் வாழ்ந்த ஜனங்கள் அவருக்கு நேர்மாறாக இருந்தார்கள். கொடூரமானவர்களாகவும், ஒழுக்கம் கெட்டவர்களாகவும் இருந்தார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு கடவுள் கண்டுங்காணாதவர்போல் இருந்தாரா? இல்லவே இல்லை. அவர், “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் . . . கண்டார்.” அதனால்தான், முடிவில் கெட்ட ஜனங்களை அழித்தார். ஆனால், நோவாவையும் அவருடைய குடும்பத்தாரையும் பத்திரமாகக் காப்பாற்றினார்.—ஆதியாகமம் 6:5; 7:23.
யெகோவாவின் இரக்கப் பார்வை உங்கள்மீது விழுமா? நிச்சயம் விழும். ஏனெனில், “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.” (2 நாளாகமம் 16:9) அவர் வெகு விரைவில் மறுபடியுமாக எல்லா கெட்டவர்களையும் வேரோடு பிடுங்கிப் போடுவார். சாந்த குணமுள்ளவர்களையோ காப்பாற்றுவார்.—சங்கீதம் 37:10, 11.