சோகத்தை வென்ற ஒரு தாயின் விசுவாசம்
“இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால், நான் இனி உங்களோடு இல்லையென்றும் அறுவைச் சிகிச்சையிலிருந்து நான் பிழைக்கவில்லையென்றும் அர்த்தம்.”
ஒ ரு தாய் தன்னுடைய மூன்று மகள்களுக்கு எழுதிய கடிதத்தின் ஆரம்ப வரிகள்தான் இவை. அவருடைய பெயர் கார்மென், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர். அவருடைய மகள்களுக்கு முறையே 25, 19, 16 வயது. வருத்தகரமாக, அந்த அறுவை சிகிச்சை பலனளிக்காமல் கார்மென் இறந்து விட்டார்.
இதுபோன்ற வேதனை மிகுந்த சூழலில் மூன்று மகள்களை விட்டுச் செல்வதென்றால், யாராக இருந்தாலும் அவருடைய இருதயம் நொறுங்கிப்போகத்தான் செய்யும். என்றாலும், யெகோவாமீதும் அவருடைய வாக்குறுதிகள்மீதும் இந்தத் தாய் வைத்திருந்த உறுதியான விசுவாசம் அந்தச் சோகத்தை வென்றுவிட்டதையும், அது அவருக்கு மன அமைதியைக் கொடுத்ததையும் நெஞ்சைத்தொடும் அவருடைய கடிதத்தில் தெளிவாகக் காணமுடிகிறது. அவர் தன்னுடைய மகள்களுக்குச் சொன்னதைக் கவனியுங்கள்.
“நான் உங்களை மனதார நேசிப்பதை முதலில் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். . . . எந்தத் தாயுமே உங்களைப்போன்ற பிள்ளைகளைப் பெறத்தான் ஏங்குவாள். உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
“கடவுள் வாக்குக் கொடுத்திருக்கும் புதிய உலகம் வரும்வரை நான் உங்களோடு இருக்கத்தான் ஆசைப்பட்டேன் . . . ஆனால் அது முடியாததால், இப்போது நீங்கள் காட்டிவரும் விசுவாசத்தைத் தொடர்ந்து காட்டிவர உங்களுக்கு உதவுமாறு நான் கடவுளிடம் கேட்டிருக்கிறேன். அநேக சோதனைகளை நாம் சகித்திருக்கிறோம், யெகோவா நம்மை ஒருபோதும் கைவிட்டதில்லை. . . . அதனால் அவர் தம்முடைய அமைப்பின்மூலம் கொடுக்கும் வழிநடத்துதலில் தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள், சபைக்கும் மூப்பர்களுக்கும் எப்போதும் ஆதரவு கொடுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிக்கடி பிரசங்கியுங்கள், எல்லாச் சகோதரர்களையும் நேசியுங்கள்.
“நம்முடைய பிரிவு தற்காலிகமானதுதான். . . . நான் செய்த எல்லாத் தவறுகளுக்கும், நான் உங்களைப் புரிந்துகொள்ளாமலிருந்த எல்லாச் சமயங்களுக்கும் அல்லது நான் உங்களை எவ்வளவாய் நேசிக்கிறேன் என்பதைச் சொல்லாமலிருந்ததற்கும் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். . . . உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட தேவைகள் இருக்குமென்று எனக்குத் தெரியும். உங்களுடைய தேவைகளைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கிறதைவிட யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும், உங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர் தருவார்; நீங்கள் பொறுமையாய் சகித்திருந்ததற்கெல்லாம் பலனளிப்பார்.
“புதிய உலகில் வாழப்போகும் உங்களுடைய இலட்சியத்தை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அதை அடைவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். முடிவுவரை நீங்கள் விசுவாசத்தோடு இருப்பதற்கு யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாராக, பலப்படுத்துவாராக. . . . எனது அருமையான பிள்ளைகளே துக்கப்படாதீர்கள். நான் உங்களை நேசிக்கிறேன்!”
துயரச் சம்பவம் யாரையும் எப்பொழுது வேண்டுமானாலும் தாக்கலாம். ‘நாமனைவருக்கும் சமயமும் எதிர்பாராத சம்பவமும் நேரிடுகிறது’ என்று பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சாலொமோன் ராஜா எழுதினார். (பிரசங்கி 9:11, NW) என்றாலும், கடவுள்மீது உறுதியான விசுவாசம் வைத்திருப்பவர்கள், அப்போஸ்தலன் பவுல் கொண்டிருந்ததைப்போன்ற அதே உத்தரவாதத்தைக் கொண்டிருக்கலாம். அவர் இவ்வாறு சொன்னார்: “மரணமானாலும், ஜீவனானாலும், . . . வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.”—ரோமர் 8:38, 39; எபிரெயர் 6:10.