‘ஆகாயமண்டலத்தின் உண்மையான சாட்சி’
ச ந்திரனை அழகின் அணிகலனாக கவிஞர்களும் பாடலாசிரியர்களும் பல நூற்றாண்டுகளாக புகழ்ந்து பாடி வருகிறார்கள். உதாரணத்திற்கு, தெய்வீகத் தூண்டுதலால் எழுதப்பட்ட ஒரு பாடல், ‘சந்திரனைப்போல் அழகுடைய’ ஒரு பெண்ணைப்பற்றி வர்ணிக்கிறது. (உன்னதப்பாட்டு 6:10) ஒரு சங்கீதக்காரன், சந்திரனை ‘ஆகாயமண்டலத்தின் உண்மையான சாட்சி’ என்று கவிதை நடையில் வர்ணிக்கிறார். (சங்கீதம் 89:37) சந்திரனைப் பற்றிய இந்த வர்ணனை எதை அர்த்தப்படுத்துகிறது?
பூமியைச் சுற்றிவரும் சந்திரன், தன்னுடைய சுற்றுப்பாதையை தவறாமல் 27.3 நாட்களுக்கு ஒருமுறை முடிக்கிறது. எனவே, சந்திரனை உண்மையான சாட்சி என்று அழைப்பது அதன் நம்பகத்தன்மையைக் குறிக்கலாம். என்றாலும், சங்கீதக்காரனின் மனதில் அதற்கு வேறொரு ஆழமான அர்த்தம் இருந்திருக்கலாம். ராஜ்யத்தைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசன பாடலில், சந்திரனை ‘உண்மையான சாட்சி’ என்று சங்கீதக்காரன் சொன்னார், இந்த ராஜ்யத்துக்காக ஜெபிக்கும்படிதான், இயேசுவும் தம்மைப் பின்பற்றினவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.—மத்தேயு 6:9, 10.
ஏறத்தாழ 3,000 வருடங்களுக்கு முன்பாக, யெகோவா தேவன் பூர்வ இஸ்ரவேலின் அரசனாகிய தாவீதோடு ராஜ்ய உடன்படிக்கை செய்தார். (2 சாமுவேல் 7:12-16) தாவீதின் வம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்து அந்தச் சிங்காசனத்தை என்றென்றுமாக சுதந்தரித்துக்கொள்வதற்கான சட்டப்பூர்வ உரிமையை அளிப்பதே அந்த உடன்படிக்கையின் நோக்கமாக இருந்தது. (ஏசாயா 9:7; லூக்கா 1:32, 33) தாவீதுடைய “சந்ததி”யின் சிங்காசனத்தைப்பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு பாடினான்: “சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும்.”—சங்கீதம் 89:36, 37.
‘இரவை ஆளும் சுடரான’ சந்திரன், கிறிஸ்துவுடைய நிலையான ஆட்சியை நினைவுபடுத்துவதற்கு பொருத்தமான ஒன்றாக இருக்கிறது. (ஆதியாகமம் 1:16) அவருடைய ராஜ்யத்தைப்பற்றி தானியேல் 7:14 இவ்வாறு சொல்கிறது: “அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.” ஆம், சந்திரன், அந்த ராஜ்யத்தையும் அது மனிதவர்க்கத்தின் மீது பொழிய போகும் ஆசீர்வாதங்களையும் நினைவூட்டும் ஒரு சாட்சியாக இருக்கிறது.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
சந்திரன்: NASA photo