நாவின் வலிமை
ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு ஏறத்தாழ 45 சென்டிமீட்டர் நீளமுடையது. மரத்தின் கொப்புகளிலிருந்து இலைகளை லாவகமாக பறிப்பதற்கு ஏற்றதாயும் வலிமையுள்ளதாயும் இருக்கிறது. நீலத் திமிங்கலத்தின் நாக்கு மட்டுமே ஒரு யானையின் எடைக்குச் சமம். நாக்கை அசைக்கவே அதற்கு எவ்வளவு பலம் தேவைப்படும்!
இதுபோன்ற விலங்குகளின் நாக்கோடு ஒப்பிட மனிதனுடைய நாவு அளவிலும்சரி, எடையிலும்சரி, பலத்திலும்சரி ஒன்றுமே இல்லை. ஆனாலும், அந்த விலங்குகளின் நாக்கைவிட மனிதனுடைய நாவு அதிக வலிமை வாய்ந்தது. மனிதனின் உடலில் இருக்கும் இந்தச் சிறிய உறுப்பைப்பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்.” (நீதிமொழிகள் 18:21) உண்மையில், மனிதனுடைய நாவு சாவை விளைவிக்கும் அளவுக்கு வலிமையுடையது என்பதை எத்தனையோ முறை கேட்டிருப்போம், அல்லவா? பொய் சொல்வதற்கும் தவறான வாக்குமூலங்கள் கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படும் இந்த நாவு எத்தனை எத்தனை அப்பாவிகளுடைய வாழ்க்கையை சீரழித்திருக்கும், எத்தனை பேரை கொன்று குவித்திருக்கும்?
அதுபோலவே, புண்படுத்தும் வார்த்தைகள் நீண்டகால நட்புறவுகளையும்கூட முறித்துவிடுகின்றன. கடுகடுப்பான வார்த்தைகள் உணர்ச்சிகளை நொறுக்கியிருக்கின்றன. “நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?” என்று பழிதூற்றப்பட்ட யோபு மனமுடைந்து கேட்டார். (யோபு 19:2) கட்டுப்படுத்தப்படாத நாவு எவ்வளவு பெரிய அழிவை உண்டாக்கக்கூடும் என்பதை சீஷனாகிய யாக்கோபு பின்வருமாறு விளக்கினார்: “நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது! நாவும் நெருப்புத்தான்.”—யாக்கோபு 3:5, 6.
மறுபட்சத்தில், நாவின் வலிமையால் உயிரை காக்கவும் முடியும். கனிவான, ஆறுதலான வார்த்தைகள் சிலரை மனச்சோர்விலிருந்து விடுவித்திருக்கின்றன, சிலரை தற்கொலை செய்வதிலிருந்து தடுத்திருக்கின்றன. நம்பகமான அறிவுரைகள், போதைப் பொருட்களுக்கு அடிமையாய் இருந்தவர்களையும் பயங்கர குற்றவாளிகளையும் மரணத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவித்திருக்கின்றன. நிச்சயமாகவே, நீதிமானுடைய நாவின் பலன் ‘ஜீவவிருட்சமாகும்,’ “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.”—நீதிமொழிகள் 15:4; 25:11.
யெகோவா தேவனை மகிமைப்படுத்தும்போதும், தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும்போதும், பைபிளிலுள்ள அருமையான சத்தியங்களை மற்றவர்களுக்குக் கற்பிக்கும்போதும் நம்முடைய நாவை மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்துகிறோம். ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என்று இயேசு சொன்னார்.—யோவான் 17:3; மத்தேயு 24:14; 28:19, 20.