கிறிஸ்மஸ் —எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
பத்து வருடங்களுக்கு முன்னால் இதே மாதத்தில், யு.எஸ். நியுஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் பத்திரிகை “கிறிஸ்மஸைத் தேடி” என்ற அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரை, கிறிஸ்மஸ் “கறையற்றதாகவும், வியாபாரத்தன்மை குறைந்ததாகவும்” ஆகி வந்துக்கொண்டிருந்ததா என்பதைக் குறித்து முக்கியமாகப் பேசியது. இந்த வழியில்தான் கிறிஸ்மஸ் போய்க்கொண்டிருக்கிறதா?
அப்படி நாம் ஏன் எதிர்பார்க்கக் கூடாது என்பதற்கு அதே கட்டுரை விளக்கமளிக்கிறது. “கான்ஸ்டன்டைன் ரோமப் பேரரசராக இருந்த நான்காம் நூற்றாண்டுவரை கிறிஸ்துவின் பிறப்பு அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டதற்கு எந்தப் பதிவும் இல்லை” என்று அது சொல்கிறது. “இயேசு எப்பொழுது பிறந்தார் என்பதை யாரும் நிச்சயமாக அறியவில்லை என்பதற்கு இது ஓர் ஆதாரமாக இருக்கிறது” என்பதை அது காட்டுகிறது. “சுவிசேஷங்கள் வருடத்தையோ ஏன், சரியான மாதத்தையோ நாளையோகூட சொல்வதில்லை” என்று அந்தக் கட்டுரை ஒத்துக்கொள்கிறது. “பூர்வ கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டவில்லை” என்று டெக்ஸஸிலுள்ள பல்கலைகழகத்தின் ஒரு சரித்திர ஆசிரியர் சொல்கிறார்.
அந்தக் கட்டுரை, “ஊகக் கணிப்பு” என்ற உபதலைப்பின் கீழ் “சர்ச் எப்படி டிசம்பர் 25-ஐ தேர்ந்தெடுத்தது” என்பதை இவ்வாறு சொல்லியிருந்தது: “சாட்டர்னேலியாவும், மற்ற புறமத பண்டிகைகளும் வேண்டுமென்றே ‘கிறிஸ்தவமயமாக்கப்பட்ட’ நாளே அந்த விடுமுறை நாள் (டிசம்பர் 25) என்பதை பலர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் . . . மக்கள் ஏற்கெனவே டிசம்பர் மாதப் பிற்பகுதியில் பண்டிகைகள் கொண்டாடுவதால் அந்தக் காலப்பகுதியிலேயே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், பெருவாரியான மக்கள் இரட்சகரின் பிறப்பைக் கொண்டாடுவார்கள் என்பதில் சர்ச் தலைவர்கள் உறுதியாய் இருந்தனர்.” 19-ஆம் நூற்றாண்டின் மத்திபத்தில், அதன் முக்கியத்துவம் பரிசுப் பொருள்களை வாங்குவதற்கும் கொடுப்பதற்கும் மாறியது. “கிறிஸ்மஸ் பரிசு கொடுக்கும் இந்தப் புதிய பாரம்பரியம் வணிகர்களுக்குத் திடீர் செல்வச்செழிப்பை உருவாக்கியது; வணிகர்களும் விளம்பரதாரர்களும் இந்தப் பண்டிகை காலத்தை விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டனர்” என்றும் அது சொல்லியது.
எனவே, கிறிஸ்மஸ் தூய கிறிஸ்தவத்தின் வழியில் அல்ல மாறாக அதற்கு எதிரான வழியிலேயே செல்கிறது. நவீன கிறிஸ்மஸ் “பகட்டான வியாபாரமாக” இருந்தாலும், இயேசுவின் பிறப்பை உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒருபோதும் கொண்டாடவில்லை என்பதே உண்மை. மாறாக, கிறிஸ்து மரித்து பரலோகத்திற்கு உயிர்த்தெழுந்ததன் மூலம் கொடுத்த மீட்கும் பலியையே பைபிள் வலியுறுத்துகிறது. (மத்தேயு 20:28) அதுவே எல்லாக் காலத்திற்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.