கூட்டங்களில் பதிலளிக்க பிள்ளைகளுக்கு கற்பியுங்கள்
மெக்சிகோவைச் சேர்ந்த பெர்லா, சிறுமியாக இருந்தபோது காவற்கோபுர படிப்பிற்கு சுருக்கமான பதில்களைத் தயாரிக்க தன் அம்மா உதவியதை நினைத்துப் பார்க்கிறார். இப்போது பெர்லாவுக்கு ஐந்து வயது மகன் இருக்கிறான். அவனுக்கு அவர் எப்படி உதவுகிறார்? “முதலில், காவற்கோபுரத்தை நான் தயாரிப்பேன். அவ்வாறு தயாரிக்கும்போது, என் மகனால் புரிந்துகொள்ள முடிகிற, சொந்த வார்த்தையில் பதில் சொல்ல முடிகிற ஒரு பாராவைத் தேர்ந்தெடுப்பேன். அதை அவன் ‘என்னுடைய பாரா’ என்று சொல்லுவான்; பிறகு இருவரும் சேர்ந்து அந்தப் பாராவை நன்கு தயாரிப்போம். அவனுக்குத் தெரிந்த எளிய உதாரணங்களை பயன்படுத்தி அதை விளக்கும்படி அவனிடம் கேட்பேன். பதிலைத் தயாரித்த பின்பு திரும்பத் திரும்ப அதைச் சொல்ல வைப்பேன். பதில் சொல்லும்போது மைக்கை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக மைக்கைப் போன்ற ஒரு பொருளை அவன் கையில் கொடுத்துவிடுவேன். ஒரு கூட்டத்தில்கூட அவன் பதில் சொல்லாமல் அல்லது கையைத் தூக்காமல் இருந்ததில்லை என்பதை நினைக்கும்போது எனக்கு அதிக சந்தோஷமாக இருக்கிறது. பெரும்பாலும், கூட்டம் துவங்குவதற்கு முன்பே படிப்பு நடத்துபவரிடம் சென்று, அவனுடைய பாராவை அவருக்குத் தெரிவித்து விடுவான்.”
ஹிந்தி மொழி பேசும் தொகுதியில் சேவை செய்யும் யென்ஸ் என்ற மூப்பருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். மூத்தவனுக்கு நான்கு வயது. இளையவனுக்கு இரண்டு வயது. அவரும் அவருடைய மனைவியும் பிள்ளைகளுடன் சேர்ந்து கூட்டங்களுக்குத் தயார் செய்கிறார்கள்; அப்போது, யென்ஸின் பெற்றோர் அவருக்குக் கற்றுக் கொடுத்த அதே முறையை அவர்கள் பின்பற்றுகிறார்கள். அவர் இவ்வாறு சொல்கிறார்: “அந்தக் கட்டுரையில் எந்தெந்த பகுதிகளை பிள்ளைகளால் புரிந்துகொள்ள முடியும் என்பதை முடிவு செய்வோம். பிறகு, அந்தக் குறிப்பிட்ட பகுதியைச் சுருக்கமாக விளக்குவோம்; அல்லது அந்தக் கட்டுரையிலுள்ள முக்கிய குறிப்புகளை விளக்குவோம்; இவ்வாறு செய்தபிறகு, கூட்டங்களில் எந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோமோ அவற்றைக் கேட்போம். பல சமயங்களில், அவர்கள் ரொம்ப இயல்பாக சொல்கிற பதில்களைக் கேட்டு ஆச்சரியமடைந்திருக்கிறோம். அவர்கள் எதைப் புரிந்திருக்கிறார்களோ அதையே பதிலாக சொல்கிறார்கள். அதனால், அவர்களுடைய பதில் உண்மையில் யெகோவாவுக்குத் துதியாக அமைகிறது; அதோடு, அவர்களுடைய சொந்த விசுவாசத்தையும் வெளிக்காட்டுகிறது.”