பெருங்கடலில் வழியைத் தேடி . . .
மார்ஷல் தீவுகள் 1,200-க்கும் மேற்பட்ட தீவுகளையும் குட்டித்தீவுகளையும் கொண்டவை. இவை கடல் மட்டத்திலிருந்து ஒருசில மீட்டர் உயரத்திலேயே இருக்கின்றன. கடலில் கொஞ்சதூரம் தள்ளிச் சென்றால்கூட இந்தத் தீவுகள் நம் கண்களை விட்டு மறைந்துவிடும். என்றாலும், மார்ஷலைச் சேர்ந்த பண்டையகால மாலுமிகளால் தங்கள் சிறிய தோணிகளில் ஒரு தீவிலிருந்து மற்ற குட்டித்தீவுக்குச் செல்ல முடிந்தது. அவர்கள் பசிபிக் பெருங்கடலின் 20 லட்சம் சதுர கிலோமீட்டரில் முக்கால்வாசி பகுதியில் தங்கள் வழிகளை எளிதாக கண்டுபிடித்துச் சென்றனர். இவர்களால் வழியை எப்படி கண்டுபிடிக்க முடிந்தது? குச்சி விளக்கப்படங்கள் என்றழைக்கப்பட்ட “வரைபடங்களை” இவர்கள் பயன்படுத்தினார்கள்; இவை எளிதானவை. என்றாலும், மிகச்சிறந்த விதத்தில் பயன்பட்டன.
கடலில் நிலப்பகுதி இருந்தால் சில குறிப்பிட்ட விதமான அலைகள் உருவாகும் என்பதை மார்ஷலைச் சேர்ந்த மாலுமிகள் அனுபவரீதியில் கற்றுக்கொண்டனர். அந்த அலையின் மாதிரியை வைத்தே 30 கிலோமீட்டர் தூரத்திற்குள் ஒரு தீவு இருக்கிறது என்பதை கண்டுபிடித்து விடுவார்கள். வித்தியாசமான அலை மாதிரிகள் நிறையவே இருந்தன; அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள குச்சி விளக்கப்படங்கள் உதவின. இவை எப்படி இருந்தன? படத்தில் நீங்கள் பார்க்கிறபடி, பான்டேனஸ் வேர்களையோ தென்னங்குச்சிகளையோ சேர்த்துப் பின்னி அவை உருவாக்கப்பட்டன. அலையின் மாதிரிகளை அவை அடையாளப்படுத்தின. தீவுகள் ஒவ்வொன்றும் எங்கே அமைந்திருக்கின்றன என்பதைக் குறிப்பிட சிறிய சோழிகளும் சேர்த்துக் கட்டப்பட்டன.
குச்சி விளக்கப்படத்தின் உதவியோடு மேற்கொண்ட கடல் போக்குவரத்து பல வருடங்களுக்கு இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டது. ஓர் இளம் மாலுமி குச்சி விளக்கப்படத்தைப் பயன்படுத்த எவ்வாறு கற்றுக்கொள்வார்? பயிற்சியும் முயற்சியும் மட்டுமே கைகொடுக்கும். அனுபவமிக்க மாலுமி ஓர் இளம் மாலுமியை அருகில் உள்ள தீவுகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் இதைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுக்கிறார். அலையின் மாதிரிகளை இளம் மாலுமி அடையாளம் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்ளும்போது, குச்சி விளக்கப்படத்தை பயன்படுத்துவதில் திறம்பட்டவராக ஆகிவிடுகிறார். பிறகு, அவரால் தனியாகவே கடலில் பயணிக்க முடிகிறது.
அதேபோல், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. ஆரம்பத்தில், பைபிளில் உள்ள அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ள ஒருவர் நமக்கு உதவலாம். பிறகு, நாமே தொடர்ந்து கடவுளுடைய வார்த்தையைப் படித்து, கற்றுக்கொண்ட நியமங்களை நடைமுறைப்படுத்தும்போது, அதன்மீது நம்பிக்கை அதிகமாகிறது. கடவுளுடைய வார்த்தையை தொடர்ந்து படிக்கும்படி இஸ்ரவேலரின் தலைவரான யோசுவாவிடம் சொல்லப்பட்டது. ‘அதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படி’ சொல்லப்பட்டது. “அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்” என்று கடவுள் அவரிடம் கூறினார். (யோசுவா 1:8) ஆம், பாதுகாப்பான, வெற்றிகரமான வாழ்க்கைக்கு பைபிள் நமக்கு வழிகாட்டுகிறது.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
© Greg Vaughn