“அந்த ஒன்பது வயது சிறுவனால்தான்”
போலந்து நாட்டின் தென் பகுதியில் வசிக்கிறார் வைஸ்வாவா என்ற பெண்மணி. இவர், யெகோவாவின் சாட்சிகள் தன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவர்களுடன் பேச தனக்கு விருப்பமில்லை என பணிவோடு சொல்லி அனுப்பிவிடுவார். ஒருநாள், சாம்வெல் என்ற ஒன்பது வயது சிறுவன் தன் அம்மாவுடன் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில் வைஸ்வாவாவின் வீட்டுக்கு வந்தான். இந்தச் சமயம் அவன் சொன்ன செய்தியை அவர் காதுகொடுத்துக் கேட்டார், பரதீஸ் பூமி பற்றிய பத்திரிகையையும் பெற்றுக்கொண்டார்.
இயேசு கிறிஸ்துவின் மரண நினைவுநாள் ஆசரிப்பு சீக்கிரத்தில் வரவிருந்ததால், அந்த விசேஷ நிகழ்ச்சிக்கு வைஸ்வாவாவை அழைப்பதற்கு சாம்வெல் விரும்பினான். எனவே அழைப்பிதழை எடுத்துக்கொண்டு தன் அம்மாவோடு போய் அவரை மீண்டும் சந்தித்தான். இந்தச் சிறுவன் நேர்த்தியாக உடை அணிந்திருப்பதை வைஸ்வாவா பார்த்ததும், ‘இதோ வந்துவிடுகிறேன்,’ என சொல்லிவிட்டுப்போய் நேர்த்தியாக உடை அணிந்து வந்தார். வாசலில் நின்றுகொண்டிருந்த சாம்வெல் சொன்னதைக் காதுகொடுத்துக் கேட்டார், அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டார்; பின்னர், “நான் மட்டும் வந்தால் போதுமா, என் கணவரும் வர வேண்டுமா?” என்று கேட்டார்; பின்னர் அவரே, “என் கணவர் வராவிட்டாலும் நான் வருவேன், உனக்காக வருவேன் சாம்வெல்” என்றார். சொன்ன சொல்லை அவர் காப்பாற்றினார்; சாம்வெலுக்கு ஒரே சந்தோஷம்.
நினைவுநாள் ஆசரிப்பு பேச்சு கொடுக்கப்படுகையில், வைஸ்வாவாவுக்குப் பக்கத்தில் சாம்வெல் உட்கார்ந்துகொண்டான், வசனங்கள் சொல்லப்படுகையில் அவற்றை அவருக்கு எடுத்துக் காட்டினான். இது அவருடைய மனதைத் தொட்டது. அவர் அந்த நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொண்டு பூரித்துப்போனார், எளிய வார்த்தைகளில் ஆழமான விஷயங்கள் சிந்திக்கப்பட்டதைப் பாராட்டினார். சபையார் அவரை அன்போடு வரவேற்றதையும் அவரிடம் கரிசனையோடு நடந்துகொண்டதையும் பார்த்து நெகிழ்ந்து போனார். அதுமுதல், அவர் மெல்ல மெல்ல ஆன்மீக காரியங்களுக்கு அதிக ஆர்வம் காட்டவும், தவறாமல் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் கலந்துகொள்ளவும் ஆரம்பித்தார். சமீபத்தில் அவர் இவ்வாறு சொன்னார்: “இதற்கு முன் நீங்கள் [யெகோவாவின் சாட்சிகள்] என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் சொல்ல வந்த செய்தியைக் கேட்காமல் போனதை நினைத்து வெட்கப்படுகிறேன். அந்த ஒன்பது வயது சிறுவனால்தான், சாம்வெலால்தான், உங்கள் செய்தியைக் காதுகொடுத்துக் கேட்டேன் என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.”
போலந்தில் இருக்கும் சாம்வெலைப் போல் யெகோவாவின் சாட்சிகளுடைய சிறுவர்களில் எத்தனையோ பேர் தங்கள் பேச்சாலும், தங்கள் நன்னடத்தையாலும் கடவுளைத் துதிக்கிறார்கள். நீங்கள் ஓர் இளைஞரா? கடவுளைப் பற்றிய ஆழமான சத்தியங்களை நல்ல உள்ளம் படைத்தவர்கள் போற்றுவதற்கு நீங்கள் அவர்களுக்கு உதவ முடியும்.