“கலிலேயாவின் மணிமகுடம்”
இயேசு வளர்ந்த ஊரான நாசரேத்திற்கு வடமேற்கில் 6.5 கிலோமீட்டர் தொலைவில் ஒரு நகரம் இருந்தது. இந்நகரத்தைப் பற்றி சுவிசேஷப் பதிவுகளில் எந்த விவரமுமில்லை. எனினும் இதை, “கலிலேயாவின் மணிமகுடம்” என ஃபிளேவியஸ் ஜொஸிஃபஸ் வர்ணித்தார்; இவர், முதல் நூற்றாண்டைச் சேர்ந்த பிரசித்திபெற்ற யூத சரித்திராசிரியர் ஆவார். இந்நகரத்தின் பெயர் செஃபோரிஸ். இந்நகரத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
மகா ஏரோது இறந்த பிறகு, பொ.ச.மு. 1-ம் ஆண்டு வாக்கில் ரோமர்களுக்கு எதிராக செஃபோரிஸின் குடிமக்கள் கலகம் செய்தார்கள்; அப்போது இந்நகரம் தரைமட்டமாக்கப்பட்டது. பின்னர் கலிலேயா, பெரேயா ஆகிய மாகாணங்கள்மீது ஆட்சி செய்யும் பொறுப்பை மகா ஏரோதின் மகனான அந்திப்பா ஏற்றார். இவர் தனது புதிய தலைநகரை உருவாக்க, செஃபோரிஸின் இடிபாடுகள் இருந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அழிந்துபோயிருந்த இந்நகரம், கிரேக்க-ரோம பாணியில் மீண்டும் உருப்பெற்றது; எனினும், இங்கு முக்கியமாய் யூதர்களே குடியிருந்தார்கள். பொ.ச. 21 வாக்கில் அந்திப்பா, செஃபோரிஸுக்குப் பதிலாக டைபீரியஸ் நகரை உருவாக்கி அதை தலைநகராக்கினார்; அதுவரை, “கலிலேயா, பெரேயா மாகாணங்களின் நிர்வாக மையமாக” செஃபோரிஸ் விளங்கியதென பேராசிரியர் ரிச்சர்ட் ஏ. பேடீ சொல்கிறார். அந்தக் காலப் பகுதியில்தான் இயேசு இந்நகருக்கு அருகே வாழ்ந்து வந்தார்.
பேராசிரியர் ஜேம்ஸ் ஸ்ட்ரேன்ஜ் என்பவர் செஃபோரிஸை அகழ்வாராய்ச்சி செய்தார்; அந்நகரில் ஆவணக் காப்பகம், கருவூலம், ஆயுதசாலை, வங்கிகள், அரசு கட்டடங்கள் ஆகியவையும், மண்பாண்டங்கள், கண்ணாடிப் பொருள்கள், உலோகப் பொருள்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை விற்கும் சந்தைவெளிகளும் வகை வகையான உணவுப் பண்டங்களை விற்கும் கடைகளும் இருந்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்தார். நெசவாளர்களும், துணி வியாபாரம் செய்கிற வர்த்தகர்களும் இருந்திருக்கிறார்கள்; அங்கிருந்த கடைகளில் கூடைகள், தட்டுமுட்டுச் சாமான்கள், வாசனை திரவியங்கள் ஆகியவையும், இதுபோன்ற பிற பொருள்களும் விற்கப்பட்டிருக்கின்றன. அச்சமயத்தில் 8,000 பேர் முதல் 12,000 பேர் வரை அங்கே குடியிருந்திருப்பார்கள் என கணக்கிடப்படுகிறது.
நாசரேத்திலிருந்து நடந்தால் 1 மணிநேரத்தில் இந்நகருக்குச் சென்றுவிடலாம்; அப்படியென்றால், சுறுசுறுப்பாய் இயங்கி வந்த இந்நகரத்திற்கு இயேசு எப்போதாவது சென்றாரா? இக்கேள்விக்கு சுவிசேஷப் பதிவுகளில் விடை இல்லை. எனினும், இயேசு “செஃபோரிஸ் வழியாகத்தான் கலிலேயாவிலுள்ள கானா ஊருக்குச் சென்றிருக்க வேண்டும்” என தி ஆங்கர் பைபிள் டிக்ஷ்னரி சொல்கிறது. (யோவான் 2:1; 4:46) பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 120 மீட்டர் உயரமுள்ள செஃபோரிஸின் குன்றை நாசரேத்திலிருந்து பார்க்க முடியும். “மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது” என்ற உதாரணத்தை இயேசு பயன்படுத்தியபோது இந்நகரத்தை மனதில் வைத்துதான் அவர் சொல்லியிருப்பாரென சிலர் நம்புகிறார்கள்.—மத்தேயு 5:14.
பொ.ச. 70-ல் எருசலேம் அழிக்கப்பட்ட பிறகு, செஃபோரிஸ், கலிலேயாவிலிருந்த யூதர்களின் முக்கிய நகரமாக ஆனது; பின்னர் இது யூத உயர் நீதிமன்றமிருந்த இடமாக ஆனது. கொஞ்ச காலத்திற்கு யூதர்களின் கல்வி மையமாகவும் இது சிறப்புற்று விளங்கியது.
[பக்கம் 32-ன் தேசப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
கலிலேயாக் கடல்
கலிலேயா
கானா
டைபீரியஸ்
செஃபோரிஸ்
நாசரேத்
பெரேயா
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
மண்பாண்டங்கள்: Excavated by Wohl Archaeological Museum, Herodian Quarter, Jewish Quarter. Owned by Company for the Reconstruction of the Jewish Quarter in the Old City of Jerusalem, Ltd