மெக்சிகோவில் வசிக்கும் சீனர்களுக்கு உதவுதல்
“பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் [அதாவது, புறதேசத்தாரில்] பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள்.” (சகரியா 8:23) இந்த அருமையான தீர்க்கதரிசனம் இன்று உலகம் முழுவதும் நிறைவேறி வருகிறது. ‘பலவித பாஷைக்காரராகிய புறதேசத்தார்’ யெகோவா தேவனை வணங்குவதற்காக ஆவிக்குரிய இஸ்ரவேலரின் வஸ்திரத் தொங்கல்களைப் பிடித்துக்கொள்கிறார்கள். இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதில் யெகோவாவின் சாட்சிகள் அதிக ஆர்வங்காட்டுகிறார்கள். அவர்களில் அநேகர், உலகளாவிய பிரசங்கிப்பு வேலையில் பங்குகொள்வதற்காக புதுப்புது மொழிகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.
மெக்சிகோவில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் இதற்கு விதிவிலக்கு அல்ல. சீனமொழி பேசுபவர்கள் கிட்டத்தட்ட 30,000 பேர் மெக்சிகோவில் வசிக்கிறார்கள். 2003-ல் மெக்சிகோ நகரில் நடந்த கிறிஸ்துவின் நினைவுநாள் ஆசரிப்புக்கு, அவர்களில் 15 பேர் வந்திருந்தார்கள். ஆகவே, மெக்சிகோவில் வாழும் சீனர்கள் மத்தியில் ஆன்மீக ரீதியில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று மெக்சிகோவில் உள்ள சாட்சிகள் புரிந்துகொண்டார்கள். சீனர்களிடம் பிரசங்கிக்க நிறைய பேர் தேவை என்று உணர்ந்தார்கள். அதனால் சீன மொழியில் (Mandarin Chinese) சுருக்கமாக நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்குக் கற்றுக்கொடுக்க, மெக்சிகோவிலுள்ள சாட்சிகளுக்கு மூன்று மாத வகுப்பு ஒன்றைத் தொடங்கினார்கள். அந்த வகுப்பில் மொத்தம் 25 சாட்சிகள் பயிற்சி பெற்றார்கள். முடிவில் நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு, மெக்சிகோ நகரிலுள்ள சீன சமுதாயத்தினரின் அதிகாரி ஒருவர் வந்தார்; சீன மக்களின் மத்தியில் இந்த வகுப்பு எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இது காட்டியது. வெளிநாடு சென்று சீன மொழியை இன்னும் நன்றாகக் கற்றுக்கொள்ள மூன்று மாணவர்களுக்கு உள்ளூரிலிருக்கும் ஒரு சீன நிறுவனம் உதவித்தொகை வழங்கியது.
அந்த வகுப்பில் நடைமுறையான பயிற்சியும் அளிக்கப்பட்டது. அடிப்படை வார்த்தைகள் சிலவற்றை மாணவர்கள் கற்றுக்கொண்டவுடனே மெக்சிகோவிலுள்ள வியாபாரப் பகுதிக்குச் சென்று அவற்றைப் பயன்படுத்தி பிரசங்கித்தார்கள். ஆர்வத்துடிப்புடன் இருந்த அந்த மாணவர்கள் 21 பைபிள் படிப்புகளை ஆரம்பித்தார்கள். பின்யின் (Pinyin) என்பது சீனமொழியை ரோம எழுத்தில் எழுதுவது. இந்த முறையில் எழுதப்பட்ட கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேடு, படிப்புகள் நடத்த அவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது.
ஆனால் அந்தச் சாட்சிகள் சீனமொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்து கொஞ்ச நாட்களே ஆகியிருக்க, அவர்களால் எப்படி பைபிள் படிப்புகளை நடத்த முடிகிறது? பைபிள் படிப்பவரிடம் முதலில் ஒரு பத்தியையும் பிறகு அதன் கேள்வியையும் காட்டி, “சிங் டூ [தயவுசெய்து வாசியுங்கள்]” என்று மட்டுமே அவர்கள் சொல்வார்கள். அந்த நபர் சீன மொழியில் படித்து பதில் சொல்லியதும் “ஷி ஷி [நன்றி]” என்றும், “ஹங் ஹாவு [பிரமாதம்]” என்றும் சொல்வார்கள்.
ஒரு கிறிஸ்தவப் பெண்ணிடம் இதே முறையில் பைபிள் படிப்பு நடத்தப்பட்டது. மூன்று முறை அவளுடன் படித்த பிறகு, அவள் உண்மையில் சரியாகத்தான் புரிந்துகொள்கிறாளா என்று அந்தச் சாட்சிக்குச் சந்தேகம் வந்தது. அதனால் ஒரு சீன சகோதரரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அந்தச் சகோதரர், ஏதாவது சந்தேகங்கள் இருக்கிறதா என்று அப்பெண்ணிடம் கேட்டதற்கு, “முழுக்காட்டுதல் எடுக்க எனக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டுமா?” என்று பதிலுக்குக் கேட்டாள்.
சீக்கிரத்திலேயே, மெக்சிகோவில் புத்தகப் படிப்பு தொகுதி ஒன்று தொடங்கப்பட்டது. சீனமொழி பேசிய 9 பேரும், மெக்சிகோவிலுள்ள சாட்சிகளான 23 பேரும் இந்தத் தொகுதியில் இருக்கிறார்கள். ஒரு சீன டாக்டரும் அந்தப் புத்தகப் படிப்புக்கு வருகிறார். அவருடைய பேஷன்ட் ஒருவர் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை ஸ்பானிஷ் மொழியில் அவரிடம் கொடுத்திருந்தார். அவருக்கு ஸ்பானிஷ் மொழியை வாசிக்கத் தெரியாததால், அதை சீன மொழியில் மொழிபெயர்த்துச் சொல்லுமாறு யாரோ ஒருவரிடம் கேட்டிருக்கிறார், அவரும் சில வாக்கியங்களை மொழிபெயர்த்துச் சொல்லியிருக்கிறார். அந்தப் பத்திரிகைகள் பைபிள் சம்பந்தமானவை என்று தெரிந்துகொண்ட உடனே, சீன மொழியில் அந்தப் பத்திரிகைகளைக் கொண்டுவந்து தரமுடியுமா என்று அந்த பேஷன்டிடம் கேட்டார். கேட்டுக்கொண்டபடியே, சீன மொழியில் பத்திரிகைகளை அவர் கொண்டுவந்து கொடுத்தார். அதோடு, சீன மொழி பேசும் ஒரு சகோதரர் அவரைப் போய்ச் சந்திப்பதற்கு மெக்சிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தின் மூலம் ஏற்பாடும் செய்யப்பட்டது. சீனாவில் அந்த டாக்டரின் அம்மா பைபிள் வைத்திருந்தாராம், டாக்டரும் அதை ஆர்வத்தோடு படித்து வந்தாராம். அவர் மெக்சிகோவிற்கு வர முடிவுசெய்ததும், பைபிள் படிப்பதை மட்டும் விட்டுவிடாதிருக்குமாறு அவருடைய அம்மா சொன்னாராம். அதனால், பைபிள் விவரிக்கிற கடவுளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள யாராவது உதவிசெய்ய வேண்டுமென்று அந்த டாக்டர் ஜெபம் செய்துகொண்டிருந்தாராம். “கடவுள் என் ஜெபத்திற்குப் பதிலளித்துவிட்டார்!” என்று அவர் இப்போது சொல்கிறார்.
அந்தப் புத்தகப் படிப்புக்கு வேறொரு சீன குடும்பமும் வருகிறது. இக்குடும்பத்தார் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்கும் மெக்சிகன் பெண்ணின் வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள். இந்த சீன குடும்பத்திற்கு ஸ்பானிஷ் மொழி கொஞ்சமே புரிந்தாலும், அந்த மெக்சிகன் பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்தப்பட்டபோது அவர்களும் அதில் கலந்துகொண்டார்கள். அதன்பின், பைபிள் படிப்பு நடத்தும் சகோதரியிடம் சீன மொழியில் ஏதாவது பிரசுரங்கள் இருக்கிறதா என்று அந்தக் குடும்பத்தார் கேட்டார்கள். சீக்கிரத்தில் அவர்களுக்கு சீன மொழியில் பைபிள் படிப்பு நடத்தப்பட்டது. சீனமொழி பேசும் மக்களுக்குத் தாங்கள் பிரசங்கிக்க விரும்புவதாகவும், யெகோவாவிற்கு தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்க விரும்புவதாகவும் கொஞ்ச நாட்களிலேயே அந்தக் குடும்பத்தார் தெரிவித்தார்கள்.
சீன மொழியைக் கற்றுக்கொள்வது கஷ்டம் என்பது உண்மைதான். ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட அனுபவங்கள் காட்டுகிறபடி, சீனர்கள் உட்பட மெக்சிகோவில் வசிக்கும் அநேக மொழியினர் யெகோவாவின் சித்தத்தை அவருடைய உதவியோடு கற்றுக்கொள்கிறார்கள். பூமியின் பிற பாகங்களிலும் இதுவே நடக்கிறது.
[பக்கம் 17-ன் படம்]
மெக்சிகோ நகரில் நடந்த சீன மொழி வகுப்பு
[பக்கம் 18-ன் படம்]
மெக்சிகோவில் வசிக்கும் சாட்சி ஒருவர், சீன மொழியில் பைபிள் படிப்பு நடத்துகிறார்
[பக்கம் 18-ன் படம்]
சீன மொழியில் வீட்டுக்கு வீடு ஊழியம், மெக்சிகோ நகரம்