‘நீங்களெல்லாரும் வைத்திருக்கிற அன்பு அதிகரித்து வருகிறது’
இயற்கைப் பேரழிவுகள் பல, 2004-ல் ஜப்பானை தாக்கின. சூறாவளி, வெள்ளம், பூகம்பம் ஆகியவை அவற்றில் சில. அவை அநேகருடைய வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கின. யெகோவாவின் சாட்சிகளுடைய வாழ்க்கை இதற்கு விதிவிலக்கல்ல. (பிரசங்கி 9:11, NW) என்றாலும், இதுபோன்ற பேரழிவுகள், சகோதர அன்பை வெளிப்படுத்த யெகோவாவின் சாட்சிகளுக்குப் பொன்னான வாய்ப்புகளை அளித்திருக்கின்றன.—1 பேதுரு 1:22.
உதாரணத்திற்கு, ஜூலை மாதத்தில் பெய்த கன மழை காரணமாக மத்திய ஜப்பானில் ஒரு நதி கரைபுரண்டு ஓடியது. இதனால் 20-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகளுடைய வீடுகள் சேதமடைந்தன. அங்கிருந்த ஒரு ராஜ்ய மன்றத்திற்குள் ஏறக்குறைய மூன்றடி உயரத்திற்குத் தண்ணீர் வந்துவிட்டது. உடனடியாக, பக்கத்து சபைகளைச் சேர்ந்த சாட்சிகள் உதவிக்கரம் நீட்ட ஓடி வந்தார்கள். சேறும் சகதியும் நிறைந்த வீடுகளை நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சுத்தம் செய்தார்கள். பாதிக்கப்பட்ட ராஜ்ய மன்றத்தை இரண்டே வாரத்தில் முழுமையாகச் சுத்தம் செய்து, பழுதுபார்த்து முடித்தார்கள்.
அதன்பிறகு அக்டோபர் 23 அன்று, ரிக்டர் ஸ்கேலில் 6.8 என பதிவாகிய பூகம்பம் அதே இடத்தைத் தாக்கியது. அது குறைந்தது 40 உயிர்களைப் பலிவாங்கியது. 1,00,000-க்கும் அதிகமானவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்ற வேண்டியதாயிற்று. தண்ணீர், காஸ், மின்சாரம் போன்ற வசதிகள் துண்டிக்கப்பட்டன. பூகம்பம் மையங்கொண்டிருந்த இடம், புதுப்பிக்கப்பட்ட ராஜ்ய மன்றத்தின் பகுதியிலிருந்து வெறும் 50 கிலோமீட்டரே தள்ளி இருந்தாலும், அந்த ராஜ்ய மன்றத்திற்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை. அது உடனடியாக, தற்காலிக நிவாரண மையமாக மாற்றப்பட்டது. சகோதர சகோதரிகள் பத்திரமாக இருக்கிறார்களா என்பதை கிறிஸ்தவக் கண்காணிகள் உடனடியாக ஊர்ஜிதம் செய்துகொண்டார்கள். யாரும் அதில் காயமோ மரணமோ அடையவில்லை என்பதை அறிந்து நிம்மதி அடைந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்க மறுநாள் காலை ஆறு தொண்டர்கள் வந்தார்கள்; இவர்கள் ஜூலை மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள். பூகம்பம் தாக்கிய சில மணிநேரங்களிலேயே நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டன.
“முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை அளித்தார்கள்; தங்களுக்குக் கிடைத்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் ஓர் அரிய வாய்ப்பாக அதைக் கருதினார்கள். விடியற்காலையிலிருந்து நள்ளிரவுவரை அவர்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்தார்கள். இருந்தாலும், அவர்களுடைய முகம் சந்தோஷத்தில் பிரகாசித்தது!” என ஒரு கண்காணி சொன்னார்.
யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ சகோதரத்துவத்தை அன்பு எனும் கட்டு இறுகப் பற்றிக்கொண்டிருப்பதால் வெள்ளமோ பூகம்பமோ அதைத் தகர்க்க முடியாது. அதற்கு மாறாக, இதுபோன்ற பேரழிவுகள் தாக்குகையில், தெசலோனிக்கேயாவிலிருந்த சக விசுவாசிகளுக்கு அப்போஸ்தலன் பவுல் சொன்னதை கிறிஸ்தவர்கள் அனுபவத்தில் காண்கிறார்கள். அவர் இவ்வாறு சொன்னார்: ‘நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரித்து வருகிறது.’—2 தெசலோனிக்கேயர் 1:3.