மீட்கும் பலி கடவுளின் நீதியை மகிமைப்படுத்துகிறது
ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்கு விரோதமாக கலகம் செய்த பிறகு, அவர் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற ஒரு வித்தை எழுப்பப் போவதாகவும் அந்த வித்தின் குதிங்கால் நசுக்கப்படப் போவதாகவும் சொன்னார். (ஆதியாகமம் 3:15) அவருடைய எதிரிகள், இயேசு கிறிஸ்துவை கழுமரத்தில் அறைந்து கொன்றபோது அது நிறைவேறியது. (கலாத்தியர் 3:13, 16) இயேசுவினிடத்தில் துளியும் பாவம் இல்லை. ஏனெனில், அவர் ஒரு கன்னியின் வயிற்றில் பரிசுத்த ஆவியினால் அற்புதமாக உருவாக்கப்பட்டார். எனவே, ஆதாமினால் பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைகளாகியுள்ள மனிதகுலத்தை விடுதலை செய்ய இயேசு இரத்தம் சிந்தினார். அவர் சிந்திய இரத்தம் மீட்கும்பொருளாக உபயோகப்படுத்தப்பட்டது.—ரோமர் 5:12, 19.
சர்வ வல்லமையுள்ள யெகோவா தேவன் தம்முடைய நோக்கத்தை நிச்சயம் நிறைவேற்றுவார். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதனால்தான், மனிதன் பாவத்திற்கு அடிமையானபோது, மீட்கும் பலி ஏற்கெனவே செலுத்தப்பட்டதுபோல் அவரால் உணர முடிந்தது; அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறுமென விசுவாசிப்பவர்களுடன் அவரால் தொடர்புகொள்ளவும் முடிந்தது. இதன் காரணமாக, அவரால் ஆதாமின் பாவமுள்ள சந்ததியினரோடு, உதாரணத்திற்கு ஏனோக்கு, நோவா, ஆபிரகாம் போன்றவர்களோடு நடக்கவும் நண்பர்களாக பழகவும் முடிந்தது. அதே சமயத்தில் அவருடைய பரிசுத்த தன்மைக்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் முடிந்தது.—ஆதியாகமம் 5:24; 6:9; யாக்கோபு 2:23.
ஆனால், யெகோவா தேவனை விசுவாசித்த சிலர் அவருக்கு விரோதமாக கொடிய பாவங்களைச் செய்திருக்கின்றனர். அதற்கு ஒரு உதாரணம் தாவீது ராஜா. ‘பத்சேபாளுடன் விபச்சாரம் செய்ததோடு அவளுடைய கணவர் உரியாவையும் தாவீது கொலை செய்தாரே, அப்படியிருந்தும் தாவீதை ஏன் யெகோவா தொடர்ந்து ஆசீர்வதித்தார்?’ என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு முக்கிய காரணம், தாவீதின் உண்மையான மனந்திரும்புதலும், அவருடைய விசுவாசமும்தான். (2 சாமுவேல் 11:1-17; 12:1-14) மனந்திரும்பிய தாவீதின் பாவங்களை இயேசு கிறிஸ்து செலுத்தவிருந்த மீட்கும் பலியின் அடிப்படையில் கடவுள் மன்னித்தார், அதே சமயத்தில் தம்முடைய நீதிநியாயத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தார். (சங்கீதம் 32:1, 2) இதற்கு அத்தாட்சியாக, இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியால் விளைந்த அற்புதமான நன்மைகளைப் பற்றி பைபிள் சொல்லும்போது ‘முற்காலத்திலும் இக்காலத்திலும் நடந்த பாவங்களைப் பொறுத்துக்கொண்டதைக் குறித்துத் தேவன் தம்முடைய நீதியைக் காண்பித்தார்’ என்கிறது.—ரோமர் 3:25, 26.
ஆம், இயேசு சிந்திய இரத்தத்தின் மதிப்பால் மனிதகுலம் மாபெரும் நன்மைகளைப் பெற்றுக்கொள்கிறது. மனந்திரும்பும் பாவமுள்ள மனிதர்கள் மீட்கும் பலியின் அடிப்படையில் கடவுளோடு நெருங்கிய உறவை அனுபவிக்க முடிகிறது. அதோடு, இறந்தவர்கள் கடவுளுடைய புதிய உலகில் உயிர்த்தெழுப்பப்படுவதற்கான வாய்ப்பை அது திறந்துவைக்கிறது. இயேசு மீட்கும் பலியைச் செலுத்துவதற்கு முன் இறந்துபோயிருந்த விசுவாசமுள்ள கடவுளுடைய ஊழியர்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். கடவுளைப் பற்றி அறியாமலும் அவரை வணங்காமலும் இறந்துபோயிருந்த ஏராளமானோரும்கூட உயிர்த்தெழுப்பப்படுவார்கள். ஏனெனில், ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 24:15) அச்சமயத்தில், மீட்கும் பலியின் அடிப்படையில் கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு யெகோவா நித்திய ஜீவனைப் பரிசாக வழங்குவார். (யோவான் 3:36) இயேசு தாமே இவ்வாறு சொன்னார்: ‘தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.’ (யோவான் 3:16) மீட்கும் பலி என்ற ஏற்பாட்டை கடவுள் செய்ததால்தான் இந்த நன்மைகளை எல்லாம் மனிதவர்க்கம் அனுபவிக்கப்போகிறது.
மீட்கும் பலியின் தலைசிறந்த அம்சம், அதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் அல்ல. அதைவிட முக்கியமாக யெகோவாவின் பெயருக்கு அது சேர்க்கும் மகிமையே. பாவமுள்ள மனிதர்களோடு தொடர்புகொண்டாலும் பரிசுத்தராகவே இருக்கிற யெகோவா, நீதி தவறாத தேவன் என்பதை இந்த மீட்கும் பலி நிரூபிக்கிறது. ஒருவேளை மீட்கும் பலி என்ற ஏற்பாட்டை யெகோவா செய்யவில்லை என்றால், ஆதாமின் சந்ததியில் வந்த யாராலும், ஏன் ஏனோக்கு, நோவா, ஆபிரகாம் போன்றவர்களாலும்கூட யெகோவா தேவனோடு நடந்திருக்கவோ நண்பராக இருந்திருக்கவோ முடியாது. சங்கீதக்காரன் இதை உணர்ந்ததால்தான் இவ்வாறு எழுதினார்: “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.” (சங்கீதம் 130:3) தம்முடைய அருமையான குமாரனை பூமிக்கு அனுப்பியதற்காக யெகோவாவுக்கும், மனமுவந்து தம்முடைய உயிரை நமக்கு மீட்கும் பலியாய்க் கொடுத்ததற்காக இயேசுவுக்கும் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்!—மாற்கு 10:45.