நீங்கள் ‘தேவனிடத்தில் ஐசுவரியவானாய்’ இருக்கிறீர்களா?
இயேசு கிறிஸ்து சொன்ன சிந்தையைத் தூண்டும் உவமைகளில் ஒன்று செல்வந்தரான நிலச் சொந்தக்காரனைப் பற்றியது. தன்னுடைய எதிர்காலத்திற்காக இந்த நிலச் சொந்தக்காரன் பெரிய பெரிய களஞ்சியங்களைக் கட்டுவதற்குத் திட்டம் தீட்டினான். ஆனால் இயேசு கூறிய இந்த உதாரணத்தில், அவனை ‘மதிகேடன்’ என்று அழைத்தார். (லூக்கா 12:16-21) பல பைபிள் மொழிபெயர்ப்புகள் இதற்கு “முட்டாள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றன. அவனை இந்தளவு கண்டனம் பண்ணுவதற்குக் காரணம் என்ன?
ஏனென்றால் இந்தச் செல்வந்தன் எதிர்காலத்திற்காக திட்டம் தீட்டியபோது கடவுளை நினைத்துப் பார்க்கவில்லை. அதோடு, அந்த நிலத்தின் விளைச்சலுக்காக அவருக்கு நன்றியும் செலுத்தவில்லை. (மத்தேயு 5:45) அதற்கு மாறாக, “ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு” என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டான். ஆம், தனது முயற்சியின் பலனாகப் பெற்ற இந்த சொத்துசுகங்கள்தான் தனக்கு ‘அரணான பட்டணமாக’ இருக்கும் என்று நினைத்துக்கொண்டான்.—நீதிமொழிகள் 18:11.
பெருமைபாராட்டும் இத்தகைய குணத்தை கண்டித்து, சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந் தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே.”—யாக்கோபு 4:13, 14.
இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. அதனால்தான் இயேசு தம்முடைய உவமையில், “மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்” என்று அந்தச் செல்வந்தனிடம் கேட்டார். மறைந்து போகும் புகையைப்போல இந்த ஐசுவரியவானும் தன் கனவுகள் நனவாவதற்குள் மறைந்து போவான். இந்த உவமையில் உள்ள பாடத்தைப் புரிந்துகொள்கிறோமா? இயேசு இவ்வாறு தொடர்ந்து சொன்னார்: “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான்.” எனவே நீங்கள் ‘தேவனிடத்தில் ஐசுவரியவானாய்’ இருக்கிறீர்களா?