“அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள்”
ஷென்வியவ் டி காலி—பிரான்சு நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான சார்ல்ஸ் டி காலியின் அண்ணன் மகள்—வடக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ராவன்ஸ்புரூக் நாசி சித்திரவதை முகாமிலிருந்த யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி தனிப்பட்ட விதமாக அறிய வந்தார். ஆகஸ்ட் 1945 தேதியிட்ட ஒரு கடிதத்தில் மேற்குறிப்பிடப்பட்ட வார்த்தைகளை அவர் எழுதினார்.
ஜனவரி 27, 1945-ல் போலந்திலுள்ள ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமிலிருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். இதுவே, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் பலியானவர்களுடைய நினைவுநாளாக 1996 முதற்கொண்டு இருந்து வருகிறது.
ஜனவரி 27, 2003-ல் ஆற்றிய நினைவுநாள் சொற்பொழிவில், பாடன் வுர்டம்பர்க் ஸ்டேட் பார்லிமெண்ட் ஜனாதிபதி பேட்ட ஷ்ட்ராப் இவ்வாறு குறிப்பிட்டார்: “மத அல்லது அரசியல் நம்பிக்கைகளுக்காக துன்புறுத்தப்பட்டவர்களும் அடிபணிவதற்குப் பதிலாக மரணத்தை ஏற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாய் இருந்தவர்களும் நமது பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள், இத்தகைய மதிப்பையும் மரியாதையையும் வார்த்தைகளில் வடிப்பது கடினம். ஹிட்லர் ஆட்சியின் கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்த ஒரே மதத்தினர் யெகோவாவின் சாட்சிகளே. ‘ஹிட்லர் சல்யூட்’ செய்ய அவர்கள் தங்களுடைய கையை உயர்த்தவில்லை. இராணுவ சேவையையும் இன்னும் பிற சேவைகளையும் செய்ய மறுத்தது போலவே ‘கொடுங்கோலனுக்கும் அவனுடைய ஆட்சிக்கும்’ விசுவாசமாயிருப்பதற்கு உறுதிமொழி எடுத்துக்கொள்ளவும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் ஹிட்லர் இளைஞர் இயக்கத்தில் சேரவில்லை.”
இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றுவோரைப் பற்றி இவ்வாறு கூறினார்: “நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல.” (யோவான் 17:16) ஆகவே, யெகோவாவின் சாட்சிகளுடைய நிலைநிற்கை முற்றிலும் மத அடிப்படையிலானது. ஷ்ட்ராப் தொடர்ந்து இவ்வாறு கூறினார்: “சித்திரவதை முகாம் கைதிகளாக யெகோவாவின் சாட்சிகளுடைய உடைகளில் ஊதா நிறத்தில் ஒரு முக்கோண வடிவ அடையாளம் இருந்தது, அவர்கள் மாத்திரமே சிறை தண்டனையையோ மரண தண்டனையையோ தவிர்த்திருக்க முடியும். தங்களுடைய விசுவாசத்தை மறுதலித்து உறுதிமொழி பத்திரத்தில் ஒரு கையெழுத்திட்டால் போதுமானதாக இருந்தது.”
யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பாலோரை பொறுத்தவரை, விசுவாசத்தை மறுதலிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, சுமார் 1,200 பேர் நாசிக்களின் ஆட்சி காலத்தில் இறந்துபோனார்கள். மனசாட்சியின் நிமித்தம் இராணுவத்தில் சேர மறுத்ததற்காக இருநூற்று எழுபது பேர் கொலை செய்யப்பட்டார்கள். “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என இவர்கள் வெறுமனே வாயில் சொல்லவில்லை.—அப்போஸ்தலர் 5:29.
யெகோவாவின் சாட்சிகள் அசாதாரணமான மக்கள் அல்ல என்று உல்ரிக் ஷ்மிட் குறிப்பிட்டார், இவர் வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபேலியாவின் ஸ்டேட் பார்லிமெண்ட் ஜனாதிபதி ஆவார். அவருடைய பேச்சை குறிப்பிட்டு, லான்டாக் இன்டர்ன் என்ற சிற்றேடு அவர்களை இவ்வாறு அழைத்தது: “மனசாட்சிக்குப் பயந்து நடந்து, தங்களுடைய மத நம்பிக்கைகளின் நிமித்தம் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நின்ற சாதாரண மக்கள்; தைரியமிக்க குடிமக்கள், கிறிஸ்தவ நம்பிக்கைக்காக நாசி கொள்கையை எதிர்த்தவர்கள்.” கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும் தமக்கு விசுவாசமாயிருந்த அனைவரைக் குறித்தும் யெகோவா தேவன் அகமகிழ்கிறார் என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம். நீதிமொழிகள் 27:11-ல் இவ்வாறு வாசிக்கிறோம்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.”
[பக்கம் 30-ன் படத்திற்கான நன்றி]
Courtesy of United States Holocaust Memorial Museum