உண்மையான போதனைகள்—எங்கே கண்டடையலாம்?
திபெத்திலுள்ள ஒருவர் ஜெப உருளையை சுழற்றுகிறார்; டிரம் போன்ற அந்த உருளைக்குள் துண்டுக் காகிதங்களில் ஜெபங்களை எழுதிப் போட்டிருக்கிறார். ஒவ்வொரு முறை உருளையைச் சுழற்றும்போதும் அதிலுள்ள பிரார்த்தனைகளை அவர் மீண்டும் சொல்வதாக நம்புகிறார். இந்தியாவிலுள்ள ஒரு பெரிய வீட்டில், பூஜைக்கென்றே ஓர் அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த அறையில் வைக்கப்பட்டுள்ள அநேக தெய்வச் சிலைகளுக்கும் படங்களுக்கும் முன், சூடம் ஏற்றி, ஊதுபத்தி காட்டி, பூ போட்டு, படையல் வைத்து பூஜை நடத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான மைலுக்கு அப்பால் இத்தாலியில், கலைவேலைப்பாடுமிக்க ஒரு சர்ச்சில், இயேசுவின் தாயான மரியாளுடைய சிலைக்கு முன்பு, கையில் ஜெபமாலையுடன் ஒரு பெண் மண்டியிட்டு ஜெபம் செய்கிறாள்.
இப்படி, மதம் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை ஒருவேளை நீங்களே கண்கூடாக பார்த்திருப்பீர்கள். “மதம் . . . உலகெங்கும் உள்ள சமுதாயங்களின் உயிர்நாடியாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது, இப்போதும் இருந்து வருகிறது” என உலக மதங்கள்—உயிருள்ள நம்பிக்கைகளைப் புரிந்துகொள்ளுதல் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. கடவுள்—சுருக்கமான சரித்திரம் என்ற ஆங்கில புத்தகத்தில் ஜான் பாக்கர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அண்டத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியாக அல்லது படைப்பாளராகக் கடவுள்மீது நம்பிக்கை வைக்காத மனித சமுதாயமே கிடையாது. மதப் பற்று இல்லாத சமுதாயங்களிலும் இந்நம்பிக்கை காணப்படுகிறது.”
இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் மதம் நிஜமாகவே செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. மனிதனுக்கு ஆன்மீக உணர்வும் அதற்கான தேவையும் வாஞ்சையும் இருக்கிறது என்பதற்கு இது பலமான அத்தாட்சி, அல்லவா? மனிதன் தனக்கு அப்பாற்பட்ட சக்தியை வணங்க விரும்புவதைப் பற்றி, கண்டுபிடிக்கப்படாத சுய தன்மை என்ற ஆங்கில புத்தகத்தில், பிரபல மனோதத்துவ டாக்டரான கார்ல் ஜி. ஜங் குறிப்பிடுகிறார்; மேலும், “அந்த விருப்பத்தை மனித சரித்திரம் முழுவதிலும் தெளிவாகக் காண முடிந்திருக்கிறது” என்றும் சொல்கிறார்.
இருப்பினும் அநேகருக்குக் கடவுள் மீதும் நம்பிக்கை இல்லை, மதத்திலும் ஈடுபாடு இல்லை. கடவுள் இருப்பதை சந்தேகிக்கும் அல்லது மறுக்கும் நபர்கள், அவர்களுக்குப் பழக்கப்பட்ட மதங்கள் அவர்களுடைய ஆன்மீக தேவையைப் பூர்த்தி செய்ய தவறியதாலேயே அந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மதம் என்பது “ஏதோவொரு கொள்கையின் மீது காட்டப்படும் பக்தி; உறுதியான விசுவாசம் அல்லது உண்மைத்தன்மை; கடமையுணர்ச்சி; பக்தியுடன்கூடிய பாசம் அல்லது பற்று” என்றெல்லாம் வரையறுக்கப்படுகிறது. இந்த விளக்கத்தின்படி பார்த்தால், நாத்திகர்கள் உட்பட கிட்டத்தட்ட எல்லாருமே, தங்கள் கொள்கைகள்மீது ஏதோவொரு வகையான பக்தியைக் காட்டுவதால் அவர்களுக்கு மத நம்பிக்கை இருக்கிறதென சொல்லலாம்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனிதன் தன் ஆன்மீக தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்குப் பல்வேறு வழிபாட்டு முறைகளை முயன்று பார்த்திருக்கிறான். இதன் விளைவாக உலகெங்கும் கணக்கு வழக்கில்லாமல் ஏராளமான மதங்கள் தோன்றியிருக்கின்றன. உதாரணத்திற்கு, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியில் நம்பிக்கை வைக்கும்படி கிட்டத்தட்ட எல்லா மதங்களுமே சொன்னாலும் அந்த சக்தி எது அல்லது யார் என்பதன்பேரில் வித்தியாசமான கருத்துகளை போதிக்கின்றன. அதேபோல், இரட்சிப்பு அல்லது மோட்சம் மிக முக்கியமென பெரும்பாலான மதங்கள் வலியுறுத்தினாலும் அது என்ன, அதை எவ்வாறு பெறலாம் என்பதன்பேரில் வெவ்வேறு விதமாக போதிக்கின்றன. இப்படி பலதரப்பட்ட போதனைகள் இருப்பதால், கடவுளைப் பிரியப்படுத்தும் உண்மையான போதனைகளை நாம் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?