“போராட்டம் முடிந்தது!”
யெகோவாவின் சாட்சிகள் 2002-ம் ஆண்டில் காங்கோ மக்கள் குடியரசின் வடமேற்குப் பகுதியிலுள்ள அம்பான்டாக்கா என்ற நகரத்தில் மாவட்ட மாநாடு ஒன்றை நடத்தினார்கள். அந்த மாநாட்டில், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் லிங்காலா மொழியில் வெளியிடப்பட்டது. அப்போது, பார்வையாளர்கள் சந்தோஷத்தில் உண்மையிலேயே துள்ளிக் குதித்தார்கள், சிலர் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். பிறகு, அந்தப் புதிய பைபிளை நன்றாகப் பார்ப்பதற்காக அவர்கள் மேடைக்கு விரைந்து வந்து, “பாசூக்கி, பாசாம்ப்வி” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். “போராட்டம் முடிந்தது! இனி அவர்களுக்கு அவமானம்தான்!” என்பதே அதன் அர்த்தம்.
பார்வையாளர்கள் ஏன் அந்தளவு மெய்சிலிர்த்துப் போனார்கள், அவர்கள் ஏன் அந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்? அம்பான்டாக்காவின் சில பகுதிகளில், யெகோவாவின் சாட்சிகளால் லிங்காலா பைபிளை வாங்க முடியவில்லை. ஏன்? ஏனென்றால் சர்ச்சுகள் யெகோவாவின் சாட்சிகளுக்கு பைபிளை விற்க மறுத்தார்கள். மூன்றாம் நபர் மூலமாக பைபிள் பிரதிகளை யெகோவாவின் சாட்சிகள் வாங்க வேண்டியிருந்தது. பைபிளை வாங்குவதை இனிமேல் சர்ச்சுகள் தடுக்க முடியாததால் இப்பொழுது அவர்கள் சந்தோஷ வெள்ளத்தில் மிதந்தார்கள்.
இந்தப் புதிய மொழிபெயர்ப்பு யெகோவாவின் சாட்சிகளுக்கு மட்டுமல்ல, பொது மக்களுக்கும்கூட பயனளிக்கும். மாநாட்டு வளாகத்திலிருந்து ஒலிபெருக்கிகள் வாயிலாக தன் வீட்டிலிருந்தே நிகழ்ச்சியைக் கேட்ட ஒருவர் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு இவ்வாறு எழுதினார்: “இந்த பைபிளை நீங்கள் வெளியிட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அநேக விஷயங்களைப் பற்றி இது எங்களுக்கு அறிவொளியூட்டும். நான் ஒரு யெகோவாவின் சாட்சி அல்ல, ஆனால் நீங்கள் இப்பொழுது வெளியிட்டுள்ள பைபிளைப் பெறுவதற்கு அதிக ஆவலாய் காத்துக்கொண்டிருக்கிறேன்.”
பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு இப்பொழுது முழுமையாக 33 மொழிகளில் கிடைக்கிறது; அதோடு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம், லிங்காலா மொழி உட்பட, 19 மொழிகளில் கிடைக்கிறது. இந்த மிகச் சிறந்த பைபிளைப் பெறுவதற்கு யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரை நீங்கள் ஏன் தொடர்புகொள்ளக் கூடாது?