மனசமாதானம் தேடி
ஆல்பர்ட் என்பவர் இரண்டு அழகிய பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான மணவாழ்வை அனுபவித்து வந்தார். ஆனால் தனது வாழ்க்கையில் ஏதோ குறைவுபடுவதை அவர் உணர்ந்தார். வேலை தேடி அலைந்து கொண்டிருந்த சமயத்தில், அரசியலில் சேர்ந்து சோஷியலிச கொள்கையை தழுவ ஆரம்பித்தார். உள்ளூரிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து கட்சி விவகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.
ஆனால், சீக்கிரத்திலேயே கம்யூனிச கொள்கையில் அவருக்கு நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. அரசியலோடு வைத்திருந்த உறவையும் முறித்துக்கொண்டு, குடும்பத்தை கவனிப்பதற்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். குடும்பத்தை சந்தோஷமாக வைத்துக்கொள்வதே வாழ்க்கையில் அவருடைய இலட்சியமாக ஆனது. என்றாலும், ஏதோ வெறுமையுணர்வு இன்னும் தொற்றியிருப்பதை ஆல்பர்ட் உணர்ந்தார்; உண்மையான மனசமாதானம் அவரைவிட்டு நழுவிப்போய்க் கொண்டே இருந்தது.
ஆல்பர்ட்டின் கதை ஏதோ விநோதமான ஒன்றல்ல. வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க கோடானுகோடி பேர் பல்வேறு சித்தாந்தங்களிலும் தத்துவங்களிலும் மதங்களிலும் தேடிப் பார்த்திருக்கிறார்கள். மேலை நாடுகளில், 1960-களில் தோன்றிய ஹிப்பி இயக்கம், பாரம்பரியமாக மக்கள் கடைப்பிடித்து வந்த தார்மீக மற்றும் சமுதாய நெறிமுறைகளுக்கு விரோதமாக செயல்பட்டது. முக்கியமாக இளைஞர்கள், மனதை மயக்கும் போதைப் பொருட்களின் மூலமும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த குருக்கள் மற்றும் “ஆன்மீகத் தலைவர்களுடைய” தத்துவங்களின் மூலமும் சந்தோஷத்தையும் வாழ்க்கையின் அர்த்தத்தையும் தேடிப் போனார்கள். ஆனால் ஹிப்பி இயக்கம் உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கத் தவறியது. மாறாக, போதைக்கு அடிமையானவர்களையும் காமுகர்களையுமே பிறப்பித்து, ஒழுக்க ரீதியில் சமுதாயம் இன்னும் கீழ்நோக்கிச் சரிவதற்கே அடிகோலியது.
நூற்றாண்டுகளாக, உயர் கல்வி, செல்வம், அதிகாரம் ஆகியவற்றின் வாயிலாக சந்தோஷத்தைக் காண அநேகர் முயன்றிருக்கிறார்கள். இவை கடைசியில் ஏமாற்றத்திற்குத்தான் வழிநடத்தின. “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல” என்று இயேசு கூறினார். (லூக்கா 12:15) செல்வம் சேர்ப்பதில் குறியாக இருப்பது பொதுவாக வேதனையைத்தான் தருகிறது. பைபிள் இவ்வாறு கூறுகிறது: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, . . . அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:9, 10.
அப்படியானால், மனசமாதானத்தையும் வாழ்க்கையின் அர்த்தத்தையும் ஒருவர் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? இது, ஏதோ குருட்டாம் போக்கில் அம்பு எய்வதைப் போன்ற ஒரு செயலா? இல்லை. அடுத்து வரும் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறபடி, மனிதனுடைய மிக முக்கியமான ஒரு தேவையை—ஆம், தனித்தன்மைமிக்க ஒரு தேவையை—திருப்தி செய்வதிலேயே இதற்கு பதில் இருக்கிறது.
[பக்கம் 3-ன் படம்]
உயர் கல்வி, செல்வம், அதிகாரம் ஆகியவை மனசமாதானத்தைக் கண்டடைய உதவுமா?