எதிர்ப்பைச் சந்திக்கையில் மனவுறுதி
அப்போஸ்தலன் பவுலின் தோழர்களான காயுவையும் அரிஸ்தர்குவையும் கலகக்கார கும்பல் ஒன்று எபேசுவிலிருந்த அரங்கிற்குள் இழுத்துச் சென்றிருந்தது. அங்கே அந்தக் கும்பல்காரர்கள் “எபேசியருடைய தியானாளே [ஆர்டிமிஸே] பெரியவள்” என்று இரண்டு மணிநேரம் கோஷமிட்டார்கள். (அப்போஸ்தலர் 19:28, 29, 34) இந்த எதிர்ப்பின்போது பவுலின் தோழர்கள் உறுதியாக நிலைத்திருந்தார்களா? முதலாவதாக இந்த எதிர்ப்புக்கு எது அடிகோலியது?
எபேசு பட்டணத்தில் பவுல் சுமார் மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாகப் பிரசங்கித்து வந்திருந்தார். அதன் விளைவாக, எபேசுவிலிருந்த பலர் விக்கிரகங்களை வணங்குவதை நிறுத்தியிருந்தார்கள். (அப்போஸ்தலர் 19:26; 20:31) கருவள தேவதை ஆர்டிமிஸுக்கு செய்யப்பட்ட வெள்ளியாலான சிறிய மாடமே எபேசியருடைய முக்கிய விக்கிரகமாக இருந்தது. ஆர்டிமிஸுக்குக் கட்டப்பட்ட பிரமாண்டமான கோவில் பட்டணத்தைப் பார்த்தாற்போல் அமைந்திருந்தது. இக்கோவிலின் சிறிய உருவங்கள் தாயத்துகளாக அணியப்பட்டன அல்லது வீடுகளில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டன. கிறிஸ்தவர்கள் இந்த விக்கிரகங்களை வாங்கவில்லை என்பதில் சந்தேகமில்லை.—1 யோவான் 5:21.
லாபம் கொழிக்கும் தன் தொழிலுக்கு பவுலுடைய ஊழியம் உலை வைத்துவிட்டதென தெமேத்திரியு என்ற தட்டான் நினைத்தான். அதனால் இல்லாததையும் பொல்லாததையும் சக தொழிலாளிகளிடம் சொல்லி, ஆசியா மைனர் எங்கும் வசிப்பவர்கள் ஆர்டிமிஸை வணங்குவதை நிறுத்திவிடுவார்கள் என்று அவர்களை நம்ப வைத்தான். கொதித்துப்போன வெள்ளி தட்டான்கள் ஆர்டிமிஸைப் புகழ்ந்து கோஷமிட ஆரம்பித்தபோது, அந்தப் பட்டணம் முழுவதிலும் கலகம் வெடித்தது, அதனால் அங்கே ஒரே குழப்பம் நிலவியது.—அப்போஸ்தலர் 19:24-29.
ஆயிரக்கணக்கானோர் அரங்கிற்குக் கூடிவந்தார்கள்; அது 25,000 பேர் அமரக்கூடிய அரங்கம். கூடிவந்திருந்த அந்தக் கலகக்காரக் கும்பலிடம் பேச பவுல் முன்வந்தார். ஆனால் நல்மனமுள்ள அதிகாரிகளோ அவ்வாறு செய்ய வேண்டாமென அவரைக் கேட்டுக் கொண்டார்கள். கடைசியில், பட்டணத்து சம்பிரதி அந்தக் கலகக்காரரை ஒருவழியாக அமைதிப்படுத்தினார். காயுவும் அரிஸ்தர்க்கும் பத்திரமாகத் தப்பினர்.—அப்போஸ்தலர் 19:35-41.
இன்றும் கடவுளுடைய ஜனங்கள் ஊழியம் செய்கையில், எதிர்ப்புகளையும் கலகங்களையும்கூட சந்திக்கக்கூடும். விக்கிரகாராதனை, ஒழுக்கக்கேடு, குற்றச்செயல் ஆகியவை சர்வசாதாரணமாக காணப்படும் இடங்களில் அவர்கள் பெரும்பாலும் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள். என்றாலும், எதையும் ‘மறைத்து வைக்காமல் [எபேசு பட்டணத்தில்] வெளியரங்கமாகவும் வீடுகள்தோறும்’ பிரசங்கித்த அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியை அவர்கள் தைரியமாகப் பின்பற்றுகிறார்கள். (அப்போஸ்தலர் 20:20) அதேபோல், ‘யெகோவாவின் வசனம் விருத்தியடைந்து மேற்கொள்வதை’ பார்க்கையில் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.—அப்போஸ்தலர் 19:20.
[பக்கம் 30-ன் படம்]
எபேசுவிலுள்ள அரங்கத்தின் இடிபாடுகள்