பைபிள் சரித்திரம்—எவ்வளவு துல்லியமானது?
இஸ்ரேல் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ச்சையிம் ஹர்ட்சாக்கும், டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிரிவின் முன்னாள் பேராசிரியர் மர்டிகை கிச்சனும், பைபிளில் வரும் போர்கள் என்ற தங்களது ஆங்கில நூலில் பின்வரும் குறிப்பைத் தெரிவிக்கிறார்கள்:
“பைபிளில் வரும் போர்த் தந்திரங்களைப் பற்றிய விவரிப்புகள் . . . வெறும் கற்பனையில் உருவாகியிருக்க முடியாது. இதை நிரூபிக்க ஒரேவொரு அத்தாட்சியே போதுமானது. நியாயாதிபதிகள் புத்தகத்தில் 6 முதல் 8 அதிகாரங்களில் காணப்படுகிற விவரிப்பை—மீதியானியருக்கும் அவர்களது கூட்டுப் படையினருக்கும் எதிராக கிதியோன் மேற்கொண்ட போர் பற்றிய விவரிப்பை—ஹோமர் எழுதிய இலியட் என்ற காவியத்தில் காணப்படும் டிராஜன் போர்கள் பற்றிய விவரிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அது தெரிந்துவிடும். டிராஜன் போர் நடந்த இடத்தைப் பற்றிய விவரிப்பில், ஏதோவொரு கடற்கரையைப் பற்றியும் அதற்கருகே இருந்த ஏதோவொரு அரணான பட்டணத்தைப் பற்றியுமே சொல்லப்பட்டிருக்கிறது. . . . ஆனால் பைபிளில் சொல்லப்பட்ட கிதியோனின் போர் விவரிப்பு அப்படியல்ல. குறிப்பிட்ட நில அமைப்புகள், சுமார் 60 கிலோமீட்டர் நீள பரப்பளவில் நடைபெற்ற அந்த இரு படையினரின் போர் நடவடிக்கைகள், போர்த் தந்திரங்கள், மோதல்கள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள் நிச்சயமாக வெறும் கற்பனையில் உதித்திருக்கவே முடியாது. . . . ஆகையால், பைபிளில் வரும் போர்த் தந்திரங்களைப் பற்றிய விவரிப்புகள் உண்மைதான் என்பதை கண்டிப்பாக நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.”
நீங்கள் விரும்பினால், ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’a என்ற பைபிள் அட்லஸில் 18, 19 பக்கங்களில் காணப்படும் வரைபடத்தை உபயோகித்து கிதியோனின் போர் நடவடிக்கையைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். இந்தச் சம்பவம், ‘மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திய புத்திரர் யாவரும் ஏகமாய்க்கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கியபோது’ ஆரம்பமானது. அருகிலுள்ள கோத்திரங்களை கிதியோன் உதவிக்கு அழைத்தார். ஆரோத் எனும் நீரூற்று இருந்த இடத்திலிருந்து மோரே மேடு வரையிலும் யோர்தான் பள்ளத்தாக்கிலும் போர் நடந்தது. யோர்தான் நதியைக் கடந்து எதிரிகளைத் துரத்திக்கொண்டு போய் அவர்களை கிதியோன் வீழ்த்தினார்.—நியாயாதிபதிகள் 6:33–8:12.
‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ சிற்றேட்டிலுள்ள அந்த வரைபடம், குறிப்பிடத்தக்க முக்கிய இடங்களையும் அதன் சம்பந்தப்பட்ட நில அமைப்புகளையும் காட்டுகிறது. (பக்கம் 15-லுள்ள) மற்றொரு வரைபடம் இஸ்ரவேல் கோத்திரங்களின் பிராந்தியங்களை அடையாளம் காட்டுகிறது. இந்த இரண்டு வரைபடங்களும், அந்தச் சம்பவம் எந்தளவுக்குத் துல்லியமானது என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.
காலஞ்சென்ற பேராசிரியர் யோஹானான் ஆஹாரோனி என்பவர் தெரிவித்த கருத்தை இது விளக்குகிறது: “தேசங்களைப் பற்றிய பைபிள் விவரிப்புகளில் புவியியலும் சரித்திரமும் அந்தளவுக்கு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதால் ஒன்றின் உதவியில்லாமல் மற்றொன்றை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.”
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
பின்னணி வரைபடம்: Based on maps copyrighted by Pictorial Archive (Near Eastern History) Est. and Survey of Israel