மாசிடோனியாவின் தேவையைப் பூர்த்தி செய்தல்
‘மக்கெதோனியாவுக்கு [அதாவது மாசிடோனியாவுக்கு] வந்து எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.’ (அப்போஸ்தலர் 16:9) அப்போஸ்தலன் பவுலின் தரிசனத்தில் தோன்றிய மனிதன் கூறிய வார்த்தைகளே இவை. கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை ஒரு புதிய பிராந்தியத்தில், அதாவது இப்போது கிரீஸிலிருக்கும் நகரங்களில் பிரசங்கிக்க வேண்டிய தேவையை இவை சுட்டிக்காட்டின. இன்றும் அங்கே அப்படிப்பட்ட தேவை இருக்கிறதா?
தற்போது மாசிடோனியாவில் யெகோவாவின் சாட்சிகள் சிலரே இருக்கிறார்கள்; அதாவது 1,840 பேருக்கு ஒரு யெகோவாவின் சாட்சி என்ற வீதத்தில் இருக்கிறார்கள். அநேகர் யெகோவா தேவனைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. ஆம், இத்தேசத்து மக்கள் சமாதான செய்தியை கேள்விப்பட வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது.—மத்தேயு 24:14.
அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய கடவுள் வழி திறந்து வைத்திருக்கிறார். நவம்பர் 2003-ல் ஸ்கோப்ஜியில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய மாசிடோனிய அலுவலகத்திற்கு எதிர்பாராத விதமாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது சர்வதேச ஒத்துழைப்பிற்கான மாசிடோனிய மையத்திலிருந்து வந்திருந்தது. நவம்பர் 20-ம் தேதி ஆரம்பிக்கவிருந்த மூன்று நாள் கண்காட்சியில் ஒரு ஸ்டால் அமைத்து தங்கள் நம்பிக்கையை விளக்குமாறு யெகோவாவின் சாட்சிகளுக்கு அந்த மையம் அழைப்பு விடுத்தது. ராஜ்ய நற்செய்தியைப் பற்றி கேள்விப்பட்டிராத ஆயிரக்கணக்கானோரை சென்றெட்ட எப்பேர்ப்பட்ட மகத்தான வாய்ப்பு!
மாசிடோனிய மொழியில் யெகோவாவின் சாட்சிகளுடைய பல்வேறு பிரசுரங்களை காட்சிக்கு வைப்பதற்கான ஆயத்த வேலைகளை தன்னார்வ தொண்டர்கள் பம்பரமாகச் சுழன்று செய்து கொண்டிருந்தனர். ஆர்வமுள்ளவர்கள் எடுத்துக்கொள்வதற்கு வசதியாக இந்தப் பிரசுரங்களில் சிலவற்றை பரப்பி வைத்திருந்தனர். இதனால் புத்துணர்ச்சியூட்டும் ஆன்மீக தண்ணீரை இலவசமாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அநேகருக்குக் கிட்டியது.—வெளிப்படுத்துதல் 22:17.
முக்கியமாக, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள், குடும்ப மகிழ்ச்சியின் ரகசியம்a போன்ற பிரசுரங்களையே—தங்களுடைய வாழ்க்கை சம்பந்தமான விஷயங்களைக் கொண்ட பிரசுரங்களையே—பார்வையாளர்கள் அதிகம் விரும்பினார்கள். யெகோவாவின் சாட்சிகள் வந்து சந்திக்கும்படி 98 பேர் தங்களுடைய விலாசத்தைக் கொடுத்தார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய சிறந்த சேவையைப் பற்றியும், பிரசுரங்களின் தரத்தைப் பற்றியும் அநேகர் மெச்சி பேசினார்கள்.
ஒருவர் தன்னுடைய குட்டிப் பையனின் கையை பிடித்துக்கொண்டு அந்த ஸ்டாலுக்கு வந்தார். குழந்தைகளுக்கான புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார். என்னுடைய பைபிள் கதை புத்தகம்b என்ற பிரசுரத்தை சாட்சிகள் அவரிடம் காண்பித்தனர். அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ஆர்வமாக அதன் விலையைக் கேட்டார். யெகோவாவின் சாட்சிகளுடைய போதிக்கும் வேலை மனமுவந்த நன்கொடைகளாலேயே முழுவதுமாக ஆதரிக்கப்படுகிறது என்பதைக் கேட்டவுடன் இன்னும் அதிக ஆர்வமாகிவிட்டார். (மத்தேயு 10:8) தன்னுடைய மகனிடம் அந்தப் புத்தகத்தைக் காண்பித்து, “இது அருமையான புத்தகம்! உனக்கு தினமும் ஒரு கதையை இதிலிருந்து வாசித்துக் காட்டுகிறேன்!” என்றார்.
தத்துவ பேராசிரியர் ஒருவர் அந்த ஸ்டாலுக்கு வந்தார். அவர் பொதுவாக மதத்தைப் பற்றி, முக்கியமாக யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளைப் பற்றி அறிந்துகொள்ள வெகு ஆர்வமாக இருந்தார். கடவுளைத் தேடிc புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தவாறே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “விஷயங்கள் தர்க்கரீதியாக கொடுக்கப்பட்டிருக்கிறதே! விஷயங்களை எப்படி சொன்னால் நன்றாக இருக்குமென நான் நினைத்தேனோ அப்படியே இருக்கிறது.” பிறகு அவருடைய பள்ளி மாணவர்கள் சிலர் ஸ்டாலுக்கு வந்து தங்களுடைய பேராசிரியர் பெற்றுக்கொண்ட புத்தகத்தின் பிரதிகள் தங்களுக்கும் கிடைக்குமா என கேட்டார்கள். தங்களுடைய பேராசிரியர் வைத்திருந்த அதே புத்தகத்தைப் படிக்க அவர்கள் விரும்பினார்கள். அதை வைத்து அவர் வகுப்பு நடத்துவார் என அவர்கள் நினைத்தார்கள்.
இந்தக் கண்காட்சி ஆன்மீக சத்தியங்களை கேட்கவும் படிக்கவும் பலருக்கு முதன்முறையாக வாய்ப்பு அளித்தது. காது கேளாத டீனேஜர்கள் சிலர் அங்கே வந்தார்கள். சாட்சிகளில் ஒருவர், சைகை மொழி அறிந்த சிறு பெண்ணின் உதவியோடு அவர்களிடம் சுருக்கமாக பேசினார். காது கேளாதவர்கள் உட்பட வியாதியஸ்தர்கள் எல்லாரையும் இயேசு குணமாக்கினார் என்பதை எக்காலத்திலும் வாழ்ந்தவர்களில் மிகப் பெரிய மனிதர்d புத்தகத்திலுள்ள படங்களைக் காண்பித்து விளக்கினார். இயேசு விரைவில் அதை நம்முடைய நாளில் இந்தப் பூமியில் வாழும் மக்களுக்குச் செய்வார் என்ற பைபிளின் வாக்குறுதியை “கேட்பதில்” அவர்கள் அதிக சந்தோஷப்பட்டனர். அவர்களில் பலர் பைபிள் பிரசுரங்களை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர். சைகை மொழி தெரிந்த சாட்சி ஒருவர் அவர்களைச் சென்று சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மாசிடோனிய பத்திரிகைகள் மட்டுமின்றி, அல்பேனியன், ஆங்கிலம், மற்றும் துருக்கிஷ் பத்திரிகைகளும் வைக்கப்பட்டிருந்தன. மாசிடோனிய மொழி தெரியாத ஒருவர் ஆங்கிலத்தில் சில பிரசுரங்களைக் கேட்டார். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளைப் பெற்றுக்கொண்ட பிறகு, தான் துருக்கிஷ் பேசுபவர் என்று குறிப்பிட்டார். அவருடைய மொழியில் பிரசுரங்களைக் காட்டியபோது, அவருக்கு ஒரே ஆச்சரியம்! யெகோவாவின் சாட்சிகள் எல்லாருக்கும் உதவ விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டார்.
என்னே சிறந்த விதத்தில் சாட்சி கொடுக்கப்பட்டது! இத்தனை அநேகர் பைபிள் சத்தியத்திற்கு ஆர்வம் காட்டுவதைக் காண்பதும் எவ்வளவாய் உற்சாகம் அளித்தது! ஆம், மாசிடோனியாவில் அநேகர் ராஜ்ய நற்செய்தியைக் கேட்க யெகோவா வழிதிறந்து வைத்தார்.
[அடிக்குறிப்பு]
a அனைத்தும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.
b அனைத்தும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.
c அனைத்தும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.
d அனைத்தும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.
[பக்கம் 9-ன் பெட்டி/படங்கள்]
மைல் கல்!
கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை பரப்புவதற்கு மே 17, 2003-ல் ஒரு முக்கிய படி எடுக்கப்பட்டது. ஸ்கோப்ஜியில் யெகோவாவின் சாட்சிகளுடைய புதிய அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் கட்டுமானப் பணி இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்தது, அலுவலகம் நான்கு மடங்கு பெரிதாக விரிவுபடுத்தப்பட்டது.
இங்கு தனித்தனியே இருக்கும் மூன்று கட்டடங்களில் நிர்வாகம் மற்றும் மொழிபெயர்ப்பு அலுவலகங்களும், அதோடுகூட குடியிருப்பு அறைகள், சமையலறை, சலவை நிலையம் ஆகியவையும் உள்ளன. யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினர் கை பியர்ஸ் பிரதிஷ்டைப் பேச்சு கொடுக்க வந்திருந்தார். பத்து நாடுகளிலிருந்து வந்திருந்தவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். புதிய கட்டடங்களைப் பார்த்து அனைவரும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார்கள்.
[பக்கம் 8, 9-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பல்கேரியா
மாசிடோனியா
ஸ்கோப்ஜி
அல்பேனியா
கிரீஸ்
[பக்கம் 8-ன் படம்]
ஸ்கோப்ஜி, மாசிடோனியா