‘பதுமராகத்துக்கு ஒப்பாயிருந்தார்’
பேரழகுள்ள சிங்காசனம் ஒன்று பரலோகத்தில் இருப்பதை அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் கண்டார். அந்தச் சிங்காசனத்தில் வீற்றிருந்தவர் ‘வச்சிரக்கல்லுக்கு ஒப்பாயிருந்தார்.’ அவர் “பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்.” (வெளிப்படுத்துதல் 4:2, 3) இந்தக் கற்கள் எப்படிப்பட்டவை?
இவை வெளிப்புறம் மட்டுமே பிரகாசிக்கிற, ஒளி ஊடுருவாத கற்கள் அல்ல. “வச்சிரக்கல்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை ஜொலிக்கிற மணிக்கற்களையும், வண்ண வண்ணமான மற்ற கற்களையும் குறிப்பதற்குப் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்டது. வெளிப்படுத்துதல் 4:3-ல் சொல்லப்பட்டுள்ள “வச்சிரக்கல்,” “நிச்சயமாகவே இன்று கிடைக்கிற மட்ட ரக வச்சிரக்கல் அல்ல” என டி. ராபர்ட்ஸன் என்பவர் உவார்ட் பிக்சர்ஸ் இன் த நியு டெஸ்டமென்ட் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அதோடு, வெளிப்படுத்துதல் புத்தகத்தின் பிற்பகுதியில், பரலோக எருசலேம் நகரைப் பற்றி விவரிக்கும்போது யோவான் இவ்வாறு சொல்கிறார்: “அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப் போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப் போலவும் இருந்தது.” (வெளிப்படுத்துதல் 21:10, 11) ஒளி ஊடுருவும் கற்களைப் பற்றியே அவர் இங்கு குறிப்பிடுவதாகத் தெரிகிறது.
யோவானின் தரிசனத்தில் சிங்காசனத்திலிருப்பது போல் தெரிந்தவர், இப்பிரபஞ்சத்திலேயே மிகவும் மகத்தானவரான யெகோவா தேவன்தான். இப்பிரபஞ்சத்திலேயே மிகப் பரிசுத்தமானவரும் புனிதமானவரும் அவர்தான். அதற்கிசைவாக, அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை.” (1 யோவான் 1:5) எனவே, ‘அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல, தங்களையும் சுத்திகரித்துக்கொள்ளும்படி’ சக விசுவாசிகளை யோவான் ஊக்குவித்தார்.—1 யோவான் 3:3.
கடவுள் நம்மைச் சுத்தமானவர்களாகக் கருதுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மீது நாம் நம்பிக்கை வைப்பது மிகவும் அவசியமாகும். அதுமட்டுமல்ல, பைபிளைத் தவறாமல் படிப்பதன் மூலமும் அதன் போதனைகளுக்கு இசைவாக வாழ்வதன் மூலமும் தொடர்ந்து ‘ஒளியிலே நடப்பவர்களாக’ இருக்க வேண்டும்.—1 யோவான் 1:7.