“மிகச் சிறந்த” மொழிபெயர்ப்பு
ஒரு கணக்கீட்டின்படி, 1952-க்கும் 1990-க்கும் இடைப்பட்ட வருடங்களில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் 55 ஆங்கில மொழிபெயர்ப்புகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. வார்த்தைகளை தேர்ந்தெடுக்கும் உரிமை மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருப்பதால் எந்த இரு மொழிபெயர்ப்புகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆகவே மொழிபெயர்ப்பாளர்களின் படைப்பு எந்தளவு நம்பகமானது என்பதை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் அரிஜோனாவிலுள்ள ஃப்ளாக்ஸ்டாஃப்பிலிருந்த வட அரிஜோனா பல்கலைக்கழகத்தின் மத ஆய்வுகள் பிரிவின் துணைப் பேராசிரியர் ஜேசன் பெடூன், முக்கியமான எட்டு பைபிள் மொழிபெயர்ப்புகளை ஆராய்ந்து அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தார். யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளும் அவற்றுள் ஒன்று. அவர் என்ன முடிவுக்கு வந்தார்?
புதிய உலக மொழிபெயர்ப்பு பயன்படுத்தியிருக்கும் சில வார்த்தைகளை அவர் ஒத்துக்கொள்ளாத போதிலும் அது “மிகச் சிறந்த” மொழிபெயர்ப்பு என்றும், ஆராயப்பட்ட மற்ற மொழிபெயர்ப்புகளைவிட “தலை சிறந்தது” என்றும் “மேம்பட்டு விளங்குகிறது” என்றும் பெடூன் குறிப்பிட்டார். மொத்தத்தில் அவர் சொல்ல வந்தது இதுதான்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், “தற்போது கிடைக்கக்கூடிய மிகவும் திருத்தமான புதிய ஏற்பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்புகளில் ஒன்று,” மேலும், “ஒப்பிட்டுப் பார்த்த மொழிபெயர்ப்புகளிலேயே மிக திருத்தமானது.”—மொழிபெயர்ப்பில் உண்மை: புதிய ஏற்பாட்டின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் திருத்தமும் வேறுபாடும் (ஆங்கிலம்).
அநேக மொழிபெயர்ப்பாளர்கள் “நவீன வாசகர்களின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்றவாறு பைபிள் வசனங்களை சுருக்கும் அல்லது விரிவாக்கும்” கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்றும்கூட பெடூன் குறிப்பிட்டார். மறுபட்சத்தில், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளோ முற்றிலும் வித்தியாசப்பட்டது என பெடூன் குறிப்பிட்டார்; காரணம், “புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் பயன்படுத்திய மூல வார்த்தைகளை புதிய உலக மொழிபெயர்ப்பு நேரடியாகவும், கவனமாகவும் மொழிபெயர்த்திருப்பதால் அது மிக துல்லியமாக உள்ளது” என்றார்.
புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் முன்னுரையில் அதன் மொழிபெயர்ப்புக் குழு தெரிவித்திருக்கிறபடி, பரிசுத்த வேதாகமத்தை அதன் மூல மொழிகளிலிருந்து நவீன பாஷைக்கு மொழிபெயர்ப்பது “மிகப் பொறுப்பான வேலை.” அந்தக் குழு மேலும் கூறுவதாவது: “பரிசுத்த வேதாகமத்தின் ஆசிரியரான கடவுளுக்குப் பயந்து அவரை நேசிக்கிறவர்களான இந்த பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள், அவருடைய எண்ணங்களையும் அறிவிப்புகளையும் எந்தளவு திருத்தமாக மொழிபெயர்க்க முடியுமோ அந்தளவு திருத்தமாக மொழிபெயர்க்கும் ஒரு விசேஷப் பொறுப்பு தங்களுக்கு இருப்பதை உணருகிறார்கள்.”
இந்த பைபிள் 1961-ல் முதன்முதலாக பிரசுரிக்கப்பட்டது; இப்போது இந்தப் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், 32 மொழிகளிலும் இரண்டு பிரேய்ல் பதிப்புகளிலும் கிடைக்கிறது. இவை தவிர, புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் அல்லது “புதிய ஏற்பாடு” இன்னும் 18 மொழிகளிலும் ஒரு பிரேய்ல் பதிப்பிலும் கிடைக்கிறது. ஒருவேளை உங்களுடைய சொந்த மொழியிலேயே இந்த “மிகச் சிறந்த” நவீன மொழிபெயர்ப்பு இருந்தால் அதை வைத்து கடவுளுடைய வார்த்தையைப் படிக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.