யெகோவாவின் மனத்தாழ்மை நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது
தாவீது தன் வாழ்க்கையில் அநேக துன்பங்களை எதிர்ப்பட்டார். பொறாமை பிடித்த மாமனாரான சவுல் ராஜாவால் மோசமாக நடத்தப்பட்டார். தாவீதை ஈட்டியினால் குத்திக் கொல்ல மூன்று முறை அவர் முயற்சி செய்தார். எப்படியும் கொலை செய்ய வேண்டும் என்ற வெறியில் பல வருடங்களாக அவரை துரத்திச் சென்றார். இப்படியாக தாவீதை ஓரிடத்தில் தங்கவிடாமல் நாடோடி போல அலையவிட்டார். (1 சாமுவேல் 18:11; 19:10; 26:20) ஆனால் யெகோவா தாவீதுக்கு துணையாக இருந்தார். தாவீதை சவுலின் கையிலிருந்து மட்டுமல்லாமல், பிற எதிரிகளின் கைகளிலிருந்தும் தப்புவித்தார். ஆகவே தாவீதின் மனதிலிருந்து பொங்கி எழுந்த உணர்ச்சிகளை இப்பாடல் வரிகளிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது: ‘யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர் . . . உம்முடைய [யெகோவாவுடைய] ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் [அதாவது, மனத்தாழ்மை] என்னைப் பெரியவனாக்கும்.’ (2 சாமுவேல் 22:2, 36) தாவீது இஸ்ரவேலில் ஓரளவு பிரசித்தி பெற்று விளங்கினார். இதற்கும் யெகோவாவின் மனத்தாழ்மைக்கும் என்ன சம்பந்தம்?
யெகோவாவை மனத்தாழ்மையுள்ளவர் என்று பைபிள் சொல்லும்போது அவரை எந்த விதத்திலும் குறைவுபட்டவர் என்றோ யாருக்கும் கீழ்ப்பட்டவர் என்றோ அர்த்தப்படுத்துவதில்லை. அதற்கு மாறாக, அவருடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு உண்மையாக முயற்சி செய்யும் நபர்களிடம் அதிக பரிவுள்ளவராக இருந்து கருணை காட்டுகிறார் என்று சொல்கிறது. சங்கீதம் 113:6, 7 இவ்வாறு வாசிக்கிறது: “[யெகோவா] வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்.” அவர் “தம்மைத் தாழ்த்துகிறார்” என்றால், “குனிந்து பார்க்கின்றார்” என்று அர்த்தம். (பொது மொழிபெயர்ப்பு) ஆகவே அபூரண மனிதனாக இருந்தாலும் தாழ்மையுள்ளவராய் கடவுளுக்கு ஊழியக்காரராக இருக்க விரும்பிய தாவீது சொல்வதைக் கேட்பதற்கு பரலோகத்திலிருந்து யெகோவா தாமே ‘குனிந்தார்’ அல்லது ‘தம்மையே தாழ்த்தினார்.’ ஆகவே தாவீது நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறார்: “கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்.” (சங்கீதம் 138:6) தாவீதை யெகோவா நடத்திய விதத்திலிருந்து இரக்கம், பொறுமை, பரிவு ஆகிய அனைத்தையும் பார்க்க முடிகிறது. இது அவருடைய சித்தத்தை செய்ய விரும்பும் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறது.
சர்வலோகத்திலேயே மிக உன்னத ஸ்தானத்தில் யெகோவா வீற்றிருந்தாலும் நம் ஒவ்வொருவருடனும் நல்ல உறவை வைத்துக்கொள்ள விரும்புகிறார். எப்பேர்ப்பட்ட கஷ்டமான சூழ்நிலையை எதிர்ப்பட்டாலும் யெகோவா நமக்கு உதவுவார் என்ற நம்பிக்கையை இது நமக்குத் தருகிறது. அவர் நம்மை மறந்துவிடுவார் என்று நாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலருடைய விஷயத்தில் யெகோவாவைப் பற்றி சரியாகவே இவ்வாறு சொல்லப்பட்டது: ‘தாழ்வில் [அவர்களை] நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.’—சங்கீதம் 136:23.
இன்று யெகோவாவின் ஊழியர்களாகிய நமக்கும் தாவீதைப் போலவே வாழ்க்கையில் துன்பங்கள் வரலாம். கடவுளை அறியாதவர்கள் ஒருவேளை நம்மை இழிவாகப் பேசலாம் அல்லது வியாதி நம்மை வாட்டியெடுக்கலாம் அல்லது பாசத்திற்குரியவரை மரணத்தில் இழந்து தவிக்கலாம். நம் நிலைமை என்னவாக இருந்தாலும் நம்முடைய இருதயம் நேர்மையானதாக இருந்தால் நாம் ஜெபத்தில் யெகோவாவை அணுகி இரக்கத்தைக் கேட்கலாம். யெகோவா நம்மை கவனிப்பதற்காகவும் நம் ஜெபங்களை கேட்பதற்காகவும் ‘குனிந்து பார்ப்பார்.’ கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட சங்கீதக்காரன் இவ்வாறு எழுதுகிறார்: “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.” (சங்கீதம் 34:15) யெகோவா காட்டும் மனத்தாழ்மை என்ற இந்த அருமையான குணம் நம்மை அவர் பக்கம் ஈர்க்கவில்லையா?
[பக்கம் 30-ன் படங்கள்]
தாவீதின் ஜெபத்தைக் கேட்டது போலவே நம்முடைய ஜெபத்தையும் கேட்க யெகோவா மனமுள்ளவராக இருக்கிறார்