வேண்டும் வேண்டுமென்ற வேட்கை
“வேண்டும் வேண்டுமென்ற வேட்கை நமக்கு இருக்கும் வரையில், ஒருபோதும் திருப்தி அடைய மாட்டோம்.” —உவர்ல்டுவாட்ச் இன்ஸ்டிட்யூட் ரிப்போர்ட்.
“நமக்கு என்ன வேண்டும்? எல்லாமே வேண்டும். எப்பொழுது வேண்டும்? இப்பொழுதே வேண்டும்.” 1960-களில் கல்லூரி மாணவர்கள் சிலர் மத்தியில் இந்த சுலோகம் பிரபலமாக விளங்கியது. இன்றைக்கு ஒருவேளை இதே வார்த்தைகளைப் பயன்படுத்தாவிட்டாலும், அதன் அடிப்படை கருத்து மாறவே இல்லை. சொல்லப்போனால், வேண்டும் வேண்டுமென்ற வேட்கை நமது சகாப்தத்தில் தனித்தன்மை பெற்று விளங்குவது போல் தோன்றுகிறது.
சொத்து சேர்ப்பதும் பொருட்களை வாங்கிக் குவிப்பதும் அநேகருடைய வாழ்வில் முதலிடம் பிடித்திருக்கிறது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஒருமுறை இவ்வாறு சொன்னார்: “ஒருவர் என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்து அல்ல, ஆனால் என்ன வைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்தே அடையாளம் காணப்படுகிறார்.” வாழ்க்கையில் சொத்து சுகங்களைவிட அதிமுக்கியமானவை ஏதாவது இருக்கின்றனவா? அப்படியானால், அவை என்ன, அவற்றால் என்ன பயன்?