விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு அல்ல
விளையாட்டு என்றால் பிள்ளைகளுக்கு கொள்ளை ஆசை. ஆனால் “அது அற்பமான, பயனற்ற செயல் அல்ல; . . . சுற்றுமுற்றுமுள்ள காரியங்களைப் பற்றிய அறிவு வளர்ச்சிக்கு பெரும்பாலும் அடித்தளமாக அமைவது விளையாட்டுதான்” என வளரும் பிள்ளை என்ற ஆங்கில புத்தகம் விளக்குகிறது. விளையாடுவதன் மூலம் புலன்களை பயன்படுத்தவும், சுற்றுச்சூழலை புரிந்துகொள்ளவும், மற்றவர்களோடு பழகவும் பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள்.
பிள்ளைகளுக்கு நான்கு அல்லது ஐந்து வயது ஆனதும், பெரியவர்களைப் போல் பாவனை செய்து விளையாட ஆரம்பித்துவிடுகிறார்கள். விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பற்றி இயேசு ஒரு சமயம் குறிப்பிட்டார். சகஜமாக ஏற்படுவது போல் அந்தப் பிள்ளைகள் மத்தியிலும் வாக்குவாதம் எழும்பியதாக கூறினார். ஏனென்றால் சில பிள்ளைகள் கல்யாண வீட்டில் ஆடிப்பாடுவது போல் விளையாட விரும்பியதாகவும், மற்ற பிள்ளைகள் சாவு வீட்டில் அழுது புலம்புவது போல் விளையாட விரும்பியதாகவும் அவர் சொன்னார். (மத்தேயு 11:16, 17) இது மாதிரியான விளையாட்டுகள் நிஜ வாழ்க்கை சூழலை பிள்ளைகளின் மனதில் ஆழமாக பதியவைக்க உதவலாம்.
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களில் உள்ள பிள்ளைகள் பைபிள் போதகரையும் மாணாக்கரையும் போல் பாவனை செய்து விளையாடுகின்றனர். அவர்கள் நடத்துவது உண்மையான பைபிள் படிப்பு கிடையாது, எனினும் பைபிள் செய்தியை அறிவிக்க வேண்டுமென்ற எண்ணம் அவர்களுடைய மனதில் தெளிவாக இருப்பதையே இது காட்டுகிறது. இது மிகவும் முக்கியம், ஏனெனில் ஜனங்களை சீஷராக்கி தாம் கற்பித்த யாவையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு போதிக்க வேண்டுமென இயேசு தம்மை பின்பற்றிய அனைவருக்கும் கட்டளையிட்டுள்ளார்.—மத்தேயு 28:19, 20.
பைபிள் படிப்பு நடத்துவது போல், பேச்சு கொடுப்பது போல், அல்லது வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது போல் விளையாட விரும்பும்போது, அந்தப் பிள்ளைகளுடைய பெற்றோர்கள் நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஏனெனில் பிள்ளைகள் இயல்பாகவே தங்களைச் சுற்றியுள்ள பெரியவர்களைப் போலத்தான் பாவனை செய்து விளையாடுகிறார்கள். அவர்கள் “கர்த்தருக்கேற்ற கல்வியிலும் பயிற்சியிலும்” வளர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய பைபிள் சார்ந்த விளையாட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன.—எபேசியர் 6:4, ஈஸி-டு-ரீட் வர்ஷன்.
பிள்ளைகள் உண்மை வணக்கத்தில் ஈடுபட வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். நியாயப்பிரமாணம் வாசிக்கப்படும்போது “பிள்ளைகளும்” அங்கு இருக்க வேண்டுமென அவர் மோசேயிடம் சொன்னார். (உபாகமம் 31:12) உண்மை வணக்கத்தில் தங்களுக்கு பங்கு இருப்பதை உணரும் சிறு பிள்ளைகள் அதைத் தங்களுடைய விளையாட்டுகளில் வெளிக்காட்டுகிறார்கள். கடவுளுடைய ஊழியக்காரரைப் போல் பாவனை செய்து விளையாடுகிற பிள்ளை, அவ்வாறு ஆவதற்கான பாதையில் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறது.