‘பாத்திரமானவன் யாரென்று தேடுங்கள்’
முதல் நூற்றாண்டில் தமஸ்கு பட்டணம் செல்வ செழிப்புடன் விளங்கியது. நாலா புறமும் பழத்தோட்டங்கள் சூழ்ந்திருந்ததால் கீழை நாடுகளிலிருந்து வந்த வணிக கூட்டத்தாருக்கு இது பாலைவனச் சோலை போல் இருந்தது. இயேசு கிறிஸ்து இறந்த கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே தமஸ்குவில் ஒரு கிறிஸ்தவ சபை உருவாகியது. பொ.ச. 33-ல் எருசலேமில் நடந்த பெந்தெகொஸ்தே பண்டிகையின்போது இயேசுவின் சீஷர்களாக ஆன யூதர்களில் சிலர் இந்த சபையைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம். (அப்போஸ்தலர் 2:5, 41) ஸ்தேவான் கல்லெறியுண்டு கொல்லப்பட்டதற்குப் பிறகு துன்புறுத்தல் தலைதூக்கியபோது யூதேயாவில் வசித்துவந்த சீஷர்களில் சிலர் தமஸ்குவில் குடியேறியிருக்கலாம்.—அப்போஸ்தலர் 8:1.
தமஸ்குவைச் சேர்ந்த அனனியா என்ற கிறிஸ்தவர் சுமார் பொ.ச. 34-ல் ஓர் அசாதாரண நியமிப்பைப் பெற்றார். “நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப் போய், யூதாவின் வீட்டிலே தர்சு பட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான்” என கர்த்தர் அவரிடம் சொன்னார்.—அப்போஸ்தலர் 9:11.
நேர்த்தெருவு என்றழைக்கப்பட்ட அந்தத் தெரு சுமார் 1.5 கிலோமீட்டர் நீளமுள்ளது, அது தமஸ்குவின் மையப்பகுதி வழியாக சென்றது. பண்டைய காலத்தில் அத்தெரு எப்படி இருந்திருக்கும் என்பதை இங்கே கொடுக்கப்பட்டுள்ள 19-ம் நூற்றாண்டு செதுக்கோவியத்தைப் பார்த்து ஓரளவு அறிந்து கொள்ளலாம். அதன் வடிவமைப்பு காரணமாக, யூதாவின் வீட்டைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு அனனியா கொஞ்சம் சிரமப்பட்டிருக்கலாம் என்பது தெரிகிறது. இருந்தாலும், ஒருவழியாக அதை கண்டுபிடித்துவிட்டார். விளைவு? சவுல் என்பவர் அப்போஸ்தலன் பவுலாக—நற்செய்தியை வைராக்கியத்துடன் பிரசங்கிப்பவராக—ஆனார்.—அப்போஸ்தலர் 9:12-19.
இயேசு தமது சீஷர்களை அனுப்பியபோது நற்செய்திக்கு ‘பாத்திரமானவன் யாரென்று தேடும்படி’ அவர்களிடம் சொன்னார். (மத்தேயு 10:11) சவுலைக் கண்டுபிடிப்பதற்கு அனனியா சொல்லர்த்தமாகவே தேடினார் என்பதில் சந்தேகமில்லை. அனனியாவைப் போலவே, இன்று யெகோவாவின் சாட்சிகளும் பாத்திரவான்களைத் தேடுவதில் சந்தோஷமாக ஈடுபடுகிறார்கள்; ராஜ்யத்தின் நற்செய்தியை ஜனங்கள் ஏற்றுக்கொள்ளும்போது பெருமகிழ்ச்சியும் அடைகிறார்கள். அவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்படும் எந்த முயற்சியும் பயனுள்ளதே.—1 கொரிந்தியர் 15:58.
[பக்கம் 32-ன் படம்]
தற்கால “நேர்த்தெருவு என்னப்பட்ட தெரு”
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
La Tierra Santa, Volume II, 1830 என்ற நூலிலிருந்து