நல்ல ஆலோசனை தேவையா?
நல்லது கெட்டது எதுவென்று கண்டறியும் திறமை தங்களுக்கு இருப்பதாக இன்று பலர் நினைக்கிறார்கள்; தங்களுக்கு விருப்பமானதை எல்லாம் செய்ய உரிமை இருப்பதாகவும் நினைக்கிறார்கள். சந்தோஷத்தையும் திருப்தியையும் தருகிற எதைச் செய்தாலும் பரவாயில்லை என இன்னும் சிலர் சொல்கிறார்கள். திருமணமும் குடும்ப வாழ்க்கையும் மனித சமுதாயத்தின் அஸ்திவாரமாக ஆண்டாண்டு காலமாய் கருதப்பட்டு வந்தன; அவை இப்போது படுமோசமாக ஆட்டங்காண்கின்றன.—ஆதியாகமம் 3:5.
மெக்சிகோவில் வாழும் வெரோனிக்காவைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.a அவர் இவ்வாறு தெரிவிக்கிறார்: “எங்களுடைய 15-வது கல்யாண நாளுக்கு சற்று முன்பு, என்னுடைய கணவர் மற்றொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருப்பதாக என்னிடம் சொன்னார். அந்தப் பெண் சின்னப் பெண்ணாக இருந்ததாலும், தன்னை ரொம்ப சந்தோஷமாக வைத்துக்கொண்டதாலும் அவளை தன்னால் விடமுடியாது என்றும் அவர் சொன்னார். உயிருக்கு உயிராய் நான் நேசித்த என் நண்பர் இனிமேல் எனக்கு ஆதரவாக இருக்க மாட்டார் என நினைத்து நான் அதிர்ச்சியில் அப்படியே உறைந்துவிட்டேன். நமக்கு ரொம்ப வேண்டியவர்களின் இறப்புதான் இருப்பதிலேயே தாங்க முடியாத வேதனை என்று முன்பெல்லாம் நான் நினைத்ததுண்டு. ஆனால் விபச்சாரம் அதைவிட தாங்க முடியாத வேதனையாகிவிட்டது; ஏனென்றால், நெஞ்சார நேசித்த ஒருவரை நான் இழந்ததோடு, அவரால் தொடர்ந்து நோகடிக்கப்பட்டேன்.”
அடுத்ததாக மற்றொரு நபரை கவனியுங்கள். இவருக்கு 22 வயது. ஏற்கெனவே விவாகரத்து ஆகியிருக்கும் இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், அப்பா என்ற பொறுப்பை ஏற்க இவருக்கு விருப்பமில்லை. தன்னையும் மகனையும் தன்னுடைய அம்மா கவனித்துக்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறார். தான் சொல்கிறபடி அம்மா கேட்கவில்லை என்றால், கோபாவேசத்தில் தாறுமாறாக பேசிவிடுகிறார், முரட்டாட்டம் பண்ணுகிற சிறுபிள்ளை போலவே நடந்துகொள்கிறார். இப்படி எரிச்சலூட்டும் விதமாக நடந்துகொள்வதைப் பார்த்து செய்வதறியாது அம்மா விழிக்கிறார்.
இவையெல்லாம் எங்கேயோ எப்போதோ நடக்கும் விஷயங்கள் அல்ல. சட்டப்படி பிரிந்திருப்பதும் விவாகரத்து செய்துகொள்வதும் இப்போதெல்லாம் சர்வ சகஜமாகிவிட்டன. தங்களுடைய அம்மாவோ அப்பாவோ வீட்டை விட்டு வெளியேறி புதுக் குடித்தனம் நடத்த ஆரம்பிப்பதை அநேக பிள்ளைகள் பார்க்கிறார்கள். சில இளைஞருக்கோ தங்களுடைய அப்பா, அம்மா உட்பட மற்றவர்களுக்கு மரியாதை காட்ட வேண்டுமென்ற எண்ணம் அறவே இல்லாமல் போய்விட்டது; முற்காலத்தில் எல்லாம் கொஞ்சமும் நினைத்துப்பார்க்க முடியாததாக இருந்த நடத்தையில் அவர்கள் இப்போது ஈடுபடுகிறார்கள். ஒரு ‘ட்ரையல்’ போல் செக்ஸில் ஈடுபடுவது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது, இளைஞர் அடிதடியில் ஈடுபடுவது, ஆசிரியர்களை மாணவர்கள் அல்லது பெற்றோரை பிள்ளைகள் கொலை செய்வது ஆகியவை பல நாடுகளிலும் ரொம்பவே சர்வசாதாரணமாகிவிட்டன. அதோடு, இன்றைய உலகில் பிள்ளைகளை வளர்ப்பதிலும் திருமணத்திலும் மட்டுமல்ல, இன்னும் பல துறைகளிலும் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
இத்தகைய மாற்றங்களை பார்க்கையில், சமுதாயத்திற்கு என்ன ஏற்பட்டுவிட்டது என நாம் யோசிக்கக் கூடும். நல்லது கெட்டது எதுவென்று கண்டறியும் திறமை மக்களிடம் உண்மையிலேயே இருந்தால், ஏன் இத்தனை அநேக பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன? நல்ல ஆலோசனைக்கான தேவை இருக்கிறதா? இப்படிப்பட்ட பயனுள்ள ஆலோசனையை தருவதற்கு நம்பத்தகுந்த ஒருவர் இருக்கிறாரா? கடவுள் மீதும் அவருடைய எழுதப்பட்ட வார்த்தையின் மீதும் நம்பிக்கை இருப்பதாக அநேகர் சொன்னாலும், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் தீர்மானம் எடுப்பதாக தெரிவதில்லை. ஆனால், கடவுளுடைய ஆலோசனையை நாடி அதைப் பெற்றுக்கொள்கையில் நாம் என்ன நன்மைகளை அடையலாம்? அடுத்த கட்டுரை என்ன சொல்கிறது என்று பார்க்கலாமே!
[அடிக்குறிப்பு]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.