கடவுளுடைய வார்த்தையிலிருந்து பலம் பெறுகிறீர்களா?
சோதனைகளை எதிர்ப்படும்போது அவற்றை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்? சாத்தானிடமிருந்து வந்த சோதனைகளை சமாளிக்க பொருத்தமான ஒரு வேதவசனத்தை நினைவுபடுத்திப் பார்த்தது இயேசுவுக்கு உதவியது. (மத்தேயு 4:1-11) அதைப் போலவே தாவீது ராஜாவுக்கு தனிப்பட்ட விதத்தில் சோதனைகள் வந்தபோது, அவர் கடவுளுடைய வார்த்தையால் பலப்படுத்தப்பட்டார். “என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது” என அவர் சொன்னார்.—சங்கீதம் 94:19.
இந்த விதத்தில், பிடித்தமான ஒரு வேதவசனத்தை நினைவுபடுத்திப் பார்ப்பது நமக்கு ஆறுதலளிக்கலாம் அல்லது சோதனைகளை எதிர்ப்படும்போது நமக்கு பலமளிக்கலாம். உதாரணத்திற்கு ரெக்ஸ் என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள்; அவருக்கு இப்போது 89 வயது; 1931 முதற்கொண்டு முழுநேர ஊழியராக இருக்கிறார். என்றாலும், அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? “ஊழியத்தில் விசேஷ நியமிப்புகள் எனக்கு கொடுக்கப்பட்ட போதெல்லாம் அதை செய்ய எனக்கு தகுதியில்லை என்பது போலவே உணர்ந்தேன்” என்கிறார். இதை அவர் எப்படி சமாளித்தார்? “எனக்கு மிகவும் பிடித்த வசனமான நீதிமொழிகள் 3:5-ஐ நினைவுபடுத்திப் பார்த்தேன்; அது இவ்வாறு சொல்கிறது: ‘உன் சுய புத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிரு.’ இந்த வசனத்தை ஞாபகப்படுத்திப் பார்த்ததும், அதை என் வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகித்ததும் என்னுடைய நியமிப்புகளை வெற்றிகரமாக கையாளுவதற்கு உதவின.”
சிறுவர், சிறுமியரும்கூட தங்களுக்குப் பிடித்த ஒரு வசனத்தை மனதில் வைத்திருப்பதால் பயனடைகிறார்கள். மத்தேயு 24:14 தான் தனக்குப் பிடித்தமான வசனம் என ஆறு வயது ஜாக் சொல்கிறான். பெற்றோருடன் ஊழியத்திற்கு செல்ல இந்த வசனம் அவனை உந்துவிக்கிறதாம். “ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னோட அம்மா, அப்பா, அக்காவோட சாட்சி கொடுக்கப் போறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்கிறான் அவன்.
இயேசுவைப் போல, விசுவாசத்திற்காக நீங்கள் நேரடி சோதனைகளை சில நேரங்களில் எதிர்ப்படுகிறீர்களா? அப்படியானால் பிலிப்பியர் 4:13 உங்களுக்கு விருப்பமான வசனங்களில் ஒன்றாக ஆகலாம். தாவீது ராஜாவைப் போல, ‘உள்ளத்தின் விசாரங்களால்’ நீங்கள் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் அதை சமாளிக்க பிலிப்பியர் 4:6, 7-ஐ நினைவுபடுத்திப் பார்ப்பது உங்களுக்கு உதவலாம். கடவுளுக்கு நீங்கள் செய்யும் ஊழியம் பலன் தராததை நினைத்து சில சமயம் கவலைப்படுகிறீர்களா? அப்படியானால், 1 கொரிந்தியர் 15:58-ஐ ஞாபகப்படுத்திப் பார்ப்பது உங்களை பலப்படுத்தும்.
பொருத்தமான வேதவசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம், கடவுளுடைய வார்த்தை நம் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்த நாம் அனுமதிக்கிறோம். (எபிரெயர் 4:12) அத்தகைய விருப்பமான வசனங்கள் நமக்கு பலத்தையும் தருகின்றன, ஆறுதலையும் அளிக்கின்றன.—ரோமர் 15:4.