கடவுளுடைய ஊழியர்கள் விருட்சங்களைப் போன்றவர்கள் என்னென்ன விதங்களில்?
“அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” (சங்கீதம் 1:1-3) பைபிளை வாசிப்பதில் மகிழ்ச்சி கண்டு, அதன் நியமங்களை தன் வாழ்க்கையில் பின்பற்றுகிற ஒரு நபரைப் பற்றித்தான் சங்கீதக்காரன் அவ்வாறு குறிப்பிட்டார். இந்த ஒப்புமை ஏன் பொருத்தமானது?
சில மரங்கள் நீண்ட ஆயுசுள்ளவை. உதாரணமாக, மத்தியதரைக் கடல் பகுதியிலுள்ள சில ஒலிவ மரங்களின் வயது ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் வரை இருக்குமாம். அதுபோலவே, மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள பேயபாப் என்ற மரங்கள் பல நூற்றாண்டுகளுக்கு வாழ்கின்றன; கலிபோர்னியாவிலுள்ள ப்ரிஸில்கோன் பைன் மரம் ஒன்று சுமார் 4,600 வருடங்களாக வாழ்ந்து வருவதாய் நம்பப்படுகிறது. ஒரு காட்டில் முதிர்ந்த மரங்கள் இருப்பது அந்த சுற்றுச்சூழலுக்கு பெரும்பாலும் நன்மை பயக்கிறது. உதாரணமாக, நெடுநெடுவென்று உயர்ந்து நிற்கும் மரங்கள் இளஞ்செடிகளுக்கு நிழல் தந்து பாதுகாக்கின்றன; அதுமட்டுமல்ல, அவற்றிலிருந்து விழும் இலைகள் நிலத்திற்கு வளமூட்டுகின்றன.
பொதுவாக உலகின் மிக உயரமான மரங்கள் ஒருசேர காடுகளில் வளருகின்றன; அங்குள்ள தனி மரங்கள் ஒன்றுக்கொன்று ஆதரவாய் நிற்கின்றன. புல்வெளியில் ஏகாந்தமாய் நிற்கும் மரத்தைக் காட்டிலும், ஒரே இடத்தில் கூட்டமாக இருக்கும் மரங்கள்தான் புயல் காற்றை சமாளித்து எதிர்த்து நிற்க முடியும்; ஏன்? அவற்றின் வேர்கள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருப்பதே அதற்குக் காரணம். அதோடு, நீண்ட வேர்கள் மரத்திற்கு போதியளவு நீரையும் ஊட்டச்சத்தையும் நிலத்திலிருந்து பெற்றுத் தருகின்றன. சில மரங்களுடைய வேர்கள், அந்த மரத்தின் உயரத்தைவிட அதிக ஆழத்திற்கு ஊடுருவியிருக்கலாம்; அல்லது அந்த வேர்கள் மரத்திலுள்ள இலைகள் எவ்வளவு தூரத்திற்கு பரந்துவிரிந்து இருக்கின்றனவோ அதைவிட அதிக தூரத்திற்கு கிடைநிலையில் பரவியிருக்கலாம்.
கிறிஸ்தவர்கள் “[கிறிஸ்துவுக்குள்] வேர் கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு . . . விசுவாசத்தில் உறுதிப்பட்”டவர்களாகவும் இருக்க வேண்டுமென அப்போஸ்தலன் பவுல் விளக்கியபோது, அவர் ஒருவேளை மரம் ஒன்றை மனதில் வைத்து அதைக் குறிப்பிட்டிருக்கலாம். (கொலோசெயர் 2:6, 7) உண்மைதான், ஒரு மரம் தன் திடமான வேர்களின் உதவியால் நிலத்தை உறுதியாக பற்றியிருப்பதைப் போல கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை திடமாக பற்றியிருந்தால்தான் விசுவாசத்திலே உறுதியாக நிலைத்து நிற்க முடியும்.—1 பேதுரு 2:21.
வேறு எந்த வழிகளில் கடவுளுடைய ஊழியர்கள் மரங்களுக்கு ஒப்பிட்டுப் பேசப்படுகிறார்கள்? ஒரு தோப்பிலுள்ள மரங்கள் அடுத்தடுத்துள்ள மரங்களிடமிருந்து ஆதரவை பெற்றுக்கொள்வதைப் போல, கிறிஸ்தவ சபையோடு நெருங்கியிருக்கிற எல்லாரும் சக வணக்கத்தாரிடமிருந்து ஆதரவை பெற்றுக்கொள்கிறார்கள். (கலாத்தியர் 6:2) விசுவாசமிக்க, முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்களுக்கு ஆழமான ஆவிக்குரிய வேர்கள் இருப்பதால், புதியவர்கள் விசுவாசத்தில் உறுதியோடு நிலைத்திருக்க—புயல் போன்ற எதிர்ப்பின் மத்தியிலும் சமாளித்து உறுதியோடு நிலைத்திருக்க—அவர்களுக்கு உதவுகிறார்கள். (ரோமர் 1:10, 11) தங்களைவிட அனுபவமிக்க கடவுளுடைய ஊழியர்களின் ‘நிழலில்’ புதிய கிறிஸ்தவர்கள் பாதுகாப்பை உணர்ந்தவர்களாய் நன்கு செழித்து வளர முடியும். (ரோமர் 15:1) அதுமட்டுமல்ல, உலகளாவிய கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர் அனைவருமே, ‘நீதியின் பெரிய விருட்சங்களான’ அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரிடமிருந்து வரும் பலமூட்டுகிற ஆவிக்குரிய போஷாக்கினால் இன்று நன்மையடைந்து வருகிறார்கள்.—ஏசாயா 61:3, NW.
“விருட்சத்தின் நாட்களைப் போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்” என்று ஏசாயா 65:22-ல் கடவுள் வாக்குறுதி தந்திருக்கிறார்; அதன் நிறைவேற்றத்தை அவருடைய ஊழியர்கள் எல்லாரும் அனுபவிக்கப் போவதை நினைக்கும்போது எவ்வளவாய் மெய்சிலிர்த்துப் போகிறோம்!
[பக்கம் 28-ன் படத்திற்கான நன்றி]
Godo-Foto