‘கைகளால் கட்டப்பட்ட கோவில்களில் கடவுள் வாசம் பண்ணுகிறதில்லை’
அதீனாள் கோவில்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் நன்றாக அறிந்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் அவர் மிஷனரி பயணம் செய்த அநேக நகரங்களில் இந்தக் கோவில்கள் இருந்தன. அதீனாள் தேவதை போருக்கும் ஞானத்திற்கும் மட்டுமல்ல, “கைவேலைப்பாடுகளுக்கும் சமாதான காலங்களில் செய்யப்படும் திறமைமிக்க எந்த தொழில்களுக்கும்” தேவதையாக புகழப்பட்டாள் என தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது.
அதீனாள் கோவிலில் மிகவும் புகழ்வாய்ந்தது பார்த்தினான் கோவில், இது அந்த தேவதையின் பெயரால் அழைக்கப்பட்ட ஆதன்ஸில் கட்டப்பட்டது. இது பூர்வ காலத்து மிகப் பெரிய கோவில்களில் ஒன்றாக கருதப்பட்டது. பொன்னினாலும் தந்தத்தினாலும் செய்யப்பட்ட 12 மீட்டர் உயரமுடைய அதீனாள் சிலை ஒன்று பார்த்தினானில் வைக்கப்பட்டிருந்தது. ஆதன்ஸுக்கு பவுல் விஜயம் செய்த சமயத்தில், இந்த வெண் பளிங்கு கோவில் ஏற்கெனவே சுமார் 500 ஆண்டுகளாக அந்நகரத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக கம்பீரமாய் வீற்றிருந்தது.
பார்த்தினானுக்கு அருகே இருக்கையில், கைகளால் கட்டப்பட்ட கோவில்களில் வாசம்பண்ணாத கடவுளைப் பற்றி ஆதன்ஸை சேர்ந்த ஒரு கூட்டத்தாரிடம் பவுல் பிரசங்கித்தார். (அப்போஸ்தலர் 17:23, 24) தாங்கள் கேள்விப்படாத அரூபமான கடவுளைவிட அதீனாள் கோவில்களின் கம்பீரமோ அவளுடைய சிலைகளின் அழகோ அவர்களில் சிலரை வசீகரித்து, அவளே மேலானவள் என நினைக்க வைத்திருக்கலாம். ஆனால், பவுல் சுட்டிக் காட்டியபடி, மனிதரைப் படைத்தவர் ‘மனுஷர் . . . உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு ஒப்பாயிருப்பாரென்று’ கற்பனை செய்ய முடியாது.—அப்போஸ்தலர் 17:29.
பல தேவர்களும் அதீனாளைப் போன்ற தேவதைகளும் தோன்றி மறைந்திருக்கின்றன; கோவில்களும் சிலைகளுமே இவர்களுக்கு மகிமை சேர்த்தன. பார்த்தினானில் வைக்கப்பட்டிருந்த அதீனாள் சிலை பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டில் காணாமல் போனது. அவளுடைய கோவில்களில் சிலவற்றின் இடிபாடுகளே இன்றைக்கு எஞ்சியுள்ளன. ஞானத்திற்கும் வழிநடத்துதலுக்கும் இன்றைக்கு யார் அதீனாளை நோக்கியிருக்கிறார்கள்?
ஆனால் எந்த மனிதனும் பார்த்திராத ‘நித்திய தேவனாகிய’ யெகோவா எவ்வளவு வித்தியாசமானவர். (ரோமர் 16:26, NW; 1 யோவான் 4:12) கோராகுவின் புத்திரர்கள் இவ்வாறு எழுதினார்கள்: ‘இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; . . . நம்மை வழிநடத்துவார்.’ (சங்கீதம் 48:14) யெகோவா தேவனுடைய வார்த்தையாகிய பைபிளைப் படித்து அதிலுள்ள அறிவுரையை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதே, அவருடைய வழிநடத்துதலிலிருந்து நன்மையடைய ஒரு வழியாகும்.