கடவுளுக்கு நம் மீது அக்கறை இருக்கிறதா?
குடும்ப பிரச்சினைகளால், நோயால், வேலைப் பளுவால் அல்லது பெரும் பொறுப்புகளால் உணர்ச்சி ரீதியில் அன்றாடம் போராடுகிறீர்களா? பெரும்பாலோருக்கு வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். அநீதி, குற்றச்செயல், வன்முறை போன்றவற்றால் இன்று பாதிக்கப்படாதவர்கள் யார்? ‘சர்வ சிருஷ்டியும் இது வரைக்கும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது’ என்ற பைபிள் வார்த்தைகளுக்கு இன்றைய நிலைமைகள் துல்லியமாக பொருந்துகின்றன. (ரோமர் 8:22) ‘கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா? அவர் நமக்கு உதவி செய்வாரா?’ என்று அநேகர் கேட்பதில் ஆச்சரியமில்லை.
கடவுளிடம் ஞானியாகிய சாலொமோன் ராஜா இவ்வாறு ஜெபம் செய்தார்: “நீர் ஒருவரே எல்லா மானிடரின் உள்ளங்களையும் அறிபவர்!” கடவுள் நம்மை அறிந்திருப்பது மட்டுமல்லாமல், தனிப்பட்ட நபர்களாக நம்மீது அக்கறையுள்ளவராகவும் இருக்கிறார் என்பதை சாலொமோன் நம்பினார். “தன் தன் கஷ்டத்தையும் தன் தன் வேதனையையும்” (NW) தெரியப்படுத்துகிற தேவ பயமுள்ள ஒவ்வொருவருடைய ஜெபத்தையும் ‘பரலோகத்திலிருந்து கேட்டு’ பதிலளிக்கும்படி கடவுளிடம் விண்ணப்பம் செய்தார்.—2 நாளாகமம் 6:29, 30; பொது மொழிபெயர்ப்பு.
இன்றும் யெகோவா தேவன் நம்மைப் பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறார், ஜெபத்தில் தம்மை நோக்கி கூப்பிடும்படி அழைக்கிறார். (சங்கீதம் 50:15) அவருடைய சித்தத்திற்கு இசைவாக ஏறெடுக்கப்படும் உள்ளப்பூர்வமான ஜெபங்களுக்கு பதிலளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். (சங்கீதம் 55:16, 22; லூக்கா 11:5-13; 2 கொரிந்தியர் 4:7) ஆம், ‘எந்தவொரு மனிதரோ தம் மக்கள் அனைவருமோ செய்யும் எல்லா வேண்டுதல்களையும், எழுப்பும் எல்லா விண்ணப்பங்களையும்’ யெகோவா கேட்கிறார். ஆகவே, கடவுள் மீது நம்பிக்கை வைத்து, உதவிக்காக ஜெபித்து, அவரிடம் நெருங்கி வந்தால், நாம் அவருடைய அன்பான அக்கறையையும் வழிநடத்துதலையும் ருசிக்கலாம். (நீதிமொழிகள் 3:5, 6) பைபிள் எழுத்தாளர் யாக்கோபு இவ்வாறு நமக்கு உறுதியளிக்கிறார்: ‘கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.’—யாக்கோபு 4:8, NW.