வாக்குறுதிகள் மெய்யாகும் காலம்
சரித்திரம் முழுவதும் எத்தனை எத்தனையோ வாக்குறுதிகள் காற்றோடு போயிருக்கின்றன. தேசங்கள் ஆக்கிரமிப்பு தடை ஒப்பந்தங்களில் முறைப்படி கையெழுத்திட்டும் அவற்றை அடிக்கடி மீறியிருக்கின்றன; இதனால் பயங்கரமான போர்கள் நடந்திருக்கின்றன. “அரசாங்கங்கள் கட்டாயத்தின் பேரில் மட்டுமே அல்லது சுயபிரயோஜனத்திற்காக மட்டுமே வாக்குறுதிகளை காப்பாற்றுகின்றன” என நெப்போலியன் ஒருமுறை குறிப்பிட்டார்.
தனிநபர்கள் வாக்குறுதிகளை காப்பாற்றுகிறார்களா? ஒருவர் வாக்குத் தவறும்போது எத்தனை ஏமாற்றமாக இருக்கிறது! அதுவும் நமக்கு நன்கு பழக்கமானவரும், நம் நம்பிக்கைக்கு பாத்திரமானவரும் அப்படி செய்யும்போது மனம் சுக்குநூறாகலாம். சொன்ன சொல்லை காப்பாற்றுவதற்கு சிலருக்கு சக்தி இருப்பதில்லை அல்லது விருப்பம் இருப்பதில்லை.
மனிதர்களுடைய வாக்குறுதிகளுக்கும் கடவுளுடைய வாக்குறுதிகளுக்கும் ஏணி வைத்தாலும் எட்ட முடியாது! கடவுளுடைய வாக்குறுதிகள் நூற்றுக்கு நூறு நம்பகமானவை. யெகோவா தேவன் கொடுத்திருக்கும் எந்த வாக்கிற்கும் உத்தரவாதம் உண்டு. அது நிச்சயம் நிறைவேறும். ஒருகாலும் பொய்த்துப்போகாத தமது வாக்கைப் பற்றி ஏசாயா 55:11-ல் (பொது மொழிபெயர்ப்பு) கடவுள் இப்படி சொல்கிறார்: “அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.”
ஆகவே பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கடவுளுடைய வாக்குறுதிகளை நாம் எப்படி கருத வேண்டும்? அவற்றை நாம் முழுக்க முழுக்க நம்பலாம். அப்போஸ்தலன் யோவான் எழுதிய இந்த வாக்குறுதியை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:3, 4) இயேசு சொன்ன பின்வரும் வார்த்தைகளைக் கேட்டு நீங்கள் நடந்தால் அப்படிப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.”—யோவான் 17:3.