ஏழைகளுக்கு உண்மையான உதவி
கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது ஏழைகளுக்கு உதவி செய்வதில் உள்ளப்பூர்வமான அக்கறை காட்டினார். இயேசுவின் ஊழியத்தைப் பற்றி கண்கண்ட சாட்சி ஒருவர் இவ்வாறு கூறினார்: “குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.” (மத்தேயு 11:5) ஆனால் இன்றுள்ள கோடிக்கணக்கான ஏழைகளைப் பற்றியென்ன? அவர்களுக்கு ஏதாவது சந்தோஷமான செய்தி இருக்கிறதா? ஆம், நம்பிக்கையின் செய்தி ஒன்று இருக்கிறது!
இன்று பொதுவாக ஏழைகளை இந்த உலகம் கண்டுகொள்வதில்லை, அல்லது நினைக்க மறந்துவிடுகிறது. ஆனால் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் பின்வரும் வாக்குறுதியைத் தருகிறது: “எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.” (சங்கீதம் 9:18) ஆறுதலூட்டும் இந்த வார்த்தைகள் உண்மையான அரசாங்கமாகிய கடவுளுடைய பரலோக ராஜ்யம் மனித ஆட்சி அனைத்தையும் மாற்றீடு செய்துவிடும் சமயத்தில் உயிர்பெறும். (தானியேல் 2:44) இந்தப் பரலோக அரசாங்கத்தின் அரசராகிய இயேசு, ‘பலவீனனுக்கும் எளியவனுக்கும் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.’—சங்கீதம் 72:13, 14.
இந்தப் பூமியை கிறிஸ்து ஆளுகை செய்யும்போது வாழ்க்கைச் சூழல் எப்படி இருக்கும்? கிறிஸ்துவின் உலகளாவிய ஆட்சியில் வாழும் ஜனங்கள் தங்களுடைய கைகளின் பலனை மகிழ்ந்து அனுபவிப்பார்கள். மீகா 4:3, 4-ல் பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.” நோயினாலும் மரணத்தினாலும் உண்டாகும் வேதனைகளையும் கடவுளுடைய ராஜ்யம் தீர்க்கும். (ஏசாயா 25:8) அது எவ்வளவு வித்தியாசப்பட்ட உலகமாக இருக்கும்! பைபிள் தரும் இந்த வாக்குறுதிகளை நாம் நம்பலாம், ஏனென்றால் இவை கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டுள்ளன.
நம்பிக்கையின் செய்தியை பைபிள் அளிப்பதோடுகூட அன்றாட பிரச்சினைகளை சமாளிப்பதற்கு, உதாரணமாக ஏழையாக இருப்பதால் ஏற்படும் சுயமரியாதை குறைவை மேற்கொள்வது போன்ற பிரச்சினைகளை சமாளிப்பதற்கு நமக்கு உதவுகிறது. செல்வச் செழிப்புமிக்க ஒரு கிறிஸ்தவரைப் போலவே ஏழ்மையில் வாடும் ஒரு கிறிஸ்தவரும் கடவுளுடைய பார்வையில் அருமையானவர் என்பதை அவர் தன் பைபிள் படிப்பிலிருந்து அறிந்துகொள்கிறார். கடவுள் ‘ஏழையைப் பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணுவதில்லை, . . . இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே’ என பைபிள் புத்தகமாகிய யோபு புத்தகம் கூறுகிறது. (யோபு 34:19) இருவரையும் சமமாகவே கடவுள் நேசிக்கிறார்.—அப்போஸ்தலர் 10:34, 35.